ஐ.எஸ். இற்கு எதிராக கவிதை எழுதிய தடுப்புக் காவலில் உள்ள இளைஞர் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை

(அப்துல் ரகுமான்)

” நவரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டு நீண்டகாலம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளைஞர் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்துமாறு இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு விஷேட கடிதம் ஒன்றினை அனுப்பி அதனூடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கலாசார ரீதியில், கலை நயத்துடன் அடிப்படைவாதத்துக்கு எதிராக இலக்கிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இவ்வாறான இளைஞர்களை காரணமின்றி கைது செய்து தடுத்து வைத்திருப்பதானது அவர்களை அடிப்படைவாதத்தின் நோக்கி அவர்களின் விருப்பமின்றியே தள்ளுவதாக அமையும். என குறித்த சங்கம் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் ஊடாக அனைவருக்கும், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதனூடக ஒருவர் சுதந்திரமாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தலாம். அது நவரசம் புத்தகத்தின் ஆசிரியருக்கும் பொருந்தும். அவர் இலக்கிய புத்தகம் ஒன்றினை எழுதியமைக்காக கைது செய்யப்பட்டுள்ளமை, அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும். அந்த புத்தகத்தில் அடிப்படைவாத விடயங்கள் உள்ளனவா என அறிந்துகொள்ள வேண்டுமாக இருந்திருப்பின் , முதலில் அப்புத்தகத்தை மொழி பெயர்த்து, அடிப்படைவாத விடயங்கள் உள்ளனவா என ஆராய்ந்து, அதன் பின்னர் ஏதேனும் சட்ட விரோத விடயம் வெளிப்படுமாக இருப்பின் நடவடிக்கை எடுத்திருக்க முடியும். எனினும் அதனை செய்யாது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அவரை முதலில் கைது செய்துள்ளது.

இந்த இளைஞன் கடந்த மே மாதம் முதல் தடுப்புக் காவலில் உள்ள நிலையில், விரைவாக இது தொடர்பில் தேடிப் பார்த்து நடவடிக்கை எடுக்குமாறு இளம் ஊடகவியலாளர் சங்கம் கோரியுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்களை தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி., சட்டத்தரணி ஹிஜாஸ் உமர் ஹிஸ்புல்லாஹ்வை கைது செய்திருந்தது. அவருடன் தொடர்புபட்ட விவகாரத்தில் இளம் கவிஞரான அஹ்னாப் ஜஸீம் என்பவரை கடந்த மே 16 ஆம் திகதி சி.ஐ.டி. கைது செய்தது. அது முதல் இதுவரை அவரை தொடர்ந்தும் சி.ஐ.டி. தடுத்து வைத்துள்ளதாக தமது சங்கத்துக்கு அறியக் கூடியதாக உள்ளது என இளம் ஊடகவியலாளர் அமைப்பு அக்கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த இளம் கவிஞர், தான் எழுதிய கவிதைகளை உள்ளடக்கி நவரசம் எனும் பெயரில் இரு புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். அதில் ஒரு புத்தகத்தின் 19 பிரதிகள் ‘ சேவ் த பேர்ள்’ எனும் அமைப்புடன் தொடர்புடைய இடமொன்றிலிருந்து சி.ஐ.டி.யினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந் நிலையிலேயே அப்புத்தகத்தின் ஆசிரியரான அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டுள்ளதாக இளம் ஊடகவியலாளர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

Previous articleநான்கு வர்த்தமானிகள் – அறிவித்தல் மட்டுமே! அரிசி விலை கட்டுப்பாட்டின் உண்மை கதை
Next articleசட்டத்தரணி ஹிஜாஸை குற்றச்சாட்டுக்கள் இன்றி 8 மாதங்களாக தடுத்து வைத்திருப்பது ஏன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here