மீள பி.சி.ஆர்.  செய்யக் கோரும் ரிட் மனு ; விசாரணைகளுக்கு ஏற்காது தள்ளுபடி

மரணமடைந்த பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட இளைஞருக்கு, மீள பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கக் கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்வதாக நீதிமன்றம் நேற்று அறிவித்தது. மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்ன கொரயா ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் , இது தொடர்பில் நேற்று முற்பகல் தீர்மானத்தை அறிவித்தனர்.
இந் நிலையில் அந்த தீர்மானத்தை ஆட்சேபித்து, அதற்கு எதிராக மனுதாரர் தரப்பில் உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீடு ஒன்றினை முன்வைக்க இன்று நடவடிக்கை எடுப்பதாக, மனுதாரரின் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தெரிவித்தார்.
திடீரென உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தின் கீழ் கடமையாற்றிய 26 வயதான இளைஞருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகள் தொடர்பில் சந்தேகம் உள்ளதால், மீள குறித்த இளைஞனின் சடலம் மீது பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிடக் கோரி திருகோணமலையைச் சேர்ந்த அஹமட் இப்ரா லெப்பை மொஹம்மட் ஹகீம் என்பவர் சார்பில்  இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்,  சட்ட வைத்திய அதிகாரி மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இம்மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.
இந் நிலையில் கடந்த 15 ஆம் திகதி குறித்த மனுவை  பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட மேன் முறையீட்டு நீதிமன்றம்  குறித்த சடலம் தொடர்பில் இறுதிக் கிரியைகளை  இடைநிறுத்தி  தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் அதன் சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தது.
மிகவும் திடகாத்திரமாக இருந்த தமது மகன் திடீரென உயிரிழந்த பின்னர் கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.  பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் அந்த அறிக்கை குறித்து தமக்கு சந்தேகம் எழுவதாகவும் இதனால் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனை நடத்துமாறும் மனுதாரர்கள் சார்பில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவர்கள் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உள்ளிட்ட சட்டத்தரணிகள் இதனை மன்றின் அவதானத்துக்கு கொண்டுவந்திருந்தனர்.
இந் நிலையில்  மரணம் தொடர்பான விடயங்களை சமர்ப்பிப்பதற்காக  நேற்று முன் தினம் (17)மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் சட்ட வைத்திய அதிகாரிக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று முன் தினம் (17)  மன்றில் அவர்கள் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் விக்கும் டி ஆப்றூ ஆஜரானார்.
மரணித்த நபருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை குழப்பமானது என்பதை ஒப்புவிக்க மனுதாரர்கள் எந்த சான்றுகளையும் மன்றில் முன்வைக்காது மீள பி.சி.ஆர். பரிசோதனை செய்யக் கோருவது அடிப்படை அற்றது என பிரதி சொலிசிட்டர் ஜெனரால் விக்கும் டி ஆப்றூ தெரிவித்தார்.
மரணமடைந்தவரின் மரணத்துக்கு காரணம் என்ன என்பதை கண்டறிய, பிரதிவாதிகள் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க முயற்சித்த போதும், அதற்கு மனுதாரர் தரப்பினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை என சுட்டிக்கடடிய  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் விக்கும் டி ஆப்றூ,  குறித்த ரிட் மனு அடிப்படை அற்றது என்ற வகையில்  விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்யப்படல் வேண்டும் என கோரினார்.
இதன்போது மனுதாரர் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, பி.சி.ஆர். பரிசோதனைகளில் தவறுகள் நிகழலாம் என உலக சுகாதார ஸ்தாபனமே கூறியுள்ள நிலையில்,   மரணித்த நபரின் மரணத்துக்கு காரணம் கொரோனா தொற்றுதானா என்பதை உறுதி செய்ய 2 ஆவது முறையாக பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என  கோரினார்.
2 ஆவது பி.சி.ஆர். பரிசோதனைகளில், மரணித்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தால்,  அவரது மத நம்பிக்கை அடிப்படையில் இறுதிக் கிரியைகளை முன்னெடுக்க வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந் நிலையிலேயே இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள், இது குறித்து  நேற்றைய தினம் தீர்ப்பு அறிவிப்பதாக தெரிவித்தனர்.
இந் நிலையிலேயே நேற்று  முற்பகல், இந்த  ரிட் மனு தொடர்பிலான தீர்மானத்தை அறிவித்த நீதிபதிகள், மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here