கொரோனா பரவலிடையே சட்ட விரோத கைது, தடுத்து வைப்பு குறித்த முறைப்பாடுகளில் அதிகரிப்பு : இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு

நாட்டில் கடந்த வருடம், கொரோனா தொற்று பரவல் ஆரம்பமானதை தொடர்ந்து இதுவரை சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டமை மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக அவ்வாணைக் குழு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்தே இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு இதனை தெரிவித்துள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் பேராசிரியர் ஜகத் பாலசூரியவின் கையெழுத்துடன் இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதன் ஊடாக, தடுப்புக் காவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள், தமது உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் தற்காலிகமாக வாங்கப்படாமை காரணமாக அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக் குழு அக்கடிதத்தில் தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு, பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பியுள்ள முழுமையான கடிதம்:

‘ கடந்த வருடம் ஏற்பட்ட கொவிட் தொற்று பரவல் நிலைமையின் போது (2020.03.17 – 2020.05.15) சட்ட விரோத கைது மற்றும் சட்ட விரோத தடுத்து வைப்பு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்குகிடைத்த முறைப்பாடுகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த 2020.08.27 அன்று எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. அது குறித்த அவதானிப்புக்கள், அவ்வாறான நிலைமையை தவிர்ப்பதற்கு எடுக்க முடியுமான நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அறிவிக்குமாறும் அதில் கோரப்பட்டிருந்தது.

தற்போதைய புதிய கொவிட் தொற்று பரவல் சூழலில், அவ்வாறான நிலைமை ஒன்று ஏற்படுவதை தடுப்பதற்காக, கைது செய்யப்படும் சந்தேக நபர்கள் தொடர்பில் சட்ட ரீதியிலான வரையறைகளுக்கு உட்பட்டு செயற்படுமாறு உமது அதிகாரிகளை தெளிவுபடுத்துமாறு இக்கடிதம் ஊடாக ஆலோசனை முன்வைக்கின்றோம்.

மேலும், இந் நிலைமை காரணமாக, பயணக் கட்டுப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, நீண்ட காலமாக தடுப்புக் காவலின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு தங்கள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கும், உறவினர்களை சந்திப்பதற்கும் சந்தர்ப்பம் தற்காலிகமாக வழங்கப்படாமையால் அவர்களது பாதுகப்பு, நலன்கள் கேள்விக்குரியாகியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

அதனால், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்கள், அவர்களது சட்டத்தரணிகள் மற்றும் உறவினர்களுடன் தொடர்பாடலை முன்னெடுக்க உங்களால் முன் மொழியப்படும் செயற் திறன் மிக்க நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் 2021.05.15 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு கோருகின்றோம்.

1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு சட்டத்தின் 11(அ) அத்தியாயம் பிரகாரம், அடிப்படை உரிமைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கும், 11 (உ) அத்தியாயத்தின் அதிகாரங்கள் பிரகாரம் நீதிமன்ற உத்தரவொன்றின் பிரகாரமோ அல்லது வேறு வகையிலோ தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலண்கள் தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய பரிந்துரைகளை முன்வைக்கவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு நடவடிக்கை எடுக்க முடியும்.’

Previous articleமொஹான் பீரிஸ், நவாஸ் உள்ளிட்ட மூன்று பேர் விடுவித்து விடுதலை; குற்றப் பத்திரிகையை வாபஸ் பெற்ற் இலஞ்ச ஊழல்  விசாரணை ஆணைக் குழு  
Next articleகர்தினால் விரல் நீட்ட வேண்டியது முஸ்லிம்களை நோக்கியல்ல; நாட்டின் உளவுத்துறையின் மீதே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here