பிள்ளையானுக்கு எதிராக விசாரணை கோரும் இலங்கை ஆசிரியர் சங்கம்

(அப்துல் ரகுமான்)

அரசியல்வாதிகளின் கூட்டங்களுக்கு பாடசாலை இசைக்குழுக்களை பயன்படுத்தக் கூடாது என தெளிவாக அறிந்த நிலையில் கொரோனா தொற்றுப் பரவலையும் பொருட்படுத்தாமல் பாடசாலை இசைக்குழுவை மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தனது அரசியல் கூட்டமொன்றுக்குப் பயன்படுத்தியமை தொடர்பில் உடனடி விசாரணையை மேற்கொள்ளுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அச் சங்கம்  வெளியிட்டுள்ள விஷேட ஊடக அறிக்கையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘ கொரோனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் மாணவர்களை கல்விசாரா ஏனைய வெளித்தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்பதனை இலங்கை கல்வி அமைச்சு மற்றும் அரசு பலதடவைகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவாகக் கூறியிருக்கின்றது.

பிள்ளையான் கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தியில் பாரிய பங்களிப்புகளை செய்துள்ளார். என்றாலும் 2020 இல் இடம்பெற்ற தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் மாவட்டங்களுக்கிடையில் மட்டக்களப்பு மாவட்டம் 23 ஆவது இடத்தை பிடித்திருக்கின்றது என கடந்த ஞாயிற்றுக் கிழமை (2020.12.07)   சிவநேச துரை சந்திரகாந்தன்  தலைமையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில்  அதிதியாக கலந்து கொண்ட, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கிழக்கு மாகாண கல்விச் செயற்பாடுகள் அரசியல் மயப்பட்டிருப்பதானது அதனுடைய பின்னடைவுக்கான காரணமாகும்.  தகுதியானவர்கள் பதவிகளுக்கு அமர்த்தப்படாமை, உத்தியோகபூர்வமற்ற இடமாற்றங்கள்
மற்றும் பலவந்தமாக மேற்கொள்ளப்படும் பழிவாங்கும் செயற்பாடுகள் என்பனவும் இந்தப் பின்னடைவுக்கு வித்திட்டுள்ளன.
இவ்வாறான வரவேற்பு நிகழ்வுகளுக்கு பாடசாலை மாணவர்களை பயன்படுத்துவதானது அந்த நிலைமையை மேலும் தெளிவுபடுத்துவதாகவுள்ளது.’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here