பொதுபலசேனா சஹரானுக்கு உதவி? :சிங்கள ராவய, மஹாசன் பலகாய மற்றும் சிங்க லே குறித்த ஈஸ்டர் ஆணைக்குழுவின் பரிந்துரைகள்

உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில், பொதுபலசேனா போன்ற அமைப்புகளின் செயற்பாடுகளே ஸஹரான் போன்றவர்களின் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மத தீவிரவாத  நிறுவனர்கள் தங்களை இனசார்பானவர்கள் என்றும் மனிதநேயம் கொண்டவர்கள் என்றும் சித்தரிக்க முயன்றாலும், அவர்களது செயற்பாடுகள் மற்றும் பேச்சுக்கள் அவர்களது யதார்த்தமான நிலையை வெளிப்படுத்துவதோடு, சமூகங்களுக்கிடையில் ஒரு வித போட்டி நிலையை உருவாக்குகின்றன என்றும் உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் காலத்தில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷவும் ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை பல சந்தர்ப்பங்களில் நீடித்து அதன் இறுதி அறிக்கையை ஜனவரி 31 அன்று ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
உச்சநீதிமன்ற நீதிபதி ஜனத் டி சில்வா விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்தார். மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிசங்கா பண்டுலா கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பண்டுலா குமார அத்தபத்து மற்றும் அமைச்சின் ஓய்வு பெற்ற செயலாளர் டபிள்யூ.எம். எம்.ஆர்.அதாரீ ஆகியோரே இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்களாவர்.
தீவிரவாதத்தின் உருவாக்கத்திற்கு பங்களிப்பு செய்த சிங்கள அமைப்புகள்  தொடர்பிலும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
யுத்தம் முடிவடைந்த பின்னர், நாட்டில் பல பௌத்த பிக்குகள், முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சார வேலைகளில் ஈடுபட்டார்கள்.இவ்வாறு தூண்டிவிடப்பட்ட முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் விரோத உணர்வினால் பல கலவரங்கள் அவர்களுக்கெதிராக கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன.
2014 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இடம்பெற்ற அலுத்கம, தர்காடவுன், வெலிபன்ன மற்றும் பேருவளை வன்முறைகள். 2017 ஆம் ஆண்டு காலி , கின்தோட்டை முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள். 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற திகன மற்றும் தெல்தெனிய முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்.
இதுபோன்ற பல வன்முறை செயற்பாடுகளுக்கு காரணமாக அமைந்த பௌத்த தீவிரவாத குழுக்களுக்கு எதிராக சட்டம் அமல்படுத்தப்படவில்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
விசாரணை ஆணைக்குழு பௌத்த மற்றும் பிற மத அமைப்புகள் பற்றிய தகவல்களை ஆய்வு செய்துள்ளதுடன்,  பிபிஎஸ் தடை செய்யப்பட வேண்டும், பிற மத அமைப்புகளின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் மற்றும் ஏதேனும் தீவிரவாத நடவடிக்கைகள் நடந்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விடயங்களையும் அது பரிந்துரைத்துள்ளது.
சிங்கள ராவய, மஹாசன் பலகாய மற்றும் சிங்கள ஜாதிகா பலமொலுவ ஆகியோர் சமூக விரோத அல்லது தீவிரவாத அமைப்புகள் என்றும் ஆணையம் கவனித்துள்ளது.
‘துணை காரணிகள்’ என்ற தலைப்பில் இந்த ஆணைக்குழு அறிக்கையின் 22 ஆம் அத்தியாயம், இன மற்றும் மத அமைதியின்மையை ஏற்படுத்தியவர்கள், நாட்டில் இதுபோன்ற செயல்களை ஆதரிப்பவர்கள், சமூக அமைதியின்மை மற்றும் சமூக ஒழுங்கை சீர்குலைப்பவர்கள் மற்றும் இன அமைதியின்மையை ஏற்படுத்துபவர்களைப் பற்றி விவாதிக்கிறது. 
பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பாக அதிலே பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது,
இவர் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர். இந்த அமைப்பு 2012 இல் நிறுவப்பட்டது. வஹாபிசத்தால் நாட்டிற்கு ஏற்படும் அச்சுறுத்தலை அறியத்தருவதில் இந்த அமைப்பின்  தேர்ர்களே முன்னணியில் இருந்தனர். 
முன்னர் அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி, இது தொடர்பாக இந்த தேரரின வாதம் சரியானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரது வார்த்தைகள் வஹாப் சித்தாந்தத்தை மாத்திரம் இலக்கு வைத்ததாக இருக்கவில்லை, மாற்றமாக முழு முஸ்லிம் சமூகத்தையும் இலக்குவைத்ததாக இருந்தது
இருப்பினும், குறித்த தேரரின் சில செயல்களும் கூற்றுகளும் முஸ்லிம் இளைஞர்களை தீவிரவாதத்தை நோக்கி இழுத்துச் சென்றதுடன், சஹரானுடன் இணையவும் வழிவகுத்தன. சஹாரான் இளைஞர்களை தன் பக்கம் திசைதிருப்புவதற்காக  தேரரின் உரைகளையும் , செயல்களையும்  பயன்படுத்தினார் என்பதற்கான சான்றுகள் உள்ளன. சஹாரன் வெளியிட்ட இறுதி காணொளியில் தேரர் கலகொட அத்தே ஞானசாரவின் நடவடிக்கைகளே தாக்குதலுக்கான காரணமாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது ”
“பரஸ்பர தீவிரமயமாக்கல் என்பது ஒருவருக்கொருவர் தீவிரவாத சித்தாந்தங்களை ஊக்குவிக்கும் தீவிரமயமாக்கலின் சுழற்சி ஆகும். முஸ்லீம் இளைஞர்களின் பரஸ்பர தீவிரமயமாக்கலுக்கு காரணமாக இருந்தது கலகொட அத்தே ஞானசார தேரரின் நடவடிக்கைகளாகும். ”
2014 பெப்ரவரி 17ஆம் திகதி மகரகம மற்றும் 2014 ஜுன் மாதம் போயா நாளினைத் தொடர்ந்து கலகொட அத்தே ஞானசார தேரரின் அவமானகரமான கருத்துக்களை விசாரணை ஆணையம் கேட்டது.
2014 பெப்ரவரி 17ஆம் திகதி மகரகம மற்றும் 2014 ஜுன் மாதம் போயா நாளினைத் தொடர்ந்து அலுத்கமவிலும் செய்யப்பட்ட உரைகளுக்கெதிராக 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைக்கு இணங்க  கலகொட அத்தே ஞானசார தேரர் மீது குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்வதற்கான சாத்தியத்தை சட்டமா அதிபர் பரிசீலிக்கவும் அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது. அதே நேரம் முஸ்லிம் இளைஞர்களின் தீவிரமயமாக்கலுக்கு கலகொட அத்தே ஞானசார தேரரும்  பங்களிப்பு செய்துள்ளார். ” 
“பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகள் மத ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் என்றும், இதன் காரணமாக அந்த அமைப்பு தடை செய்யப்பட வேண்டும் என்றும் விசாரணை ஆணையம் கருதுகிறது.” என்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous article331 நாட்களின் பின்னர் கட்டாய தகனத்துக்கு முற்றுப்புள்ளி!
Next articleகொவிட் 19 சடலங்கள்;  சர்ச்சை மன்னாரிலிருந்து இரணைத்தீவுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here