ஆணைக் குழு அறிக்கையில்  குற்றவியல் பொறுப்பு சாட்டப்பட்டுள்ளவர்களுக்காக  ஆஜராவது தொடர்பில் தீர்மானிக்க சட்ட மா அதிபருக்கு அவகாசம்

போதுமான உளவுத் தகவல்கள் இருந்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாத தாக்குதல்களை  தடுக்க   தவறியதன் ஊடாக, தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக  கூறி தாக்கல் செய்யப்பட்டுள்ள 12  மனுக்களில்  பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள சிலர் மீது, ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு  குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்ய பரிந்துரைத்துள்ள நிலையில் அவ்வாறானவர்கள் தொடர்பில் தான் தொடர்ந்தும் ஆஜராவதா என்பது குறித்து தீர்மானிக்க கால அவகாசம் தருமாறு சட்ட மா அதிபர் இன்று உயர் நீதிமன்றில் கோரிக்கை முன்வைத்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க  முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிரி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று  உயர் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பிரியந்த நாவான  இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்  பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய,  நீதியரசர்களான புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்றூ, பிரியந்த ஜயவர்தன,    எல்.டி.பி.தெஹிதெனிய,  முர்து பெர்ணான்டோ, ப்ரீத்தி பத்மன் சுரசேன  ஆகியோர் அடங்கிய ஏழுபேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன் விசாரணைக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுக்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது,  சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் பிரியந்த நாவான, ‘  உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக் குழுவின் அறிக்கை  தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. அதில், தற்போதும்  இம்மனுக்களில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள, சட்ட மா அதிபரின் சேவை பெறுநர்களாக உள்ள சில பொலிஸ், அரச அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்கு தாக்கல் செய்ய பரிந்துரை உள்ளது. இந் நிலையில் அவ்வாறானவர்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் தொடர்ந்தும் முன்னிலையாவதா என்பது குறித்து அவ்வறிக்கையை ஆராய்ந்து தீர்மானம் எடுக்க வேண்டியுள்ளது. எனவே அதற்கான கால அவகாசம் வேண்டும்.’ என்றார்.
இன் நிலையிலேயே, சட்ட மா அதிபர் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், குறித்த மனுக்களை  எதிர்வரும் ஜூன் 7,8,9 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுக்க தீர்மானித்தது.
21/4 தற்கொலை குண்டுத்தாக்குதலில் தனது இரு பிள்ளைகளை இழந்த தந்தையான நந்தன சிறிமான்ன,  சுற்றுலா துறை வர்த்தகர் ஜனக விதானகே, இரு கத்தோலிக்க மதகுருமார்,  ஷெங்ரில்லா ஹோட்டலில் குண்டுத் தாக்குதலில் சிக்கிய சட்டத்தரணி  மோதித்த ஏக்கநாயக்க உள்ளிட்ட 12 பேர் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.இதில் பொறுப்புக் கூறத்தக்க தரப்பினராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அப்போதைய அமைச்சரவை, முன்னாள்  பாதுகாப்பு செயலர் ஹேமசிறி, பொலிஸ் மா அதிபர் பூஜித், தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன,  தேசிய உளவுச் சேவை பிரதானியாக இருந்த சிசிர மெண்டிஸ்,  மற்றும் சட்ட மா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here