மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து இடம்பெறும் அபாயகரமான பாதையில் இலங்கை- ஜ.நா அறிக்கை

கடந்த புதன்கிழமை (27) ஜெனீவா வெளியிட்டுள்ள ஜ.நாவின் புதிய அறிக்கையொன்றில் இலங்கை தொடர்ந்தும் அபாயகரமான பாதையில் பயணிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அரச செயற்பாடுகள் அதிகரித்தளவில் இராணுவ மயமாக்கப்பட்டு வருவதாகவும், இனவாதத்தையும் கடும்போக்கு தேசிய வாதத்தையும் தூண்டுகின்ற  சொற்பிரயோகங்களின் பாவனை அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதுடன்  சிவில் சமூகத்தை அச்சுறுத்துகின்ற கவலையூட்டும் செயற்பாடுகளும்  அதிகரித்திருப்பதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போதைய அரசாங்கமானது புலன் விசாரணைகள் மற்றும் வழக்குகள் என்பவற்றை முனைப்பான விதத்தில் தடுத்து வருவதாகவும், பாரதூரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் என்பவற்றுக்கான தண்டனை விலக்குரிமையை  முன்னரை விட அதிகரித்திருக்கின்றது என்பதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை பாதுகாவலர்கள், சட்டத்தரணிகள்,இதழியலாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை மீறல்களினால் பாதிக்கப்பட்டவர்கள்,அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் அனைத்து வகையான கண்காணிப்புக்களையும் உடனடியாக நிறுத்துமாறு உயர் ஆணையாளர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் தரப்பினர் அதிகளவில் புறமொதுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகமானது ஏப்ரல் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்தும் , கொவிட் 19 பெருந்தொற்றின் பிண்ணனியிலும் அதிகரித்த அளவில் தாக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நீதிக்கென பாதிக்கப்பட்டவர்களும், அவர்களுடைய குடும்பத்தினரும் திடசங்கற்பத்துடன் கூடிய விதத்தில் துணிச்சலாக, தொடர்ச்சியாக எழுப்பிவரும் வேண்டுகோள்களுக்கு செவிமடுக்க வேண்டுமெனவும், இனிமேலும் இடம்பெறக் கூடிய அத்துமீறல்கள் குறித்த முன்னெச்சரிக்கைச் சமிக்ஞைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் நான் சர்வதேசச் சமூகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்ட  ஐ.நா மனித மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சலி பெச்லெட் ஐ நா உறுப்பு நாடுகள் திட்டவட்டமான விதத்தில் இது தொடர்பாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த அறிக்கை பெப்ரவரி 24 ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் முறையாக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Previous articleஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்த சந்தேக நபரான மாத்தளை சஹ்ரானுடன் அரச உளவு சேவை அதிகாரியின் தொடர்பு!
Next article“இலங்கை மனித உரிமைகள் தொடர்பில் கொண்டுள்ள கரிசனையிலேயே அதன் எதிர்காலம் தங்கியுள்ளது”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here