நாம் கலந்துக்கொள்ளும் போராட்டங்களுக்கு மாத்திரம் தடையுத்தரவு ஏன்? மனோ சபாநாயகரிடம் கேள்வி 

நாட்டின் பல இடங்களில் நடைபெறும் போராட்டங்களுக்கு பெறப்படாத தடையுத்தரவுகள், பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் கலந்துக்கொண்ட எம்பீக்களுக்கு எதிராக மாத்திரம் குறிவைத்து பெறப்படுவது ஏன் என்று கொழும்பு மாவட்ட எம்பியும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றி மேலும் அவர் கூறியுள்ளதாவது,
எதிரணி எம்பீக்களுக்கு எதிராக மாத்திரம் பொலிசார் திட்டமிட்டு, நீதிமன்ற தடையுத்தரவுகளை பெறுகிறார்கள். 
எம்பிகளாக தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் வருவது, அங்கு சபையில் உரையாற்ற மட்டுமல்ல. 
உண்மையில் அது 25 விகிதம்தான். எமது 75 விகித பணி, என்னை பொறுத்தவரையில், தெருவில், மக்கள் மத்தியில்தான் இருக்கிறது. 
ஆகவே பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் எம்பிக்களின் கடமையை செய்யும் சுதந்திரத்தை, சபாநாயகர் என்ற முறையில் நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். 
கொழும்பில் தினசரி ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் போது, பெறப்படாத தடையுத்தரவுகள், ஏன் வட கிழக்கில் எமது மக்கள் போராட்டங்கள் நடைபெறும் போது மட்டும் பெறப்பட்டு எம்பீக்களின் உரிமையை மறுக்கும் வண்ணம் பொலிஸ் செயல்படுகிறது என்பதை பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டு சொல்லுங்கள் என சபாநாயகரிடம் இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தின் போது கேள்வி எழுப்பினேன்.  
இதுபற்றி நான் பாராளுமன்றத்திலும் கேள்வி எழுப்புவேன்.  
இந்த கட்சி தலைவர் குழுவில் அங்கம் வகிப்பதால், அதற்கு முன் இன்று இங்கும் அதுபற்றி கேட்கிறேன், என சபாநாயகரிடம் நான் கூறினேன். 
சற்றுமுன் எனது செயலாளரை தொடர்பு கொண்ட சபாநாயகர் அலுவலகம்,  பொலிஸ் மாஅதிபருக்கு இதுபற்றிய கடிதம் நாளை அனுப்பப்படும் என தெரிவித்துள்ளது.
எம்பீக்களின் உரிமை தொடர்பில் நான் எழுப்பிய இந்த பிரச்சினைக்கு, கட்சி தலைவர் கூட்டத்தில் இன்று கலந்துக்கொண்ட அனைத்து கட்சி எம்பீக்களும்,  ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் என்ற கட்சி பேதமின்றி ஆதரவு வழங்கினார்கள். 
தடையுத்தரவு பெறுவது, நீதிமன்றத்துக்கு இழுப்பது, சிறைக்கு அனுப்புவது என்ற சலசலப்புகளுக்கு அஞ்சி ஓடி ஒளியும் அரசியல்வாதி நானில்லை. 
இதை இவர்களுக்கு விளக்க  வேண்டிய தேவை எனக்கு இருக்கின்றதால், இந்த பிரச்சினையை இன்று நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நான் எழுப்பினேன், என்பதாகவும் தெரிவித்துள்ளார்.

 

Previous articleஅதிகார போட்டியில் பாதிக்கப்பட போவது எங்கள் மக்களே – அனந்தி சசிதரன்
Next articleமீள பி.சி.ஆர்.  செய்யக் கோரும் ரிட் மனு ; விசாரணைகளுக்கு ஏற்காது தள்ளுபடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here