நான்கு வர்த்தமானிகள் – அறிவித்தல் மட்டுமே! அரிசி விலை கட்டுப்பாட்டின் உண்மை கதை

(நிலூக சந்துன் பத்மசிறி)

அரசாங்கம்  அரிசிக்கான அதிகபட்ச விலையை நிர்ணயிக்கும் விதமாக 4 ஆவது  வர்த்தமானி அறிவிப்பை கடந்த 4 ஆம் திகதி வெளியிட்டது.
ஒரு கிலோ சம்பா அரிசியின்  அதிகபட்ச சில்லறை விலை 94 ரூபாவாகவும்  ஒரு கிலோ சம்பா பச்சை அரிசியின்  விலை 94 ரூபாவாகவும் , ஒரு கிலோ நாட்டரிசியின் விலை 92 ரூபாவாகவும்  ஒரு கிலோ பச்சை அரிசியின் விலை 89 ரூபா எனவும் அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயமானது, அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை அல்லவென அரசாங்க தகவல் திணைக்களம்  தெரிவித்துள்ளது. ஒரு உற்பத்தியாளர் அல்லது அரிசி ஆலை உரிமையாளர் இந்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்யக் கூடாது என்றே இந்த வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது. எனினும்   விநியோகஸ்தர்கள் அல்லது விற்பனையாளர்களால் விற்பனை செய்ய வேண்டிய அதிகபட்ச சில்லறை விலை அதில் குறிப்பிடப்படவில்லை.

இதற்கு முன்னர் வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்ட விலையை விட அதிக விலையில் அரிசி விற்பனை செய்யப்படும் நிலையிலேயே அரசாங்கம் இந்த புதிய வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம், ஒரு கிலோ சம்பாவின் அதிகபட்ச சில்லறை விலை 98 ரூபா ஆகும்.  ஒரு கிலோ நாட்டரிசியின் விலை 96 ரூபாவாகும். ஒரு கிலோ பச்சை அரிசி 93 ரூபா ஆகும். (2020 மே 28 ஆம் திகதி வியாழனன்று வெளியிடப்பட்ட 2177/9 ஆம் இலக்க வர்த்தமானியின் பிரகாரம்)
.
ஆனால் இன்று  ஒரு கிலோ அரிசியின் மொத்த விற்பனை விலை கூட,  மேலுள்ள வர்த்தமானில் உள்ள சில்லறை விலையை விட மிக அதிகமாக உள்ளது என மத்திய வங்கியின் தரவுகள் கூறுகின்றன. . இக்கட்டுரை எழுதப்பட்ட கடந்த 4 ஆம் திகதி  மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின்படி,  புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ சம்பா அரிசியின் மொத்த விலை 115 ரூபாவாகும். மரதகஹமுலவில் அதன்  விலை  114 ரூபாவாகும்.

மத்திய வங்கி அறிக்கையின்படி  கடந்த 4 ஆம் திகதி ஒரு கிலோ அரிசியின் மொத்த விலை

சம்பா அரிசி

புறக்கோட்டை  – 115 ரூபா
மரதகஹமுல – 114 ரூபா

நாட்டரிசி

புறக்கோட்டை  – 102 ரூபா
மரதகஹமுல – 104 ரூபா

வெள்ளை பச்சை அரிசி

புறக்கோட்டை – 100 ரூபா
மரதகஹமுல – 94 ரூபா

சிவப்பு பச்சை அரிசி

புறக்கோட்டை – 100 ரூபா
மரதகஹமுல – 95 ரூபா

அரசாங்கம் இதற்கு முன்னர் வெளியிட்ட வர்த்தமானியின் பிரகாரம்,  சம்பா அரிசியின் அதிகபட்ச விலை 98 ரூபாவாக குறிப்பிடப்பட்டிருந்த போதும்,  கடந்த நாட்களில்  பல பகுதிகளில் விற்பனை நிலையங்களில்  அவ்வரிசியின் விலையானது  120 ரூபா முதல் 130 ரூபா  வரை காணப்பட்டமையை நாம் முன்னெடுத்த தேடுதலில் அறிய முடிந்தது.

கடந்த  நாட்களில் சம்பா அரிசி ஒரு கிலோ 130 ரூபாவுக்கும், நாட்டரிசி ஒரு கிலோ 115 ரூபாவுக்கும்  பச்சை அரிசி ஒரு கிலோ 110 ரூபாவுக்கும்  விற்பனை செய்யப்பட்டதாக சில்லறை வியாபாரிகள் தெரிவித்தனர்.  அந் நாட்களில் செயலில் இருந்த வர்த்தமானி பிரகாரம்,  நாட்டரிசி ஒரு கிலோ 96 ரூபாவாகவும்,  பச்சை அரிசி ஒரு கிலோவின் அதிகபட்ச விலை 93 ரூபாவாகவும் இருந்திருக்க வேண்டும்.
மத்திய வங்கியின் தகவல்களுக்கு அமைய ,  கடந்த 4 ஆம் திகதி (தம்புள்ளையில்) ஒரு கிலோ சம்பா அரிசியின் சில்லறை விலை 119 ரூபாவாகும்.  ஒரு கிலோ நாட்டரிசியின் விலை 107 ரூபாவாகும்.  வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ  100 ரூபாவகும். சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ  102 ரூபாவாகும். அதன்படி, இன்று ஒரு கிலோ சம்பா அரிசியின் விலையானது முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை விட 20 ரூபா அதிகமாகும். (ஊரடங்கு உத்தரவு காரணமாக கொழும்பில் சில்லறை விற்பனை நிலையங்கள் மூடப்பட்டமையால்  கொழும்பு சில்லறை விலைகள்  கடந்த 4 ஆம் திகதி  மத்திய வங்கி அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை. தம்புள்ளை விலை மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது)

ஒரு மாதத்துக்கு முன்னரான நிலைமை:

இற்றைக்கு ஒரு மாதத்துக்கு முன்னர், அதாவது கடந்த ஒக்டோபர் 5 ஆம்திகதி மத்திய வங்கி வெளியிட்ட நாளார்ந்த விலை பட்டியலுக்கு அமைய,  சம்பா அரிசி ஒரு கிலோவின் விலை, அப்போதைய கட்டுப்பாட்டு விலையை விட  10 ரூபாவால் அதிகரித்து காணப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டது.  அப்போது சம்பா அரிசி ஒரு கிலோவின் விலை 98 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில்,  புறக்கோட்டையில் அப்போதும் சம்பா அரிசி ஒரு கிலோ 108 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.   மத்திய வங்கி அறிக்கை பிரகாரம் அன்றைய தினம் தம்புள்ளையில் ஒரு கிலோ சம்பா அரிசி 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

குறித்த மத்திய வங்கி அறிக்கை பிரகாரம்,  சம்பா அரிசி தொடர்பிலான மொத்த விற்பனை விலை கூட,  அரிசி கட்டுப்பாட்டு விலையை விட ( அதிக பட்ச சில்லறை விலை) அதிகமாக இருந்துள்ளது.

அப்போது வழக்கிலிருந்த வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம்,  சம்பா அரிசி ஒரு கிலோவின் அதிகபட்ச சில்லறை விலை  98 ரூபாவாகும்.  எனினும்  மரதகஹமுல மொத்த விற்பனை சந்தையில்,  அந்த விலையையும் விஞ்சியதாக ஒரு கிலோ சம்பா அரிசியின் மொத்த விற்பனை விலை 104 ரூபாவாக பதிவாகியுள்ளது.  அதன்படி சம்பா அரிசி ஒரு கிலோவின் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட 6 ரூபா அதிகமாகவே மொத்த விற்பனை விலை  பதிவாகியுள்ளது.

மரதகஹமுல மொத்த விற்பனை விலை கடந்த மாதத்தில் அதிகரித்த முறை

மத்திய வங்கியின் அன்றாட விலைப் பட்டியலுக்கு அமைய இற்றைக்கு ஒரு மாதத்துக்கு முன்னர் அரிசி ஒரு கிலோவின்  மொத்த விற்பனை விலை வருமாறு:

சம்பா அரிசி

புறக்கோட்டை – 100 ரூபா
மரதகஹமுல –  104 ரூபா

நாட்டரிசி

புறக்கோட்டை  –  90 ரூபா
மரதகஹமுல  –  91 ரூபா

வெள்ளை பச்சை அரிசி

புறக்கோட்டை  –  90 ரூபா
மரதகஹமுல  –  88 ரூபா

சிவப்பு பச்சை அரிசி
புறக்கோட்டை  –  88 ரூபா
மரதகஹமுல –  91 ரூபா

புறக்கோட்டை மொத்த விற்பனை விலை கடந்த மாதத்தில் அதிகரித்த முறைமை

ஒரு மாதத்துக்குள் அரிசி விலையில் ஏற்பட்ட மாற்றம்

கடந்த மாதம் 5 ஆம் திகதி மற்றும் இன்றைய நிலைமையை ( கடந்த 4 ஆம் திகதி )  தம்புள்ளை சந்தையின் விலைகளுடன் மட்டுமே ஒப்பீடு செய்ய முடியும். காரணம் கொழும்பில்   ஊரடங்கு நிலை அமுல் செய்யப்பட்டதால் கடந்த 4 ஆம் திகதி அங்கு சில்லறை விலைகள் பதிவாகவில்லை.

அதன்படி ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி ஒரு கிலோ 100 ரூபாவாக இருந்த சம்பா அரிசி, கடந்த 4 ஆம் திகதி தம்புள்ளை சந்தையில்  119  ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.  அதன்படி சம்பா அரிசி ஒரு கிலோவின் விலை 19 ரூபாவால் அதிகரித்துள்ளது.

அன்று ( ஒக்டோபர் 5) 98 ரூபாவாக இருந்த ஒரு கிலோ நட்டரிசியின் விலையானது 9 ரூபாவால் அதிகரித்து கடந்த 4 ஆம் திகதி ஆகும்போது 107 ரூபாவாக பதிவாகியுள்ளது.  அத்துடன் ஒரு மாதத்துக்கு முன்னர் 87 ரூபாவாக இருந்த வெள்ளை பச்சை அரிசி ஒரு கிலோ,  கடந்த நான்காம் திகதி 100 ரூபாவை காட்டியது. அதன்படி ஒரு மாதத்துக்குள் வெள்ளை பச்சை அரிசி கிலோவொன்றுக்கு 13 ரூபா அதிகரித்துள்ளது.
அதே போல் ஒக்டோபர் 5 ஆம் திகதி 92 ரூபாவாக இருந்த சிவப்பு பச்சை அரிசி,  கடந்த 4 ஆம் திகதியாகும் போது 10 ரூபாவால் அதிகரித்து 102 ரூபாவை விற்பனை விலையாக காட்டியது.
தம்புள்ளை சில்லறை விலை  கடந்த மாதத்துக்குள் அதிகரித்த முறைமை

அரிசி மூடையொன்றின் விலை அதிகரித்த முறை

அரசின் ஆய்வு நிறுவனம் ஒன்றான ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விலை பட்டியலுக்கு அமைய,  கடந்த ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை சம்பா அரிசி 50 கிலோ மூடை ஒன்றின் விலை 265 ரூபாவால் அதிகரித்துள்ளது. ( அந்த விலையை இன்றைய நிலைவரத்துடன் ஒப்பிட முடியாதுள்ளது. காரணம்,  கொரோனா பரவல் காரணமாக  அந்த அறிக்கை ஒக்டோபர் 23 ஆம் திகதியின் பின்னர் மீளமைக்கப்படவில்லை)

அரிசி மூடை ஒன்றின் ( 50 கிலோ) விலை கடந்த மதம் அதிகரித்த முறைமை

அத்துடன் நாட்டரிசி 50 கிலோ மூடை ஒன்றின்  விலை 150 ரூபாவாலும்,  சிவப்பு பச்சை அரிசி  மூடை ஒன்றின் விலை 100 ரூபாவாலும், வெள்ளை பச்சை அரிசி  மூடையின்  விலை 220 ரூபாவாலும் இக்காலப்பகுதியில் அதிகரித்துள்ளன.

ஒக்டோபர் 5 ஆம் திகதியுடன் ஒப்பிடுகையில் ஒக்டோபர் 23 ஆம் திகதி மொத்த விற்பனை விலை ( 50 கிலோ மூடை)

சம்பா

ஒக்டோபர் 05 –  5310 ரூபா
ஒக்டோபர் 23 –  5575 ரூபா

நாட்டரிசி

ஒக்டோபர் 05 –  4650 ரூபா
ஒக்டோபர் 23 –  4800 ரூபா

சிவப்பு பச்சை அரிசி
ஒக்டோபர் 05 –  4560 ரூபா
ஒக்டோபர்  23 –  4660 ரூபா

வெள்ளை பச்சை அரிசி

ஒக்டோபர் 05 –  4490 ரூபா
ஒக்டோபர்  23 –  4710 ரூபா

அரசாங்கத்தின் அரிசி வர்த்தமானியின் வரலாறு:

சம்பா மற்றும் நாட்டரிசி ஒரு கிலோவின் விலையை 98 ரூபாவாக நிர்ணயித்து நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் பேராசிரியர்  லலித் என். செனவிரத்ன கடந்த 2019 டிசம்பர் 19 ஆம் திகதி  வியாழக் கிழமை 2154/19  ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டார். அது  இந்த அரசாங்கத்தின்  முதல் அரிசி வர்த்தமானியாகும்.
அதற்கு முன்னர் ,  சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 85 ரூபாவாகவும், வெள்ளை நாட்டரிசி கிலோவொன்றின் விலை 80 ரூபாவாகவும், சிவப்பு நாட்டரிசி ஒரு கிலோ 74 ரூபாகாவும்  நிர்ணயிக்கப்பட்டிருந்தன. (  2019.05.31 அன்று வெளியிடப்பட்ட  2125/66 ஆம் இலக்க வர்த்தமானி பிரகாரம்)

2019 டிசம்பர் வர்த்தமானியின் ஊடாக அதிகரிக்கப்பட்ட அரிசி விலையில், மீள 2020 ஏப்ரல் 10 ஆம் திகதி 2170/7 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் ஊடாக மாற்றம் கொண்டுவரப்பட்டது.
அதன்படி  சம்பா அரிசி ஒரு கிலோ 90 ரூபாவாகவும்,  நாட்டரிசி ஒரு கிலோ 90 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டன. அந்த வர்த்தமானி பிரகாரம் பச்சை அரிசி ஒரு கிலோ 85 ரூபா என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு விலை குறைப்பினை செய்த அரசாங்கம்,  அரிசி ஆலை உரிமையளர்களின்  தேவைக்காக விலை அதிகரிப்புக்களை செய்யப் போவதில்லை என அறிவித்திருந்தது. அப்போதிருந்த கட்டுப்பாட்டு விலையை விட ஐந்து சதமேனும் அதிகரிக்க அவசியமில்லை என அப்போது அமைச்சர்கள் தெரிவித்தனர்.

எனினும் அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இரு மாதங்கள் கூட நிறைவடைய முன்னர்,  2020 மே 28 ஆம் திகதி  அந்த வர்த்தமானி அறிவித்தல் ரத்து செய்யப்பட்டது.  அதன்படி 2177/9 ஆம் இலக்க புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.  அதனூடாக மீளவும் அரிசி விலை உயர்த்தப்பட்டது. அது தற்போதைய அரசாங்கத்தின் அரிசி விலைக் கட்டுப்பாட்டுடன் தொடர்புடைய 3 ஆவது வர்த்தமானியாகும்.

அதன்படி சம்பா அரிசி ஒரு கிலோவின் அதிக பட்ச விலை 98 ரூபாவாகவும்,  சம்பா பச்சை அரிசி ஒரு கிலோவின் விலை 98 ரூபாவாகவும்,  நாட்டரிசி ஒரு கிலோ 96 ரூபாவாகவும்,  பச்சையரிசி ஒரு கிலோ 93 ரூபாவாகவும்  அதிகபட்ச விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

மூன்றாவது வர்த்தமானி கடந்த 4 ஆம் திகதிவரை செல்லுபடியான நிலையில், அதில் குறிப்பிடப்பட்ட விலைகளை விட அதிக விலைகளிலேயே அரிசி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் தரவுகள் உறுதி செய்கின்றன.

Previous articleநவம்பர் 2- விடுபாட்டுரிமை கொண்ட குற்றவாளிகளுடனான பயணம்!
Next articleஐ.எஸ். இற்கு எதிராக கவிதை எழுதிய தடுப்புக் காவலில் உள்ள இளைஞர் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரிக்கை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here