கொவிட் 19 சடலங்கள்;  சர்ச்சை மன்னாரிலிருந்து இரணைத்தீவுக்கு

கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நபர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான சுற்றறிக்கை, சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
உடலை அடக்கம் செய்வது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் கடந்த 25 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்ததுடன், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்களையும் வெளியிடுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்தே குறித்த சுற்றறிக்கையானது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன்  நேற்றிரவு (3) வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு கொவிட் 19 மூலம் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக இரணைதீவுற்கு கொண்டு செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய விசேட வழிகாட்டுதல்களும் சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளன.
வழிகாட்டுதல்கள்
கொவிட் மரணங்கள் தொடர்பில் இறந்தவர்களின் உறவினர்கள், காலம் தாமதிக்காது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்
அதனை எழுத்து மூலம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறவினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்
சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் எழுத்து ஆவணங்கள், கொவிட்19 தொற்றால் மரணிக்கும் சரீரங்களை இரணைதீவு நோக்கி கொண்டு செல்லும் வரை செல்லுபடியாகும்
சரீரங்களை கொண்டு செல்வதற்கான சவப்பெட்டியை உறவினர்கள் பெற்றுக்கொடுக்க வேண்டும்
சரீரங்களை எடுத்து செல்லும் போது படம் பிடிக்கவோ, ஒளிப்பதிவு செய்யவோ முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது
கொழும்பு நகரில் பெயரிடப்பட்டுள்ள இடத்துக்கு கொவிட் 19 தொற்றால் மரணிப்பவர்களின் சரீரங்கள் கொண்டு செல்லப்பட்டு நாளாந்தம் அதிகாலை 5.30 மணிக்கு நாச்சிகுடா இறங்குதுறை வரை சரீரங்கள் கொண்டு செல்லப்படவுள்ளன.
கொவிட்19 தொற்றால் மரணிப்பவர்களின் சரீரத்தை அடையாளங்காண்பதற்காக வைத்தியசாலைக்கு பிரவேசிக்கும் உறவினர்களில் இரண்டு பேருக்கு மாத்திரமே இரணைதீவுற்கு செல்ல அனுமதி வழங்கப்படும்
இரணைதீவு எங்கு அமைந்துள்ளது?
இரணைத்தீவு கிராமமானது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட முழங்காவில், நாச்சிக்குடா ஆகிய பிரதான நிலப்பரப்பில் அமைந்துள்ள கரையோரக் கிராமங்களிலிருந்து 20 கிலோமீற்றர் தூரத்தில் மன்னார் வளைகுடாக் கடலில் அமைந்துள்ளது. 2020 வரையான தரவுகளின்படி இது 359 குடும்பங்களின் வாழ்விடமாக இருப்பதுடன் மொத்தமாக 1248 நபர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர். தமிழ் கத்தோலிக்கர்களான இவர்களில் 623 பேர் ஆண்களும் 625 பேர் பெண்களுமாவர்.
2009 இல் முடிவடைந்த நீண்ட யுத்தத்திற்கு பின்னர் மிக அண்மையில் மீள்குடியேற்றங்களை ஆரம்பித்திருக்கும் இம்மக்கள், தங்களது கிராமத்தில் கொவிட் 19 சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானத்தை உடனடியாக ரத்துச் செய்யும்படி நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் முன்னெடுத்திருந்தார்கள். 
குறித்த ஆர்ப்பாட்டத்தில் இந்தத் தீர்மானம் தொடர்பில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த மக்கள் , இது இரண்டு இனங்களுக்கிடையில் முரண்பாட்டினை தோற்றுவிக்கும் செயற்பாடு என்றும் தெரிவித்தனர்.
மேலும் அரசாங்கத்தின் குறித்த தீர்மானித்திற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை
இது தொடர்பான கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நாம்  தொடர்பு கொண்ட போது பின்வருமாறு கருத்து தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமற்ற பிரதேசமாகும். இது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை தொடர்பு கொண்டு தான் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவித்தார். 
குறித்த கருத்துக்களை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் செவிமடுத்ததுடன் மாற்று ஏற்பாடு தொடர்பாக ஆராய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளமையால், சிறுபான்மை மக்களின் உணர்வுகளை பாதிக்காத வகையிலான இறுதித் தீர்மானத்தை அரசாங்கம் மேற்கொள்ளும் என்றும் தான் நம்புவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், 
அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இரணைதீவு கடலட்டை ஏற்றுமதிக் கிராமத்தின் ஊடாக வருடந்தோறும் சுமார் 26 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்பட்ட அந்நியச்செலாவணியை பெற்றுக்கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், எனவே இரணைத்தீவை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக இனிமேலும் கருத  முடியாது என்றும் தெரிவித்தார்.
பரிதாபகரமான இனவெறி தலைவிரித்தாடுகிறது
குறித்த இரணைத்தீவு அறிவிப்புக்கு எதிராக தனது கருத்தினை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களும் தனது டுவிட்டரில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
” உடல்களை இரணைத்தீவுக்கு அப்புறப்படுத்தவே முயற்சிக்கின்றனர்.தொடர்ந்தும் அவர்கள் செய்வதே சரி என்று நிரூபிக்கவும் விரும்புகின்றனர்.நம்பிக்கையிழந்து ,  அதிர்ந்து போயிருக்கும் சமூகத்தை துன்புறுத்துவதில் அவர்கள் அடையும் இன்பத்துக்கு அளவே இல்லை.மிக மோசமான, பரிதாபகரமான இனவெறி தலைவிரித்தாடுகிறது.”
இலங்கையின் நற்பெயர் இல்லாமலாக்கப்பட்டுள்ளது
ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்களும் குறித்த தீர்மானம் தொடர்பான தனது கருத்தினை டுவிட்டரில் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
“உடல்களை அடக்கம் செய்வது தொடர்பில் எட்டப்படுகின்ற முறையற்ற தீர்மானங்களினால் இலங்கையின் நற்பெயருக்கு சர்வதேச அளவில் களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை என்றால் சுற்றுலா, கிரிக்கட் மற்றும் சிலோன் தேயிலை என்று பேசிய வெளிநாட்டவர்கள் இப்போது இலங்கையின் இனவாதத்தை பற்றியே பேசுகிறார்கள்.”
இது தொடர்பாக இன்னும் விரிவான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக கொரோனா அடக்கம் தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளரினால்  பரிந்துரைக்கப்பட்ட, மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் மற்றும் கொவிட் 19 செயற்பாடுகள் தொடர்பான சுகாதார அமைச்சின் பிரதான ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி அவர்களைத் தொடர்பு கொண்டோம்.
இரணைத்தீவு தொடர்பான கருத்துக்களை வினவிய போது, சுகாதார விதி முறைகள் மற்றும் சூழல் என்பவற்றை கருத்திற் கொண்டு மக்களுக்கு தீங்கற்ற முறையிலேயே  இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
இரணைத்தீவு எதனடிப்படையில் கொவிட் உடல்களை அடக்கம் செய்வதற்கான இடமாக தெரிவு செய்யப்பட்டது?
இது சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானமாகும். குறித்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்ட போது அதனை மேலும் ஆராய்வதற்காக பிரதேச ரீதியான குழுக்கள் நியமிக்கப்பட்டன. அந்தக் குழுவின்  தீர்மானத்தின் அடிப்படையிலேயே இந்த இடத்தினை  தெரிவு செய்துள்ளோம். இதனூடாக அந்தத் தீவு மக்களுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது. குறிப்பாக இந்தப் பிரதேசமானது தீவிலிருந்து ஒரு ஒதுக்குப் புறமாகவே அமைந்துள்ளது.
கொவிட் உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இது உண்மைதானா?
இன்னும் அடக்கம் செய்வதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை. தற்போது இரணைத்தீவு மக்களுடன் உரையாடி வருகிறோம். நாளை முதல் கொவிட் உடல்களை அடக்கம் செயய்ய முடியும் என்று நம்புகின்றோம்.
இரகசியமான முறையில் குறித்த பகுதிக்கு குழுவொன்று சென்று புதைகுழிகளை வெட்டி ஆராய்ந்துள்ளதாகவும் அதன் பின்னர் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றதே. இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
இது மக்களிடம் சொல்லிச் சொல்லி செய்ய வேண்டிய ஒரு விடயமல்ல. மாற்றமாக அதற்கு தேவையானவர்களை, துறைசார்ந்தவர்களை அழைத்துச் சென்று செய்ய வேண்டிய ஒரு விடயமாகும். 
கொவிட் உடல்களை புதைப்பதற்காக கொழும்பிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு தீவகத்திற்கு பயணம் செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பான உங்களது கருத்து என்ன?
நிர்ப்பந்தமான ஒரு சூழலில் தூரம் என்ற விடயத்தை எம்மால் பொருட்படுத்த முடியாது.இது கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டியதாகும்.
331 நாட்களின் பின்னர் கட்டாய தகனத்துக்கு முற்றுப்புள்ளி
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் எந்த ஒரு நபரையும் அடக்கம் செய்யவோ அல்லது தகனம் செய்யவோ முடியும் என்ற அரசாங்கத்தின் தீர்மானம் புதிய வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டிருந்தது.
2021 பெப்ரவரி 25 ஆம் திகதியிடப்பட்ட 2216/38 ஆம் இலக்க வர்த்தமானி ஊடாகவே இந்த நிலைப்பாட்டை அரசாங்கம் அறிவித்தது.
முன்னதாக, கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு நிலத்தடி நீர் ஆழமான மட்டங்களைக் கொண்ட மன்னார் பிரதேசம்  பொருத்தமானது என்று அரசாங்கத்தில் பலர் பரிந்துரைத்திருந்தனர். முஸ்லிம்களில் அதிகமானோரும் மன்னாரில் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி கோரியிருந்தனர்.  அதே நேரம் கொவிட் 19 காரணமாக உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக தனிநபர் ஒருவர் மன்னாரில் ஐந்து ஏக்கர் நிலத்தை நன்கொடை அளிக்கத் தயாராகி இருந்ததாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Previous articleபொதுபலசேனா சஹரானுக்கு உதவி? :சிங்கள ராவய, மஹாசன் பலகாய மற்றும் சிங்க லே குறித்த ஈஸ்டர் ஆணைக்குழுவின் பரிந்துரைகள்
Next articleவிடை காணும் கெத்ஹேன நீர் சுத்திகரிப்புத் திட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here