“இராணுவ சர்வாதிகாரம் மேலோங்கினால் அதனை கடுமையாக எதிர்ப்போம்”

இலங்கை என்ற ஸ்ரீலங்காவுக்கும், பர்மா என்ற மியான்மாருக்கும் இடையில் பற்பல ஒற்றுமைகள் இருப்பதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மியன்மார் நாட்டின் ஆட்சியாளரும் வெளிவிவகார அமைச்சருமான ஆங் சன் சூகி உள்ளிட்ட மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த சில முக்கியஸ்தர்கள் இராணுவத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தனது முகநூலில் மனோ கணேசன் அவர்கள் பதிவிட்டுள்ளதாவது,
“முன்னாளில் பர்மா என்றழைக்கப்பட்ட மியன்மார் நாட்டில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி, ஆங் சான் சூகீ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை உள்ளே தள்ளி விட்டதாம். 
கடந்த காலத்தில் இந்த ஆங் சான் சூகீயை பல்லாண்டுகள் பர்மிய இராணுவம் வீட்டுக்காவலில் வைத்த போது உலகமே அவருக்காக பரிந்து பேசியது. 
இப்போது அத்தகைய பரிவை ஆங் சான் சூகீ எதிர்பார்க்க முடியாது. 
காரணம், பெளத்த நாடான மியான்மரில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்களை, இதே இராணுவம் படுகொலை செய்தபோது, அதற்கு எதிராக உலகம் அணி திரண்ட போது, அப்போது நோபல் பரிசு பெற்றிருந்த இந்த ஆங் சான் சூகீ என்ற பர்மிய பெண் அரசியல் தலைவர் நியாயம் தவறி தனது நாட்டு இராணுவத்தின் பர்மிய பெளத்த இனமத வெறியை கண்டிக்க தவறியதுடன், ஒடுக்கப்பட்ட அப்பாவி  ரோஹிங்யா முஸ்லிம்களையே குற்றம் சாட்டினார். 
அவருக்கு நோபல் பரிசு வழங்கி அங்கீகரித்த உலக ஆதரவை,  நடுநிலைமை தவறியதால் இவர் இழந்தார் என்றும் சொல்லலாம்.
பர்மாவில் ஜனநாயகம் வீழ்ந்து, இராணுவ சர்வாதிகாரம் மேலோங்குவதை கடுமையாக எதிர்ப்போம். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 
ஆனால், ஆங் சான் சூகீக்காக, “ஆங்.. பாவமே” என முன்ன மாதிரி இப்போ நம்மாள அலற முடியாது. வெரி சொரி..!
இலங்கை என்ற ஸ்ரீலங்காவுக்கும், பர்மா என்ற மியான்மாருக்கும் இடையில் பற்பல ஒற்றுமைகள் உள்ளன.   
இங்கேயும் இப்படி நடந்தால் உயிரை துச்சமாக கருதி எதிர்ப்போம். ஆனால் எந்த தனி நபருக்கும் பரிவு காட்ட முடியாது. அப்படி பரிவு காட்ட இங்கே தேசிய தலைவனோ, தலைவியோ கிடையாது..!”
மியன்மார் நாட்டில் அண்மையில் இடம்பெற்ற தேர்தலை தொடர்ந்து நாட்டின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத்தினருக்கும் சிவில் அரசாங்கத்திற்கும் இடையே முறுகல் நிலை அதிகரித்து வந்திருந்தது. இதன் பின்னணியில் இராணுவ சதிப்புரட்சி தொடர்பான அச்சம் அதிகரித்திருந்தமையும் சுட்டிக்காட்டத் தக்கதாகும்.
இப்படியான ஒரு சூழலில் தான் நேற்று மீண்டும் மியன்மார் இராணுவத்தினரால் ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஓர் ஆண்டுக்கு அவசரகால நிலையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஆட்சியாளர்களின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக அமைதிவழியில் ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்தமைக்காக 1991ம் ஆண்டு சமாதானத்திற்கான  நோபல்  ஆங் சன் சூகிக்கு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
Previous articleஅரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மற்றொரு ஆணைக் குழு
Next article“இலங்கையை ஒரு சுதந்திர நாடாக காட்ட முயற்சி”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here