பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் தெரிவு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கான ஐந்து புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனக ரத்நாயக்க தலைவராகவும், திருமதி சதுரிக்கா விஜேசிங்க, மோஹான் சமரநாயக்க, உதேனி விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் ஜனக ஏகநாயக்க ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நேற்று ஒன்றுகூடிய பாராளுமன்ற பேரவை கூட்டத்திலேயே ஜனாதிபதியால் முன்மொழியப்பட்ட இந்த ஜவரும் பேரவையின் பெரும்பான்மையான உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
பாராளுமன்ற பேரவையானது நேற்று  6 வது முறையாக கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் பிற்பகல் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க் கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச, கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்லஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கபீர் ஹஷீம் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸனாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போதே இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமிப்பதற்கு, 2002ம் ஆண்டு 35ம் இலக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்திற்கு அமைய பாராளுமன்ற பேரவைக்கு முன்வைக்கப்பட்ட மேலே குறிப்பிடப்பட்டுள்ள பெயர்களுக்கு பேரவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு இதுவரை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமிக்காமை தொடர்பாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சேவையாளர்கள் சங்கம் பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தது.
அக்கடிதத்திலே பின்வரும் விடயங்கள்  குறிப்பிடப்பட்டிருந்தன.
ஆணைக்குழு உறுப்பினர்கள் ஐவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை வழங்கி ஒருமாதத்துக்கும் மேலாகின்றது, இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஐவருக்கு பதிலாக ஆணைக்குழுவுக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கவேண்டிய பொறுப்பு அமைச்சருக்கே உண்டு.
இது தொடர்பாக 2002 ஆம் ஆண்டின் 35 ஆவது இலக்க இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைகுழுச் சட்டத்தில்  4 (4) பிரிவின் படி ஆணைக்குழுவுக்கான தவிசாளர் துறைக்கு பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்பட வேண்டும். 
அந்த வகையில் தற்பொழுது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைகுழு நிதியமைச்சின் கீழ் இருக்கின்ற நிலையில் அமைச்சிற்கு பொறுப்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆணைக்குழு உறுப்பினர்களை அரசியலமைப்பு பேரவையின் (தற்பொழுது பாராளுமன்ற பேரவை) ஒருமைப்பாட்டுடன் நியமிக்க வேண்டியவராக உள்ளார்.
குறித்த வெற்றிடங்களை சமர்ப்பித்து ஒரு மாத காலத்துக்குள் உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். இதுவரை இந்த வெற்றிடம் நிரப்பப்படாமல் இருக்கின்றது எனவே இதற்கு பொறுப்பான பிரதமர் இதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
ஆணைக்குழுவுக்கு உறுப்பினர்களை நியமிக்காததன் காரணமாக ஏற்கனவே  திரவ இயற்கை எரிவாயுவிற்கான வழங்கிய அனுமதியைத் தொடர்ந்து விலைமனுக் கோரல்களினூடாக மின்சாரத்தில் குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவது தாமதமாகின்றது, அனுமதிக்கப்பட்ட மின்சார விலையை மீளப்பரிசீலனை செய்தல், தொகை மின்சார விநியோக உரிமையாளர்களிற்கான விலை தீர்மானிப்பு மற்றும் பொது மக்களுக்கான மின்சார கட்டணங்கள் தொர்பான ஆராய்வு போன்ற பல விடயங்கள் தாமதமாகின்றன எனவும் அக்கடிதத்திலே குறிப்பிடப்பட்டிருந்தன.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தொடர்பான முன்னைய விடயங்களை கீழ்வரும் இணைப்பில் பெற்றுக் கொள்ளலாம்.
https://medialk.com/tamil/archives/337
Previous articleமியன்மார் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளின் கைதானது ஜனநாயகத்திற்கு விடுக்கும் அச்சுறுத்தல்
Next articleஅனைவரையும் மக்களாகப் பாருங்கள் – எம்.ஏ.சுமந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here