மொஹான் பீரிஸ், நவாஸ் உள்ளிட்ட மூன்று பேர் விடுவித்து விடுதலை; குற்றப் பத்திரிகையை வாபஸ் பெற்ற் இலஞ்ச ஊழல்  விசாரணை ஆணைக் குழு  

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர் ஏ.எச்.எம்.டி நவாஸ் உள்ளிட்ட பிரதிவாதிகளை விடுவித்து விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகல கடந்த மார்ச் 30 ஆம் திகதி உத்தரவிட்டார்.

முன்னாள் சட்டமா அதிபரும் பிரதம நீதியரசருமான மொஹான் பீரிஸ், முன்னாள் பிரதி சொலிசிட்டர் ஜெனரலும் தற்போதைய நீதியரசருமான திலீப் நவாஸ் மின்சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான எம்.எம்.சி. பெர்டினாண்டஸ் ஆகிய  மூவருக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தாம் தொடர்ந்துள்ள வழக்கின் குற்றப்பத்திரிகையை  இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவினர் மீளப் பெற்றதை அடுத்தே அவர்களை அவ் வழக்கிலிருந்து விடுவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.

குறித்த குற்றப்பத்திரிகையில் தொழில்நுட்ப ரீதியிலான குழப்பங்கள்  காணப்படுவதால் குற்றவியல் நடை முறை சட்டக் கோவையின் 189 ஆவது அத்தியாயத்துக்கு அமைய அவ்வாறு குற்றப் பத்திரிகையை மீளப் பெறுவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் உதவிப் பணிப்பாளர் சட்டத்தரணி சுபாஷினி சிரிவர்தன மன்றுக்கு அறிவித்தார். இதனையடுத்தே  சந்தேக நபர்களை விடுவித்து நீதிவான் உத்தரவிட்டார்.

பின்னணி:

கடந்த 2010 டிசம்பர் முதலாம் திகதிக்கும் 30 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் பணிப்பாளர்கள், சில முன்னணி ஊழியர்களுக்கு எதிராக ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் ஆராய சிறிபால ஜயலத் குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அக்குழுவின் அறிக்கையில் அம்மோசடிகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில்  குறித்த அறிக்கையின் பிரகாரம் குற்றவியல் வழக்கொன்று தாக்கல் செய்ய முடியாது என தீர்மானித்து அதனை தமது கருத்தாக கடிதம் மூலம் முதலாம் சந்தேக நபர் மூன்றாம் சந்தேக நபருக்கு கொடுத்ததன் ஊடாக   இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ்  துஷ்பிரயோகம் எனும் குற்றத்தை புரிந்துள்ளதாக மூவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள்:

முன்னாள் சட்டமா அதிபரும் பிரதம நீதியரசருமான மொஹான் பீரிஸ், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரலாக செயற்பட்ட, தற்போதைய உயர் நீதிமன்ற நீதியரசர் திலீப்  நவாஸ் மற்றும் மின்சக்தி அமைச்சின் முன்னாள் செயலாளரான எம்.எம்.சி.பெர்டினாண்டோ ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டு கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் வழக்கு தொடுக்கப்பட்டது. கடந்த 2018 ஜனவரி 18 ஆம் திகதி இந்த வழக்கு அப்போதைய கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது.

குற்றச்சாட்டுக்கள்:

அதன்படி குறித்த மூவருக்கும் எதிராக தண்டனை சட்டக் கோவையின் 113 (அ), 102 ஆகிய அத்தியாயங்களுடன் இணைத்து பார்க்கப்படும் இலஞ்ச ஊழல் சட்டத்தின் 70 ஆவது அத்தியாயத்தின் கீழ், மோசடி, துஷ்பிரயோகம், அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் சதித் திட்டம் தீட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றின் தடை:

இந் நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டமைக்கு எதிராக  அப்போதைய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் யூ.ஆர். டி. சில்வா உள்ளிட்டோர் உயர் நீதிமன்றில் ரிட் மனுவொன்றினை தாக்கல் செய்தனர். எஸ். சி.22/2018 எனும் அந்த மனுவை பரிசீலித்த அப்போதைய நீதியரசர் ஈவா வணசுந்தர தலைமையிலான  நீதியரசர் நலின் பெரேரா ( பின்னர் பிரதம நீதியரசரானவர்), நீதியரசர் பிரசன்ன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம்  நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கொண்டு செல்வதைத் தடுத்து தடை உத்தரவு பிறப்பித்தது. கடந்த 2018 பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 நீதியரசர் ஈவாவின் பக்கச்சார்ப்புத் தன்மையும் ரிட் மனுவும்::

இலஞ்ச ஊழல் சட்டத்தின் பிரகாரம்  நீதியரசர்  ஏ.எச்.எம். நவாஸ், முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுனரால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் உள்ள வழக்கினை விசாரணைக்கு எடுப்பதை தடுக்கக் கோரி இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர். டி சில்வா உள்ளிட்ட 4 தரப்பினர் உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் உயர் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரிக்கும் நீதியரசர்கள் குழுவில் உறுப்பினராகவிருந்த,  நீதியரசர் ஈவா வணசுந்தர, சட்ட மா அதிபராக இருந்த போது, சர்ச்சைக்குரிய குறித்த விவகாரம் தொடர்பில் குறிப்புகள் பலவற்றை இட்டுள்ளதாகவும், அவற்றை இரகசியமாக சீ.எப். கோவைகள் என பெயரிட்டு மன்றில் சமர்ப்பிப்பதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய ராஜரத்ன  குறித்த மனு விசாரணைகளின் போது நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.

நீதியரசர் ஈவா வணசுந்தர குறித்த மனுவை பரிசீலிப்பதை எந்த சட்டத்தரணியும் ஆட்சேபிக்காத போதும், நீதியரசர் ஈவா வணசுந்தர அந்த சி.எப். கோவைகளின் விடயங்களை வெளிப்படுத்தி இருக்கவில்லை.  அவ்வாறான பின்னணியிலேயே அம்மனு பரிசீலிக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த மனுக்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம், சம்பவம் தொடர்பில் நீதிவான் நீதிமன்றில் முறைப்பாட்டை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை தடுத்து இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவு குறித்த மனுக்கள் விசாரணை செய்து முடிக்கும் வரை செல்லுபடியாகும் வண்ணம் பிறப்பிக்கப்பட்டது.
சட்ட மா அதிபர் தரப்பு நீதிமன்றுக்கு கொடுத்த தகவல்கள் ஊடாக, ஈவா வணசுந்தர சட்ட மா அதிபராக இருந்த  போது, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் அந்த சம்பவத்தை அவர் பூரணமாக அறிந்திருந்ததாகவும் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம். நவாஸ் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு, கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் தககல் செய்துள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை தடை செய்து உத்தரவு பிறப்பித்த,  உயர் நீதிமன்றின் நீதியரசர்கள் குழுவில் அங்கம் வகித்த நீதியரசர் ஈவா வணசுந்தர ( தற்போதைய இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தலைவர்) பக்கச்சார்பாக செயற்பட்டுள்ளதாக கூறி, அந்த உத்தரவை ரத்து செய்யுமாறு தெரிவித்து இலஞ்ச ஊழல் ஆணைக் குழு கடந்த 2018 மார்ச் 14 ஆம் திகதி உயர் நீதிமன்றில் ரீட் மனுவொன்றினை தாக்கல் செய்தது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் தலைவர் டி.பி. வீரசூரிய உள்ளிட்ட அந்த ஆணைக் குழுவின் உறுப்பினர்கள் இணைந்து இந்த ரீட் மனுவை தாக்கல் செய்துள்ள நிலையில், பொறுப்புக் கூறத்தக்க தரப்பாக  முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி மொஹான் பீரிஸ், அப்போதைய மேன் முறையீட்டு நீதிமன்ற நீதிபதியும் தற்போதைய நீதியரசருமான ஏ.எச்.எம்.டி. நவாஸ் உள்ளிட்ட ஐவரை பெயரிட்டிருந்தனர்.

அதன்படி நீதியரசர் ஈவா வணசுந்தர பக்கச்சார்பாக நடந்துகொண்டுள்ளதாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகளை மீறியுள்ளதாகவும் மனுவில் சுட்டிக் காட்டப்பட்டு இடைக்கால தடை உத்தரவை நீக்கி உத்தரவிடுமாறும்  இலஞ்ச ஊழல் ஆணைக் குழு தமது மனுவூடாக உயர் நீதிமன்றைக் கோரியிருந்தது.

விசாரணைக்கு அனுமதி:

இவ்வாறான பின்னணியில் உயர் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு, கடந்த 15 ஆம் திகதி  உயர் நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜராகிய அதிகாரிகள்  கொழும்பு நீதிவான் நீதி மன்றில் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறான நிலையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு, கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில்  கடந்த மார்ச் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிவானின் விளக்கம்:

இதன்போது குறித்த வழக்கை குற்றவியல் சட்டத்தின் 189 ஆவது அத்தியாயம் பிரகாரம் வாபஸ்  வாங்குவதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் உதவி பணிப்பாளர் சட்டத்தரணி சுபாஷினி சிறிவர்தன குறிப்பிட்டார்.

இதன்போது திறந்த மன்றில் நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல, குற்றவியல் சட்டத்தின் 188 ஆவது அத்தியாயம் பிரகாரம் வழக்கை வாபஸ் பெற்றால் மீள வழக்குத் தாக்கல் செய்ய முடியும் எனவும் 189 ஆவது அத்தியாயம் பிரகாரம் வழக்கை வாபஸ் பெற்றால் மீள வழக்குத்  தாக்கல் செய்ய முடியாது எனவும், அது சந்தேக நபர்களை விடுவித்து விடுதலை செய்யும் நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டினார். அதன்படியே  குறித்த மூவரையும் விடுவித்து விடுதலை செய்வதாக நீதிவான் அறிவித்தார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தாக்கல் செய்த குறித்த  வழக்கில் தொழில் நுட்ப கோளாரறு உள்ளதாகவும், அதனாலேயே குற்றவியல் சட்டத்தின் 189 ஆவது அத்தியாயம் பிரகாரம் அதனை வாபஸ் பெற தீர்மானிக்கப்பட்டதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக் குழு சார்பில் மன்றில் கூறப்பட்டிருந்தது.

அதிகாரம் உள்ளவர்களின் வழக்குகள் வாபஸ்; சாதாரண மக்களின் வழக்குகளின் நிலை? :

குறித்த மூவரையும் விடுவித்து விடுதலை செய்ய முன்னர், பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல, சட்டத்தை அனைவருக்கும் சமமாக அமுல் செய்யும் வகையில் பார்த்துக்கொள்லுமாறு அறிவுறுத்தினார்.
‘ அதிகாரம் படைத்தவர்களின் வழக்குகளை மீளப் பெற்றாலும், அப்பாவி மக்களின் வழக்குகளை அவ்வாறு வாபஸ் பெற இலஞ்ச ஊழல் ஆணைக் குழு இவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவில்லை ஏன்?.  தாம் தாக்கல் செய்த  மனுக்களை வாபஸ் பெற்று இவ்வாறு நடந்துகொள்வதானால்,  சட்டத்தை அனைவருக்கும் சமமாக அமுல் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் பார்த்துக்கொள்ளுங்கள்.’ என  இதன்போது பிரதான நீதிவான் குறிப்பிட்டார்.

Previous articleதேர்தல் சட்டங்களின் குறைப்பாடுகளை அடையாளம் காண பாராளுமன்ற தெரிவுக் குழு
Next articleகொரோனா பரவலிடையே சட்ட விரோத கைது, தடுத்து வைப்பு குறித்த முறைப்பாடுகளில் அதிகரிப்பு : இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here