அவர்கள் எனக்கு பூரண ஒத்துழைப்பு தருகின்றனர் – திஹாரிய பொது சுகாதார பரிசோதகர்

(நிலூக சந்துன் பத்மசிறி)

கொரோனா பரவல் குறித்து மீண்டுமொருமுறை முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்த முயற்சிகள் இடம்பெறுவதாக திஹாரிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

திஹாரிய போன்ற முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கும், கொரோனா கட்டுப்பாட்டு  பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கப்படுவதில்லை என பிரதான ஊடகங்கள் அண்மையில் செய்திகளை வெளியிட்டிருந்தன.

இவ்வாறு முஸ்லிம்களை குறித்துக்காட்டும் விதமாக பல செய்திகள் வெளிவந்த போதும், சிங்கள மக்களை குறித்துக் காட்டும் விதமாகவோ அவர்களின் பிரதேசங்களை வெளிக்காட்டும் விதமாகவோ எந்த செய்திகளும் வெளிவரவில்லை என திஹாரிய பிரதேசத்தில் வசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத இளைஞர் ஒருவர் கூறினார்.
பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு திஹாரிய மக்கள் பங்களிப்பு வழங்குவதில்லையா என அந்த இளைஞனிடம் வினவிய போது, அவ்வாறு ஒரு விடயத்தை தான் ஊடகங்கள் வாயிலாகவே அறிந்ததாக கூறினார். .

‘பொய் சந்தைப்படுத்தப்படும் புதுமை ‘

பி.சி.ஆர். பரிசோதனை குறித்த ஒத்துழைப்புக்களை திஹாரிய பிரதான பள்ளிவாசலான ரவ்லா பள்ளிவாசல் முன்னெடுத்துள்ளதாகவும் அப்பள்ளிவாசல் முன்பாகவே பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அந்த இளைஞர் கூறினார்.

அவ்விளைஞன் மேலும் குறிப்பிடுகையில்,
‘ அப்படியான ஒரு நிலைமை தற்போதைக்கு இங்கு இல்லை. அனைவரும் பி.சி.ஆர். செய்துகொள்கிறார்கள்.   ஊர் மக்கள் உதவுகிறார்கள்.  பிரதான ஊடகங்கள் பொய்யை சந்தைப்படுத்தும் முறைமை புதுமையாக உள்ளது.  இங்கு இல்லாத ஒன்றினை சித்திரித்து காட்டுவது அதிசயம்.  எங்காவது சிங்கள இனத்தவர்  செய்யும் குற்றம் ஒன்று தொடர்பில் அவர்களது இனத்தை அடையாளப்படுத்தும் விதமாக செய்திகள் வெளியிடப்படுகின்றனவா? நான் அப்படி செய்திகளை கண்டதில்லை.  அத்துடன் அப்படி இனங்களை அடையாளப்படுத்தி செய்தி வெளியிட வேண்டுமா?’ என தெரிவித்தார்.

திஹாரிய தொடர்பில் இரு நாட்களில் இரு செய்திகள்

‘அத’ செய்திப் பத்திரிகையின் இணையத் தளத்தில் கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி பின்வருமாறு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
‘ திஹாரிய பிரதேச மக்கள் பி.சி.ஆர். பரிசோதனைகளை நிராகரிக்கும் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும் அது அட்டுலுகம பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு சமாந்தரமானது எனவும் கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் மிஹார ஏப்பா தெரிவித்தார். என அந்த செய்தி இருந்தது.

அதே செய்தி இணையத்தளம் மறு நாள் அதாவது டிசம்பர் 8 ஆம் திகதி பின்வருமாறு செய்தி வெளியிட்டது.
அத்தனகல்ல, திஹாரிய பிரதேச மக்கள், இன்று  விஷேட எதிர்ப்புகள் இன்றி பி.சி.ஆர். பரிசோதனைகள் குறித்து சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததாக  கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மிஹார ஏப்பா தெரிவித்தார். என அந்த செய்தி இருந்தது.

எனினும் அந்த செய்தி அறிக்கையில் அப்பிரதேச முஸ்லிம்களிடம் கருத்து கேட்டு ஏதும் அறிக்கைகள் காணப்படவில்லை.

‘ நாம் அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குகின்றோம்.’

எவ்வாறாயினும் குறித்த செய்தியில்   கூறப்பட்டுள்ள விடயம் முற்றிலும் பொய்யானது எனவும், திஹாரிய மக்கள் தம்மால் முடியுமான அதிக பட்ச ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் பிரதேசவாசியான எம்.அப்துல்லாஹ் தெரிவித்தார்.

பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் அதிகமானவற்றுக்கு முஸ்லிம்கள் ஒத்துழைத்ததாக அவர் கூறினார்.
‘ அது முற்றிலும் பொய்யானது. எம்மிடம் அவ்வாறு கூறப்படுவதைப் போல் எந்த பிரச்சினையும் இல்லை. பி.சி.ஆர். செய்ய வரச் சொன்னவுடன் செல்கிறோம். விருப்பமின்மையை வெளியிட காரணம் இல்லையே.  எங்கள் நலனுக்காக தானே கூறுகின்றனர்.  நான் அறிந்த வகையில் தற்போதும் அதிகமானோர் பி.சி.ஆர். செய்துள்ளார்கள்.  இந்த கொரோனா குறித்த தவறுகளை எங்கள் மீது சுமத்த முற்படுகின்றனர்.  அவ்வளவு தான் எனக்கு கூற முடியும்.’ என அவர் தெரிவித்தார்.

‘ எனக்கு அவர்கள் பூரண ஒத்துழைப்பு தந்தனர் ‘

தான் பொறுப்பாக உள்ள பகுதியில் 14 பள்ளிவாசல்கள் காணப்படுவதாகவும்,  அந்த பள்ளிகளில் கடமையாற்றும்  மத குருமார் உள்ளிட்ட  பிரதேசவாசிகள் தனக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும், ஊடகங்களில் கூறப்படுவதைப் போன்று திஹாரியில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் திஹாரிய பிரதேசத்துக்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்  கே.பி. டெரன்ஸ் மாதவ பரணவிதான கூறினார்.

தற்போதைக்கு அந்த பகுதியில் 563 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்காக அப்பிரதேச மக்கள் பூரண ஒத்துழைப்பினை தந்தனர்.  சில ஊடகங்கள் திஹாரியை அட்டுலுகமவுடன் ஒப்பிட்டு மணிக்கு மணி செய்திகளை வெளியிட்டாலும், திஹாரியவில் அத்தகைய பிரச்சினை எதுவும் இல்லை.

‘ இங்கு என்ன நடக்கிறது என யாரும் சரியாக அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் பொய்யான செய்திகளை வெளியிடுகின்றனர்.’ என  பிரதேச பொது சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘  அவர்கள் எனக்கு கடும் ஒத்துழைப்பை தருகின்றனர். என்னுடன் ஒன்றிணைந்து செயற்படுகின்றனர். எனக்கு உதவுகின்றனர்.  அந்த பள்ளிவாசல்களின் மெளலவிமார், தலைவர்கள் எனக்கு பாரிய ஒத்துழைப்பை தருகின்றனர்.

அவர்களின் ஒத்துழைபுடன் நான் இந்த பகுதியில் கொவிட் 19 கட்டுப்பாட்டு குழுவொன்றினையும் அமைத்துள்ளேன்.  எனவே இவற்றுடன் நாம் எந்த சிக்களும் இன்றி இப்பகுதியில் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கின்றோம்.  பொலிஸார், பிரதேச சபையினரும் ஒத்துழைப்பு தருகின்றனர்.  சிறிய சிறிய பிரச்சினைகள் இருக்கலாம். மக்களிடையே  கொஞ்சம் பயம் உள்ளது.  அது உண்மை. எனினும் நாம் ஒன்றிணைந்து வேலைகளை முன்னெடுத்து செல்கிறோம்.  தற்போதும் நான் கொவிட் கட்டுப்பாட்டு கூட்டமொன்றுக்கே செல்லப் போகிறேன்.  அங்கு கலந்துரையாடி, மிக்க ஒத்துழைப்புடன் இந்த வேலை இடம்பெறுகின்றது.  எனக்கு முஸ்லிம்கள் ஒத்துழைக்கின்றனர். சிறு சிறு பிரச்சினைகள் இருக்கலாம். ஏனைய பகுதிகளிலும் அவை உள்ளன. எனினும் முஸ்லிம்கள் எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை என கூறப்படுவது முற்றிலும் பொய்யானது.’ எனதெரிவித்தார்

‘ திஹாரியை மற்றொரு அட்டுலுகமவாக்காமல் செயற்பட வேண்டும் ‘

திஹாரியில் சிலர் ஒத்துழைப்பு வழங்குகையில் மேலும் சிலர் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலர்  எம்.பாலசூரிய இது குறித்து கேட்ட போது கூறினார்.

பிரதேசத்தில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல், வெளிப் பிரதேசங்களுக்கு பரவாமல் கட்டுப்படுத்த பிரதேச அரசியல், மதத் தலைவர்கள்  தலைமையேற்று செயற்பட வேண்டும் என அவர்  கோரினார்.
‘ திஹாரியில் சிறு சிக்கல் ஒன்று இருக்கலாம். ஆனால்  அட்டுலுகம பிரச்சினை பாரிய பிரச்சினை. நேற்று ஏற்பாடு செய்திருந்த 400 பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு அங்கு 52 பேர் மட்டுமே வந்தனர்.  இவ்வாறான நிலைமை  திஹாரியில் ஏற்பட இடமளிக்கக் கூடாது.  அதனாலேயே இந்த கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன். ‘ என அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘ திஹாரியில் பலர் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். அதனை நான் மறுக்க மாட்டேன். எனினும் அட்டுலுகம நிலைமை இதிலிருந்து வித்தியாசமானது.  அங்கு இன்றும் கர்ப்பிணித் தாய்மாருக்காக ரெபீட் என்டிஜன் பரிசோதனைகள் 80 முன்னெடுத்தோம். அதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தற்போதைக்கு அங்கு 542 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 மரணங்களும் பதிவாகியுள்ளன.  எனவே அவ்வாறான நிலைமை திஹாரியவில் ஏற்படாமல் நாம் நடந்துகொள்ள வேண்டும்.  திஹாரியில் அதிகமாக முஸ்லிம்களே வாழ்கின்றனர்.  எனவே இந் நடவடிக்கையில் பிரதேச அரசியல் மதத் தலைவர்கள் தலைமை ஏற்க வேண்டும். அவ்வாறு நடந்தால் இதனை வெளிப் பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்த முடியும்.
‘ என தெரிவித்தார்.

இது தொடர்பில் நபர் ஒருவர் தனது முகப் புத்தக கணக்கில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார்.

‘ சில ஊடகங்கள், திஹாரிய மக்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு ஒத்துழைப்பதில்லை என பிரச்சாரம் செய்கின்றன. இது அரசாங்கத்தின் இயலாமையை மறைக்க வழமையாக  செய்யும் முஸ்லிம்கள் மீது பழி போடும் யுக்தியே.  அந்த ஊடகங்கள் வேண்டுமென்றே, கடந்த நவம்பர் 30 ஆம் திகதி, திஹாரி பிரதான பள்ளிவாசலான ரவ்லா பள்ளிவாசல் முன்பாக நடாத்தப்பட்ட 87 பி.சி.ஆர். பரிசோதனைகளில் கலந்துகொண்ட 99 வீதமானோர் முஸ்லிம்கள் என்பதை ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலுக்கு அமைய பகிரங்கபப்டுத்தாமல் மறைத்தன.  அதுமட்டுமல்லாமல் கடந்த5 ஆம் திகதி அதே இடத்தில் 237 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதிலும் கலந்துகொண்ட 99 வீதமானோர் முஸ்லிம்கள். அந்த பரிசோதனைகளை நடாத்த உதவியது கூட ரவ்லா பள்ளிவாசலே.
மூன்றாவது முறையாக கடந்த 8 ஆம் திகதியும் 241 பேர் பி.சி.ஆர். பரிசோதனை தொடர்பில் பங்கேற்றனர்.  நடாத்தப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் கலந்துகொள்ளுமாறு பிரதேசத்தின் அனைத்து பள்ளிவாசல்கள் ஊடாகவும் அப்பகுதி மக்கலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதி மக்கள் பொறுப்புடன் செயற்படுவதையே இது காட்டுகின்றது.  எனினும், சில இணையத் தளங்கள், முகப்புத்தக கணக்குகள், திஹாரிய மக்கள் பி.சி.ஆர். பரிசோதனையை புறக்கணிப்பதாக செய்தி வெளியிடுவது துரதிஷ்டவசமானது.  எனவே வெட்கக் கேடான முறையில் தமது குறைகளை மறைக்க பொய்யை பிரச்சாரம் செய்யும் குறித்த நடவடிக்கையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.  சமாதானமான நாட்டை கட்டியெழுப்ப, வெறுப்பூட்டும் பிரச்சாரங்களை முன்னெடுக்காது உங்கள் சமூக பொறுப்பை சரியாக செய்யுங்கள் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.’ என அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்தவிவகாரம் தொடர்பில் கேட்க பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவை தொடர்புகொள்ள முயன்ற போதும் அது பலனளிக்கவில்லை.

( இது கடந்த டிசம்பர் 11 ஆம் திகதி வரையான தரவுகளை வைத்து எழுதப்பட்டது)

Previous articleஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுடன்  சட்டத்தரணிகள் ஆலோசிக்க அனுமதி
Next articleபொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை – ஆணைக்குழு சேவையாளர்களின் சங்கம் தெரிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here