300 மெகாவாட் திரவ இயற்கை வாயு மின் உற்பத்திக்கு ஒப்புதல்

300 மெகாவொட் திறன்கொண்ட கெரவலபிட்டிய திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையத்திற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இன்று (15) வெளியிடப்பட்டுள்ள விஷேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையம் மூலம் 300 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்கான கொள்முதல் ஒப்பந்தத்திற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் புதிய உறுப்பினர்கள் 2021 பெப்ரவரி 13ஆம் திகதி ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த மின்சார ஒப்பந்தமானது இலங்கை மின்சார சபை மற்றும் லக்தனவி நிறுவனம் இடையே செயற்படுத்தப்படும்.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையம் மூலம் 300 மெகாவாட் மின்சாரத்தை பெறுவதற்கான கொள்முதல் ஒப்பந்தம் மின்சார பாவனையாளர்கள், இலங்கை மின்சார சபை மற்றும் அரசாங்கத்திற்கு மிகவும் சாதகமானதாக அமையும். 
இதற்கு முன்னர் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டிருந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்படாத 18 சாதகமான நிபந்தனைகளை அதில் உள்ளடக்குவதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு பரிந்துரைத்ததுடன் இலங்கை மின்சார சபை மற்றும் லக்தனவி நிறுவனம் அந்த சாதகமான நிபந்தனைகளை உள்ளடக்க உடன்பட்டது. அதற்கமைய இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதலளித்த 300 மெகாவொட் திறன்கொண்ட திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தம் மின்சார பாவனையாளர்கள், அரசாங்கம் மற்றும் இலங்கை மின்சார சபைக்கு மிகவும் சாதகமான ஒப்பந்தமாகும். 
இவ் ஒப்பந்தத்தின் கீழ் 20 வருட காலத்திற்கு மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 20 வருட ஒப்பந்த காலத்தின் பின்னர் மின் உற்பத்தி நிலையத்தை இலங்கை மின்சார சபையின் அதிகாரத்திற்கு கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மின் உற்பத்தி நிலையத்தினால் விநியோகிக்கப்படும் மின் அலகொன்றின் விலை ரூபாய் 14.98 ஆகும். டீசல் மற்றும் திரவ இயற்கை வாயு ஆகிய இரு எரிபொருள் வகைகளை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடியதுடன் எல்.என்.ஜி. எனப்படும் இயற்கை எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் வரை முதல் கட்ட உற்பத்தி நடவடிக்கைகள் டீசல் எரிபொருள் பாவனையுடன் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மின் உற்பத்தி நிலையத்திற்கான ஒப்புதல்களை வழங்கும்போதும், தொடர்புடைய ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்யும்போதும் மின் உற்பத்தி நிலையத்தை விரைவாக நிர்மாணிப்பதையும் அதன் சாதகமான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையிலேயே இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு செயற்பட்டது.
இந்த திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையத்திற்கான விலை மனு (டெண்டர்) கோரிக்கையை இ.மி.ச. 2016 நவம்பர் 15ஆம் திகதி முன்வைத்தது. அதற்கான அனுமதி இரு தினங்களில் அதாவது 2016 நவம்பர் 17ஆம் திகதி வழங்கப்பட்டது.
விலை மனு ஊடாக இந்த மின் உற்பத்தி நிலையத்தை நிறுவுவதற்கு தகுதியான நிறுவனமொன்றை தெரிவுசெய்யும் பொறுப்பு இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படுவதுடன், இந்த மின் உற்பத்தி நிலையத்தின் விலை மனு (டெண்டர்) நடவடிக்கை நிறைவுசெய்வதற்கு நான்கு ஆண்டுகளாகியுள்ளன.
விலை மனு (டெண்டர்) நடவடிக்கைகள் நிறைவுசெய்யப்பட்டு தகுதிவாய்ந்தரப்பு தெரிவுசெய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த மின் கொள்முதல் ஒப்பந்தம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக 2020 ஒக்டோபர் 09ஆம் திகதியே கிடைத்தது. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கும் விலை மனு (டெண்டர்) கோரப்பட்ட ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்திற்கும் இடையே முரண்பாடுகள் காணப்படுவதாக ஆணைக்குழு மறுஆய்வின்போது தெரியவந்தது.
விசேடமாக முதல் ஒப்பந்தத்தில் அடங்கும் சாதகமான 18 நிபந்தனைகள் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டிருந்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. அந்த நிபந்தனைகள் நீக்கப்பட்டமையால் மின்சார பாவனையாளருக்கும், அரசாங்கத்திற்கும், இலங்கை மின்சார சபைக்கும் பாதகமான விளைவுகள் ஏற்படும் என்பதால் இந்த நிபந்தனைகளை மீண்டும் ஒப்பந்தத்தில் உள்ளடக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பரிந்துரைத்தது.
அத்திருத்தங்களுக்கு அமைய இறுதி மின் கொள்முதல் ஒப்பந்தத்திற்கான ஒப்புதல் 2020 நவம்பர் 25ஆம் திகதி வழங்கப்பட்டது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமைய இறுதி ஒப்பந்தத்திற்கான திருத்தங்களை மேற்கொண்டு இலங்கை மின்சார சபையினால் மின் கொள்முதல் ஒப்பந்தம் இறுதி ஒப்புதலுக்காக 2020 டிசம்பர் 1ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 
2020 டிசம்பர் மாத ஆரம்பத்தில் ஆணைக்குழுவின் அப்போதைய உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்ததுடன், ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் 2021 பெப்ரவரி மாதம் முதலாம் வாரத்திலேயே நியமிக்கப்பட்டனர். புதிய ஆணைக்குழு உறுப்பினர்களின் முதலாவது கூட்டத்தில் 300 மெகாவொட் திறன்கொண்ட திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
எதிர்கால மின்சார தேவையை பூர்த்தி செய்வதற்காக 300 மெகாவொட் திறன் கொண்ட திரவ இயற்கை வாயு மின் உற்பத்தி நிலையத்தை விரைவில் நிறுவுவதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொள்ளும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எதிர்பார்க்கிறது போன்ற விடயங்களும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள.
Previous articleமியான்மார் நாட்டு நிகழ்வுகளுடன் ஒப்பிட முடியாது – தியாகராஜா வரதாஷ்
Next articleஅதிகார போட்டியில் பாதிக்கப்பட போவது எங்கள் மக்களே – அனந்தி சசிதரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here