புதைக்கப்பட்ட கொலையை வெளிக்கொணர்ந்த சுகீர்தராஜன்: ஊடகவியலாளரின் 15 வது நினைவஞ்சலி

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் 24 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள கிழக்கு ஊடகவியலாளர்களின் சங்க மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இவர் 2006ம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு அருகில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
கொலை செய்யப்படும் போது 38 வயதை அடைந்திருந்த இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார். தேசிய மற்றும் சர்வதேச அளவில் பேசப்பட்ட திருகோணமலை மாணவர்களின் படுகொலை சம்பந்தமாக இவரால் வெளியிடப்பட்ட செய்திகளே  இவரின் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அப்போது அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்திருந்த ஆளுனர்  காரியாலயத்தில் வைத்து இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றிருந்த போதும் இதுவரை இக்கொலைச்சம்பவத்துடன் தொடர்பான எந்த ஒரு குற்றவாளியும் அடையாளம்  காணப்படவில்லை. மாறாக சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
பாடசாலை மாணவர்கள் படுகொலை
2006 இல் உயர்தரக் கல்வியை முடித்த பின்பு, பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்கள், திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் படுகொலை செய்யப்பட்டனர்.ஆனால் குறித்த 05 மாணவர்களும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் என்றும், தாக்குதல் ஒன்றிற்காக எடுத்து சென்ற குண்டு வெடித்ததிலேயே அவர்கள் கொல்லப்படார்கள்  என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் சுடர் ஒளி மற்றும் உதயன் பத்திரிகைகளின்  திருகோணமலை பிரதேச ஊடகவியலாளராக கடமையாற்றிக் கொண்டிருந்த சுகீர்தராஜன் இந்தக் கொலை தொடர்பான உண்மையினை தெரிந்து கொள்ள முயற்சி எடுத்தார். இதனடிப்படையில் தனது ஊடக நண்பனான மொகமட் சாலி என்பவருடன் குறித்த சடலங்கள்  வைக்கப்பட்டிருந்த திருகோணமலை வைத்தியசாலையின் பிணவறைக்குச் சென்று தகவல்களை திரட்டிக் கொள்கிறார். சுகீர்தராஜனை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்ட ஊடகங்கள் குறித்த மாணவர்களின் சடலங்களை பார்க்கும் போது அவர்கள் மிக அருகில் இருந்தவர்களால் சுடப்பட்டுள்ளார்கள் என்றும் மாணவர்களின் சடலங்களில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் குண்டடிக் காயங்களை அவதானிக்க முடியுமாக இருந்ததாகவும் செய்தி வெளியிட்டன.
அறிந்துகொள்ளல் 
குறித்த சடலங்களிலிருந்து அவசியமான பகுதிகளை நிழற்படமாக்கிக் கொண்ட சுகீர்தராஜன் அவற்றை சுடரொளியின் அட்டைப்படமாக பிரசுரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
இந்த தகவலின் விளைவாக, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கமும், குறித்த மாணவர்களின் மரணம் தொடர்பாக ஊடகங்களும் அளித்த அறிக்கைகள் சர்ச்சைக்குரியவையாக மாறத் தொடங்கின.இதனைத் தொடர்ந்து, அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியிருந்தது.  ஆனால் அதன் இறுதி அறிக்கைகள் வெளிவரவில்லை.  மறுபுறத்தில் சுகிர்தராஜனின் இந்த துணிச்சலான செயற்பாடு  உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் பலரினது கவனத்தையும் பாரியளவில்  ஈர்த்தன.
அதியுயர் பாதுகாப்பு வளையம்
இந்த சம்பவம் குறித்து செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டு இரண்டு வாரங்களுக்குப் பிறகு, 2006 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை நேரத்தில், சுகிர்தராஜனின்  வீட்டிற்கு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் இவரை கொலைசெய்துவிட்டு தப்பிச் சென்றனர். இந்தக் கொலையானது அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இடம்பெற்றது என்பது ஒரு விஷேடமான நிகழ்வாகும். 
Previous articleகட்டாய தகனத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருமாறு ஜக்கிய நாடுகள் வலியுறுத்தல்.
Next articleகால்நடை உரிமையாளர் தாக்கப்பட்டாரா? , கேப்பாபுலவு கிராமத்தில் சம்பவம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here