ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் – ரிஷாட் பதியுதீன்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு ஒத்துழைப்பை வழங்குமாறு முஸ்லிம் சமூகத்திடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது முக்கிய நகரங்களில் நடை பவனியாகவும் ஏனைய இடங்களில் வாகனப் பேரணியாகவும் நடைபெற உள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் பதிவிட்டுள்ளதாவது, 
“சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டம், நாளை (03) தொடங்கி, ஆறாம் திகதி வரை நடைபெற உள்ளது.
நில ஆக்கிரமிப்பு, திட்டமிட்ட குடியேற்றம், தொல்பொருள் என்ற போர்வையில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பூர்வீக வாழிடங்களை ஏப்பமிடல், பேரினவாத அழுத்தங்களுக்கு அடிபணியும் அரசின் போக்குகள், ஜனாஸா எரிப்பு என்பவற்றைக் கண்டித்தே இந்த கண்டன நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் என்ற வகையில், முஸ்லிம் சமூகமும் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது. 
எனவே, எமது சகோதர சமூகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நடைபவனிக்கு, முஸ்லிம் சமூகமும் தமது ஒத்துழைப்பை வழங்க  வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கிறது.” 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here