கால்நடை உரிமையாளர் தாக்கப்பட்டாரா? , கேப்பாபுலவு கிராமத்தில் சம்பவம்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தலைமையகம் அமைந்துள்ள கேப்பாபுலவு இராணுவ முகாமுக்குள் கால்நடைகள் உள்நுழைந்தமைக்காக கேப்பாபுலவு மாதிரிகிராமத்தை சேர்ந்த மாட்டின்  உரிமையாளர் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைக்க பட்டுள்ளார் . 

குறித்த சம்பவம் 25ஆம் திகதி மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த கால்நடைகளின்  உரிமையாளர் அழகராஜா ராஜரூபன் , 

வழமைபோன்று நேற்றையதினம்(25) பசுமாடுகளை மேய்ச்சல் முடிந்து பட்டிக்கு அடைப்பதற்காக கேப்பாபுலவு முகாமுக்கு முன்பாகவுள்ள வீதியால்  கலைத்து சென்ற  வேளை முன்னால் சென்றுகொண்டிருந்த மாடுகள் கேப்பாபுலவு கிராமத்தில் உள்ள இராணுவ முகாம் வேலியின் உட்புறத்தில் உள்ள  புற்களை வேலிக்குள்ளால் தலையை நுழைத்து மேய்ந்ததோடு தொய்ந்திருந்த  வேலியை அறுத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளது .

பின்னால் மாடுகளை மேய்த்துக்கொண்டு வீதியால் வந்துகொண்டிருந்த என்னை அழைத்த இராணுவம் உனது மாடுகளா இவை என கேட்டார்கள் ? நான் எனதுமாடுகள் தான் என கூறியதும் வேலியை வெட்டி உள்ளே மாடுகளை விடுகின்றாயா ?? என கேட்டு என்னை தாக்கியத்துடன் எனது கழுத்தை பிடித்து நெரித்து திருகியதுடன் கையில் வைத்திருந்த பொல்லுகளால் என்னை தாக்கினார்கள் பின்னர் முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி மூலம் அழைத்து அங்கிருந்து வந்த வாகனத்தில் இராணுவத்தினர் 20 பேருக்கு மேற்பட்டோர்  என்னை வலுக்கட்டாயமாக எனது ஆண் உறுப்பில் பிடித்து வாகனத்துக்குள் தூக்கி எறிந்தனர்.

பின்னர்  இராணுவ பொலிஸார்   சிலரும் பொலிஸாரும்   முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று வாக்குமூலம் பெற்றுக்கொண்டதோடு நான் வேலி கம்பிகளை வெட்டியே மாடுகளை உள்ளே விட்டு  மேய்த்ததாகவும் இனிமேல் மாடுகளை உள்ளே விட்டால் மாடுகளையும் வேலிக்கு அண்மையாக நீ வந்ததால் உன்னையும் சுட்டு கொன்றுவிட்டு அத்துமீறி இராணுவ முகாமுக்குள் நுழைந்ததாக சொல்லுவோம் எனவும் தெரிவித்தனர். 

மீடியாவுக்கு யார் இந்த செய்தியை சொன்னது ?? மீடியாவுக்கு எல்லாம் சொல்ல கூடாது எனவும் பொலிஸார் எச்சரிக்கை செய்துவிட்டு இரவு என்னை விடுவித்தனர். 

இன்றுவரை இராணுவ முகாமுக்குள் சென்ற மாடுகள் பல இன்னும் வெளியில் விடப்படவில்லை மாடுகள் உள்ளே நிற்பதால் கன்றுகள் இராணுவ முகாமை சுற்றியே கத்திக்கொண்டு நிற்கின்றன எனக்கு இராணுவ முகாமுக்கு அண்மையாக சென்று மீதமுள்ள மாடுகளை மேய்க்க பயமாக இருக்கிறது . அவர்கள் சொன்னது போலவே சுட்டுகொன்றுவிட்டு கேஸை மாத்துவார்களோ என்றே பயப்பிடுகின்றேன். நான் வேலியை வெட்டி மாடுகளை உள்ளேவிட்டு மேய்த்தேன் என்பது பொய் வீதியின் அருகே அங்கங்கே காவலரண்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அங்கே இருக்கும் இராணுவத்தை மீறி என்னால் எப்படி வேலியை வெட்டி உள்ளே விடமுடியும் ? 

இராணுவம் முகாமை சுற்றி CCTV  கமெராக்களை பொருத்தியுள்ளது அதை வேண்டுமானால் அவர்கள் சோதித்து உண்மையை அறியட்டும் . இராணுவம் என்னை தாக்கியதில் கழுத்து பகுதியிலும் கை பகுதியிலும் நகங்களால் கீற பட்ட காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு பல இடங்களில் கண்டல் காயங்களும் ஏற்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாக கொண்ட நான் கால்நடைகளுக்கு மேய்ச்சல் இல்லாத நிலையில் மிகுந்த துன்பங்களுக்கு மத்தியில் அவற்றை பராமரித்து வரும் நிலையில் இராணுவம் இவ்வாறு என்னை தாக்கியதோடு இராணுவ முகாமுக்கு உள்ளே சென்ற மாடுகளை இன்னும் வெளியில் விடாமல் அடைத்து வைத்துள்ளனர். 

எனக்கு இராணுவத்தினரிடமிருந்து இனி வரும் நாட்களில் பாதுகாப்பு அச்சம் இருப்பதோடு இராணுவம் வைத்துள்ள மாடுகளையும் வெளியில் விடவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.  என தெரிவித்தார்.

 

இது தொடர்பில் இராணுவப் பேச்சாளர் நிலந்த பிரேமரத்ன அவர்களைத் தொடர்பு கொண்டு வினவிய போது, வேலிக் கம்பிகளை வெட்டி மாடுகளை மேய விடுகின்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் இடம் பெற்றிருப்பதாகவும், குறித்த கால்நடை உரிமையாளர் அவ்வாறு செய்யும் போது இராணுவத்தினரிடம் மாட்டிக் கொண்டார் எனவும் தெரிவித்தார். மேலும் கால்நடை உரிமையாளர் தாக்குதலுக்கு உள்ளானார் என்பதில் எவ்வித உண்மையுமில்லை என்றும் தெரிவித்தார்.

கேப்பாபுலவு கிராமத்தில் ஒரு பகுதி ஏற்கனவே மக்களின் தொடர் போராட்டம் காரணமாக விடுவிக்க பட்டுள்ளதுடன் மக்களின் குடியிருப்புகள் அடங்கிய  கிராமத்தின் மறுபகுதி பூரணமாக இராணுவத்தின் பிடியில் உள்ளமையும் குறிப்பிடதக்கது.

Previous articleபுதைக்கப்பட்ட கொலையை வெளிக்கொணர்ந்த சுகீர்தராஜன்: ஊடகவியலாளரின் 15 வது நினைவஞ்சலி
Next articleஇலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பாக பிரிட்டன் தூதுவர் ருவிட்டர் செய்தி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here