சட்டத்தரணி ஹிஜாஸ் குறித்த அனைத்து வாக்குமூலங்களினதும் சுருக்கத்தை நீதிமன்றத்துக்கு முன்வைக்குமாறு சீ.ஐ.டிக்கு உத்தரவு

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளில் சாட்சியாளர்களிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலங்களின் சுருக்கத்தை நீதிமன்றத்துக்கு முன்வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சட்டத்தரணி ஹிஜாஸ் சார்பில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார உள்ளிட்ட சட்டத்தரணிகள் விளக்கமளித்ததைக் கருத்திற்கொண்டே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பான விசாரணைகளின் போது அதிகமானோரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சாட்சியங்களைப் பதிவுசெய்துகொண்டிருந்தாலும், வாக்குமூலங்கள் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

அதிகமானோரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் ஓரிருவரின் வாக்குமூலங்கள் மாத்திரம் நீதிமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டிருப்பதாகவும் இரண்டு சாட்சியாளர்களுக்கு வாக்குமூலங்கள் கற்பிக்கப்பட்டு, நீதவான் முன்னிலையில் வாக்குமூலங்களைப் பதிவுசெய்துகொள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முயற்சித்துள்ளதாகவும் ஹிஜாஸ் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். கற்பிக்கப்படாத வாக்குமூலங்களாயின், அவை எவ்வாறு ஊடகங்களுக்குச் சென்றன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

நீதவான் முன்னிலையில் பெறப்பட்ட வாக்குமூலங்கள் எவ்வாறு ஊடகங்களுக்குச் சென்றன என்பது குறித்து விசாரணையொன்றைச் மேற்கொள்ள மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டிருந்தாலும், அவை நடைபெற்றதாக தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள நீதவான், அதுகுறித்து விசாரணைகளைப் பூரணப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.

Previous articleவியாபாரப் பொருட்களின் பொதிகளில் விபரங்கள் மும்மொழிகளிலும் அச்சிடப்படுவது கட்டாயம்
Next article73 வருடங்களில் ஐ.தே.க உறுப்பினர்கள் இல்லாத பாராளுமன்றத்தின் முதல் அமர்வு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here