அதிகார போட்டியில் பாதிக்கப்பட போவது எங்கள் மக்களே – அனந்தி சசிதரன்

(அப்துல் ரகுமான்)
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களை ஆபத்தில் தள்ளிவிடும் செயற்பாடே சீன மற்றும்  இலங்கை நாடுகளுக்கிடையிலான மாற்று மின்சக்தி உடன்படிக்கை திட்டமாகும்.
நெடுந்தீவு, நயினா தீவு மற்றும் அனலை தீவு ஆகிய 3 தீவுகளை சீனாவுக்கு வழங்குவதற்கான அங்கீகாரத்தை கடந்த ஜனவரி 18 ஆம் திகதி அமைச்சரவை வழங்கியதுடன், அது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
இது தொடர்பாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,
குறித்த தீர்மானத்தை இலங்கை அரசு விரைவாக கைவிடவேண்டும்.கலாச்சார ரீதியாக நெருக்கமான பிணைப்பை கொண்டுள்ள இந்தியாவைப் புறக்கணித்து இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது,இது இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கும் எதிரானது என்றும் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக கருத்துக்களைப்  பெற்றுக் கொள்வதற்காக ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமும், முன்னாள் வடமாகாண சபையின் உறுப்பினருமான அனந்தி சசிதரன் அவர்களையும் தொடர்பு கொண்டோம்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்,
வடக்கு மக்களின் அபிலாஷைகளை, விருப்பங்களை அறிந்து கொள்ளாமல் இவ்வாறானதோர் தீர்மானம் அமைச்சரவையில் எடுக்கப்பட்டிருப்பது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். குறிப்பாக இந்தத் திட்டத்தை பொறுத்தவரை தீவக மக்களின் கருத்துக்களை அரசாங்கம் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
வல்லரசு நாடுகளான சீனா மற்றும் இந்தியா என்பன எச்சந்தர்ப்பத்திலும் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள பலப்பரீட்சைகளில் ஈடுபடலாம். இதன் போது பாதிக்கப்படுவது அப்பாவிகளான வடக்கு மாகாண பொதுமக்களேயாகும். குறிப்பாக இந்தியாவிற்கு மிக நெருக்கமான எல்லையைக் கொண்டுள்ள தீவுகளை சீனாவிற்கு வழங்குவதை அது விரும்பாது என்பதை சாதாரண பொதுமகனும் விளங்கிக் கொள்ள முடியும்.இரண்டு வல்லரசுகள் எங்கள் நிலத்தில் தங்கள் அதிகார போட்டியை மேற்கொள்ள விளையும் போது அதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட போவது எங்கள் மக்களே. 
ஏற்கனவே தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்படுவதையும் காண்கிறோம். எனவே தாய்தமிழ் நாட்டையும் ஈழத்தமிழரையும் பிரித்தாள நினைக்கும் சிங்கள வல்லாதிக்க அரசின் எங்கள் நிலங்களை வல்லாதிக்க சக்திகளுக்கு தாரைவார்க்கும் முயற்சியை பலம் கொண்டவரை எதிர்ப்போம் .
சில அமைச்சர்கள் கூறுவது போன்று இதனை மின்சார நெருக்கடிக்கான நிரந்தர தீர்வுத் திட்டமாக கருதினாலும், அதற்காக அனல் மின் உற்பத்தி நிலையத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. காரணம் அதனூடாக ஏற்படுகின்ற பாதிப்புகள் மிக அதிகமாகும்.மின்சார பிரச்சினையை தீர்ப்பதற்கு தீவக மக்களுக்கு சூரியமின்கலம் அமைப்பதற்கான வட்டியில்லா கடன் அல்லது குறைந்த வட்டியுடனான கடன் அல்லது மானியம் வழங்கலாம் . அதனை விடுத்து அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர் நிலங்களை அந்நிய சக்திகளுக்கு தாரைவார்க்க முடியாது. 
கிழக்கு முனை கடற்பரப்பை இந்தியாவிற்கு கொடுக்க முயற்சித்த போது ஜேவிபி உட்பட அனத்து சிங்கள தரப்பும் எதிர்த்தது. ஆனால் வடக்கு மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கூட  அரசு கவனத்தில் கொள்ளவில்லை என்பது துரதிஸ்டமானது.
இன்னுமோர் விடயத்தையும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். தீவக மக்கள் இதைவிடவும் பாரிய அடிப்படை தேவைகளைக் கூட நிறைவு செய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். இச் சந்தர்ப்பத்தில் அரசாங்கம் செய்ய வேண்டியது அந்த தீவக மக்களுடன் கலந்துரையாடி அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தனது கருத்தினை முன்வைத்த அனந்தி சசிதரன் அவர்கள்,
இந்த இடத்தில் 13 வது அரசியல் திருத்தம் பற்றியும் கட்டாயம் பேச வேண்டும். இலங்கை- இந்திய சர்வதேச ஒப்பந்தத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இவ்வரசியல் திருத்தமானது இன்றும் நடைமுறையில் இருக்க கூடிய தமிழருக்கான மிகக்குறைந்த அதிகார பரவலை கொண்ட தீர்வு திட்டமாகும். 
தமிழருக்கு இருக்கின்ற இனப்பிரசினையை உயிரோட்டமாக வைத்திருக்க கூடிய ஒரு அலகு. இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடமுன் இருந்த அதிகாரமும் பின் கையொப்பமிடுகின்ற போது இன்னும் நலிந்து வடக்கு கிழக்கு இணைந்த பொலிஸ் அதிகாரம் காணி அதிகாரம் கொண்டதாக இருந்து இன்று அவை நீக்கப்பட்டு வெற்று சபையாக உள்ள நிலைதான் இன்று நாங்கள் இன்னல்படுவதற்கான காரணமாகவும் அமைகிறது. 
இன்றும் சிங்கள பெரும்பான்மை அரசுகள் இந்த மாகாண சபை முறைமையினை கூட இடைநிறுத்தியதுடன் தேர்தலை நடாத்தாமல் இழுத்தடிப்பு செய்வதுடன் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை குறிப்பாக காணி,பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாதென்ற கருத்தினையும் முன்வைத்து வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில் தான் இன்று யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளும் சீனாவுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 13 வது அரசியல் திருத்தத்தின் தளர்வான கொள்கையே இன்று இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது என்பதனை இந்தியாவும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அதேநேரம் 13வது அரசியலமைப்பு திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கான ஆரம்ப புள்ளியாகக் கருதலாம்.  
வடகிழக்கு மாகாண மக்கள் ஒருபோதும் இந்தியாவின் நலனுக்கு எதிராக செயற்பட மாட்டார்கள் என்பதுடன் அவ்வாறான செயற்திட்டங்களுக்கு முழுமையான எதிர்ப்பை தொடர்ந்தும் தெரிவித்து வருவோம், என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில்,
குறிப்பாக தமிழ்மக்களின்  உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில்  உருவாக்கப்பட்டிருக்கும் ஒன்றிணைந்த தமிழ்த் தேசியக் கட்சிகள் சீனாவின் இந்தத் திட்டத்திற்கெதிராக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று தெரிவித்த அவர், இன்று வடகிழக்கில் எதிர்நோக்கி வரும் காணிப் பிரச்சினை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினை மற்றும் முஸ்லிம் மக்களுடைய ஜனாஸா எரிப்பு போன்ற விடயங்களிலும் அதிக கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்தார்.
தமிழரசு கட்சி, ரெலோ, ஈபிஆர்எல்எவ், புளொட், தமிழ் மக்கள்கூட்டணி, தமிழ் தேசம் கட்சி, ஈழத்தமிழர் சுயாட்சி கழகம் , பசுமை தாயகம் கட்சி மற்றும் போராளிகள் ஜனநாயக 
கட்சி ஆகிய 9 கட்சிகளே ஒன்றினைந்த தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக மேற்குறிப்பிட்ட இருவரும் தெரிவித்திருந்தனர்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here