அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மற்றொரு ஆணைக் குழு

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையிலுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
உயர் நீதிமன்ற நீதியரசர்  பிரியந்த  ஜயவர்தனவின் தலைமையிலான மூவர் கொண்ட  இந்த ஆணைக்குழுவில் உயர் நீதிமன்ற நீதியரசர் குமுதுனி விக்ரமசிங்க மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ரத்னப்பிரிய குருசிங்க ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
1978 ஆம் ஆண்டின் விஷேட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுக்கள் ( விசேட ஏற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்ட, தேசிய அரசுப் பேரவையின் 7 ஆம் இலக்க விஷேட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய  இந்த ஆணைக் குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக 2021 ஜனவரி 29 ஆம் திகதியிடப்பட்ட 2212/53 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி தொடக்கம் 2019 நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையிலுள்ள பரிந்துரைகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
குறித்த அறிக்கையில் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்து அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை ஏற்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. அதற்கமையவே இந்த ஆணைக் குழு, ஜனாதிபதியால் தனக்குள்ள அதிகாரத்துக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக  வர்த்தமானி அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பரிந்துரைகள் தொடர்பில் விமர்சனம்:
அரசியல் பழி வாங்கல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவின் பரிந்துரைகளானது, மேல் நீதிமன்றில் விசாரணையில் உள்ள 61 வழக்குகள் உட்பட 79 வழக்குகளின் பிரதிவாதிகளை விடுதலை செய்ய பரிந்துரை செய்துள்ளதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாணைக் குழுவின் அந்த அறிக்கையானது நாட்டின் சட்டத்தை  குறைத்து மதிப்பிடும் வகையிலும், நீதித் துறை மீது அழுத்தம் பிரயோகிக்கும் வண்ணமும் அமைந்துள்ளதாக அவ்வமைப்பு கூறுகின்றது.
அரசியல்வாதிகளுக்கான விடுதலை:
ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சார்பில் நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட  சட்டத்தரணி சுனில் வட்டகல, அரசியல் பழி வாங்கல்கள் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு, ஒரு விடயப்பரப்பு வழங்கப்பட்டிருந்த போதும், விடயப்பரப்புக்கு அப்பால் சென்றும் அவ்வாணைக் குழு வேலைப் பார்த்துள்ளதாக கூறினார்.
‘ கம்மன்பிலவுக்கு எதிராக மேல் நீதிமன்றிலும் நீதிவான் நீதிமன்றிலும் நிலுவையில் உள்ள  வழக்கானது, அவரது தனிப்பட்ட கொடுக்கல் வாங்கலுடன் தொடர்புபட்ட விடயமாகும். எனினும் இந்த ஆணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டிலிருந்தும் விடுவித்து பரிந்துரை செய்துள்ளது.  அவர் விடயப் பரப்புக்கு உட்பட்ட ஒருவர் அல்ல. அவர் அமைச்சரவை அமைச்சர்.
மற்றொரு சம்பவமும் இதனை ஒத்து உள்ளது. மஹிந்த கஹந்தகமகே. அவர் மாகாண சபை உறுப்பினர். அவருக்கு எதிராக விசாரிக்கப்பட்டுவரும் வழக்கிலிருந்து அவரை விடுவிக்க பரிந்துரைத்துள்ளனர்.
பிள்ளையானுக்கு எதிரான சம்பவம், பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான  வழக்குகளும் அவ்வாறே.  இதே போல் பல சம்பவங்கள் உள்ளன. இது ஆணைக் குழு தனது அதிகாரத்துக்கு அப்பால் சென்று செயற்பட்டமையைக் காட்டுகின்றது.
துமிந்த சில்வா விவகாரமும் புதிய ஆணைக் குழுவும்:
துமிந்த சில்வாவுக்கு எதிராக வழக்கு விசாரிக்கப்பட்ட விதம் பிழை எனக் கூறி அவரை விடுவிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் உயர் நீதிமன்றில் மேன் முறையீட்டு மனு தொடர்பிலும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
தற்போது அரசியல் பழி வாங்கல் குறித்த விசாரணை ஆணைக் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த மற்றொரு ஆணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக் குழுவின் தலைவரான நீதியரசர் பிரியந்த ஜயவர்தன,  துமிந்த சில்வாவின் மேன்முறையீட்டு மனுவில் மரண தண்டனையை உறுதி செய்த நீதியர்சரகள் குழாமில் இருந்தார்.  அவர் இவ்வழக்கு தொடர்பில் எவ்வாறான பரிந்துரையொன்றினை வழங்கவுள்ளார் என்பதையே நாமும் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.’ என சட்டத்தரணி சுனில் வட்டகல குறிப்பிட்டார்.
இந் நிலையில் அடுத்து வரும் 3 மாதங்களுக்குள் விசாரணைகளை மேற்கொண்டு தீர்ப்புகளுக்கு அமைய வழங்க வேண்டிய தண்டனைகளை குறிப்பிட்டு இறுதி அறிக்கை அல்லது இடைக்கால அறிக்கையொன்றை தம்மிடம் கையளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தாம் நியமித்த புதிய விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி ஆணைக்குழு கவனத்திற்கொள்ள வேண்டிய 4 முக்கிய விடயங்கள் தொடர்பிலும் அதி விசேட வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய, வழங்கப்பட்ட சத்தியப் பிரமாணத்தை மீறுதல் மற்றும் அரசியலமைப்பின் ஏற்பாடுகளை மீறுதல் என்பன முதலாவது விடயமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டாவது விடயமாக அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் அல்லது அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தல், தலையீடு செய்தல், மோசடி செய்தல், ஊழல், குற்றவியல் துஷ்பிரயோகம், குற்றவியல் நம்பிக்கை மீறல் அல்லது உறவினர்களுக்கு சலுகை செய்தல் ஆகிய விடயங்கள் குறித்தும் இந்த ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும் என பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
ஒருவரிடமிருந்து அரசியல் ரீதியாக பழிவாங்கப்படல் மூன்றாவது விடயமாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவருக்கு நியமனம் வழங்கப்படும்போது அல்லது நியமனம் செய்யும்போது, பதவி உயர்வு வழங்கும்போது சேவையை முடிவுறுத்தும்போது ஏதேனும் முறைகேடு, ஏதேனும் எழுத்துமூலமான சட்டமீறல்கள் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பில் பிரதிவாதிகள் எந்தளவிற்கு பொறுப்புக்கூற வேண்டும் என்பதை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
1978 ஆம் ஆண்டின் ஏழாம் இலக்க விசேட ஜனாதிபதி ஆணைக்குழு சட்டத்தின் ஒன்பதாம் பிரிவிலுள்ள ஏற்பாடுகளுக்கு அமைய, குறித்த அறிக்கையின் பிரகாரம் யாரேனும் ஒருவரை சமூக இயலாமைக்கு உட்படுத்துவதற்கு பரிந்துரை செய்வதற்காகவும் இந்த ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Previous article“மலையக மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதே சாத்தியமான தீர்வு”
Next article“இராணுவ சர்வாதிகாரம் மேலோங்கினால் அதனை கடுமையாக எதிர்ப்போம்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here