அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலே; நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை.

(அப்துல் ரகுமான்)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நினைவு தூபியானது பலவந்தமாகவே இடித்து அகற்றப்பட்டுள்ளதாக மாணவர்கள் தமது கருத்துக்களை MediaLK ற்கு தெரிவித்திருந்தனர்.
யாழ் பல்கலைக்கழக மாணவர்களில் சிலரைத் தொடர்பு கொண்ட போதே மேற்கண்டவாறு அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கடந்த 8 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்திருந்ததுடன், தமிழ்க் கட்சிகள் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் ஆதரவுடன் மாகாண ரீதியில் பூரண  ஹர்த்தால் அனுஷ்டிப்பும் இடம்பெற்றது.
இந்தநிலையில் இந்த போராட்டமானது பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா அவர்களினால் மீண்டும் அந்த நினைவு தூபியை அமைப்பதற்கான  அடிக்கல் நாட்டி வைத்ததுடன் மாணவர்களின் குறித்த  போராட்டம் முடிவுக்கு வந்திருந்தது.
இது தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவரான அனுஷன் அவர்களை இன்று (13) தொடர்பு கொண்ட போது பின்வருமாறு கருத்து தெரிவித்தார், இன, மத வேறுபாடுகளைக் கடந்து இவ்வாறான நிகழ்வுகள் இனிமேல் இடம் பெறாது இருப்பதற்கு அனைத்து சிவில் அமைப்புக்களும் குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறான நிகழ்வுகளின் பிண்ணனியில் அரசியல் ரீதியிலான அழுத்தங்களே இருந்து வருகின்றன. தற்போது எமது போராட்டங்கள் கைவிடப்பட்டிருந்தாலும் குறித்த நினைவு தூபியை அமைப்பதற்கான நடவடிக்கைகள் உடனே ஆரம்பிக்காத போது மீண்டும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படும், என்றும் தெரிவித்தார்.
இறந்தவர்களை நினைவுகூருவது உரிமை, மேலும் பொது சமூக நோக்கில் கொல்லப்பட்ட மனிதர்களை நினைவு கூரும் பல தூபிகள் தெற்கிலும் உள்ளன.எனவே யாழ் பல்கலைக்கழகத்தில் இறந்தவர்களை நினைவுகூர அமைக்கப்பட்டிருந்த தூபி அழிக்கப்பட்டதை எதிர்ப்பதாக, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கருத்து தெரிவித்திருந்தது.
தொடர்ந்து அவர்கள் குறிப்பிடுகையில் , 
நினைவுத் தூபி இடித்தழிப்பானது யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் சுயமாக மேற்கொண்ட செயல் எனக் கூறி அரசாங்கமும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் தப்பிக்க முயற்சிப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது.
யாழ். பல்கலைக்கழக நினைவுத்தூபி தகர்ப்பு தொடர்பில் தெளிவுப்படுத்திய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர். சம்பத் அமரதுங்க அவர்கள் இது தொடர்பாக குறிப்பிடுகையில், இன்று எமக்கு தேவைப்படுவது யுத்தத்தின் நினைவுதூபி அல்ல சமாதானம் மற்றும் அமைதியின் நினைவுச் சின்னங்களாகும் என்று குறிப்பிட்டார்.
நினைவுத் தூபி அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் தெளிவூட்டும் வகையில் விடுக்கப்பட்ட அறிக்கையிலேயே இதனை அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், யாழ். பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் சற்குணராஜா மிகவும் திறமையான நிர்வாகி. குறித்த நினைவு தூபியானது இன்றைய தினத்திற்கும், நாளைய தினத்திற்கும் பொருத்தமற்றது என்பதினால் அவர் அதனை நீக்குவதற்கான தீர்மானத்திற்கு வந்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தரின் இந்த தீர்மானம் காலத்திற்கேற்ற நடவடிக்கையாகும். எமக்குத் தேவைப்படுவது யுத்தத்தின் நினைவு தூபி அல்ல சமாதானத்தின் நினைவுச் சின்னங்களாகும். இதற்காக தேவையான நடவடிக்கைகளை நாம் எமது மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையிலே குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக உறிதிப்படுத்தல்களுக்காக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சற்குணராஜா அவர்களை இன்று (13) காலைத் தொடர்பு கொண்ட போது, தாம் இது சம்பந்தமாக அதிகமான கருத்துக்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருப்பதாகவும், இது தொடர்பாக மேலதிக கருத்துக்களை சொல்வதாயின் இரண்டு வாரங்களாவது செல்லும் என்றும் குறிப்பிட்டார்.
Previous articleஜனாஸாக்களை தகனம் செய்வது நியாயமில்லை
Next articleஇலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளது: மனித உரிமை கண்காணிப்பகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here