எதனையும் மறைக்கவில்லை; அறிவித்தல் விடுக்கப்பட்டமை சட்ட விரோதம்; எக்ஸ்பிரஸ் பேர்ள் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணிகள் விளக்கம்; விசாரணைகளின் புதிய தகவல்களை முன் வைத்துள்ள சி.ஐ.டி.

எக்ஸ்பிரஸ் பேர்ள் எனும் சரக்குக் கப்பலின் கெப்டன், பிரதான பொறியியலாளர், உள் நாட்டு பிரதி நிதி உள்ளிட்ட 10 பேரை நீதிமன்றுக்கு அழைக்க அறிவித்தல் பிறப்பிக்குமாறு முன் வைக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. தாம் எந்த தகவலையும் மறைக்கவில்லை எனவும், தமக்கு எதிராக  இந்த விவகாரத்தில் அறிவித்தல் பிறப்பிக்க  நீதிவான் நீதிமன்றுக்கு அதிகாரம் இல்லை எனவும் முன் வைக்கப்பட்ட வாதங்களை ஆராய்ந்தே நீதிமன்றம் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பிலான  முறைப்பாடு மீதான விசாரணைகள் நேற்று  கொழும்பு மேலதிக நீதிவான் சலனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே, நீதிவான் சி.ஐ.டி. சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் முன்வைத்த அறிவித்தல் குறித்த கோரிக்கையை நிராகரித்தார்.

நீதிமன்ற அதிகாரம் மேல் நீதிமன்றுக்கு:

2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்புச் சட்டத்தின் கீழ் பிரதானமாக குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு இந்த விவகாரத்தில் விசாரணைகள் இடம்பெறும் நிலையில், அச்சட்டத்தின்  12 ஆம் அத்தியாயம் பிரகாரம் சந்தேக நபர் ஒருவர் தொடர்பில் செயற்படும் நீதிமன்ற அதிகாரம் மேல் நீதிமன்றத்துக்கே உள்ள நிலையில், நீதிவான் நீதிமன்றத்துக்கு அவ்வதிகாரம் இல்லை என சுட்டிக்காட்டியே நீதிவான் சலனி பெரேரா குறித்த கோரிக்கையை நிராகரித்தார்.

விசாரணைக்கான உத்தரவுகளை வழங்கலாம்:

 எனினும் குற்ற விசாரணைகளுக்கு  உதவும் விதமாக குற்றவியல் சட்டத்தின் 124 ஆவது அத்தியாயம் பிரகாரம், விசாரணைகளுக்கான உத்தரவுகளை தம்மால் வழங்க முடியும் என அறிவித்த  நீதிவான், விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யினர் கோரிய இரு கோரிக்கைகளுக்கு அனுமதியளித்தார்.
வி.டீ.ஆர்.. இரசாயன பகுப்பாய்வுக்கு:
கப்பலில் இருந்து மீட்கப்பட்ட வி.டீ.ஆர். உபகரணத்தை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அறிக்கை பெற முன் வைக்கப்பட்ட கோரிக்கை அதில் ஒன்றாகும். இதன்போது குறித்த வி.டீ.ஆர். உபகரண தரவுகள் எந்த மாற்றங்களுக்கும் உட்படுத்தாது பாதுகாக்கப்படல் வேண்டும் எனவும் நீதிவான் உத்தரவிட்டார்.

மூழ்கும் கப்பலுக்கு விஷேட பாதுகாப்பு:

இதனைவிட, மூழ்கி வரும் கப்பலை சூழ பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுமாறு கடற்படையினருக்கு உத்தரவிட வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிவான் அது தொடர்பில் கடற்படை தளபதிக்கு உத்தரவொன்றினை பிறப்பித்தார்.
எனினும் இதன்போது கப்பலை கடற்படையின் பொறுப்பில் வைத்திருக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த நீதிவான், பல்வேறு தரப்புக்களும் கப்பல் தொடர்பில் விசாரணைகளை நடாத்தும் நிலையில் கப்பலுக்கு சென்று விசாரணை நடாத்த தேவைப்படுமிடத்து முறையான அனுமதி உத்தரவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என கட்டளையிட்டார்.
விசாரணையாளர்களான சி.ஐ.டி. சார்பில் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் பிரேமரத்ன, கப்பல் விசாரணைகளுக்கு பொறுப்பான உதவி பொலிஸ்  அத்தியட்சர் ரொஷான் அபேசிங்க,  பிரதான பொலிஸ்  பரிசோதகர் மிஹிந்து அபேசிங்க,  பொலிஸ்  பரிசோதகர் குமாரசிறி உள்ளிட்ட  குழுவினர் ஆஜராகினர். அவர்களுக்காக சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னக்கோன் தலைமையிலான குழுவினர் பிரசன்னமாகினர்.
இந் நிலையில் நேற்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு ரஷ்ய நாட்டு  பிரஜையான குறித்த கப்பல் கெப்டன், பிரதான பொறியியலாளரான சீன  பிரஜை, உதவி பொறியியலாளரான இந்திய பிரஜை ஆகியோருக்கு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும்  அவர்கள் மன்றில் நேற்று ஆஜராகவில்லை.
 இந் நிலையில் அவர்கள் சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன தலைமையிலான சட்டத்தரணிகள் குழு அதற்கான காரணங்களை மன்றில் முன் வைத்தது. இதனைவிட கப்பலின் உள் நாட்டு பிரதிநிதியான  சீ கன்சோர்டியம் லங்கா தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட மன்றில் ஆஜரானார்.
 இந் நிலையில், முதலில் இதுவரை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள விடயங்களை சி.ஐ.டி. சார்பில் மன்றில் வாதாடிய அரசின் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் முன் வைத்தார்.

முரணான வாக்கு மூலங்கள்:

 இதுவரை சி.ஐ.டி.யினர் முன்னெடுத்த விசாரணைகளில், கப்பல் கெப்டன், ஏனைய இரு பொறியியலாளர்கள் மற்றும் உள் நாட்டு பிரதி நிதியான நிறுவன அதிகாரிகளின் வாக்கு மூலங்கள் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் கூறினார்.
குறித்த கப்பல், துறைமுக மா அதிபருக்கு வழங்க வேண்டிய தரவுகளை மறைத்து, இலங்கையின் துறைமுகத்துக்குள் உள் நுழையும் நோக்குடன் இலங்கை கடற்பரப்புக்குள் தரித்து நின்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உண்மை மறைக்கப்பட்டதாம்:

கப்பல் இலங்கைக்குள் வரும் போதும், அக்கப்பலில் நைற்றிக் அமில கசிவு உள்ளமையை கப்பல் கெப்டன் உள்ளிட்ட குறித்த கப்பலின் நிறுவனம் அதன் உள் நாட்டு பிரதி நிதி என அனைவரும் அறிந்திருந்த போதும்,  உள் நாட்டு பிரதிநிதி, அனைத்து கொள்கலன்களும் உரிய முறையில்  சர்வதேச தர நிர்ணயத்தின் கீழ் உள்ளதாக துறைமுக மா அதிபருக்கு அறிக்கையளித்துள்ளதன் நோக்கம் என்ன என அவர் கேள்வி எழுப்பினார்.

அமோனியா காரணமாகவும் கப்பலில் தீ :

இதனைவிட இலங்கை கடல் பரப்பில் தரித்து நின்றபோது ஏற்பட்ட தீ, நைற்றிக் அசிட் கசிவினால் ஏற்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே 2 ஆம் இலக்க  கலஞ்சிய பகுதியில் அமோனியா  கசிவால் தீ பரவல் ஒன்று ஏற்பட்டுள்ளமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னகோன் குறிப்பிட்டார்.

மின்னஞ்சல்கள் அழிப்பு:
அத்துடன் கப்பலின் உள் நாட்டு பிரதிநிதியான சீ கன்சோர்டியம் லங்கா நிறுவனத்தின்  சஞ்ஜீவ சமரநாயக்க எனும் அதிகாரி,  தனியாகவோ அல்லது கூட்டாகவோ குறித்த நிறுவனத்துக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கும் இடையில் பகிரப்பட்ட மின்னஞ்சல்களில் சிலவற்றை அழித்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரால் மாதவ தென்னக்கோன், அது தொடர்பில் சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவூடாக விஷேடமாக ஆராய்ப்பட்டுவருவதாக குறிப்பிட்டார்.
இதற்காக அந் நிறுவனத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பின்  காப்புப் பிரதியை (பெக் அப்) விசாரணையாளர்களிடம் கையளிக்க முன் வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான உத்தரவு சீ கன்சோர்டியம் தனியார் நிறுவனத்துக்கு நீதிமன்றால் பிறப்பிக்கப்பட்டது.

இந் நிலையில் முதல் மூன்று சந்தேக நபர்களாக விசாரணையாளர்களால் அடையாளப்படுத்தப்பட்ட கப்பல் கெப்டன் உள்ளிட்ட மூவருக்கு மேலதிகமாக  கப்பலின் உள் நாட்டு பிரதி நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் 7 பேரை சந்தேக நபர்களாக பெயரிட்ட விசாரணையாளர்கள் அவர்களுக்கும், மன்றில் நேற்று ஆஜராகாத முதல் மூன்று சந்தேக நபர்களுக்கும் சேர்த்து அடுத்த தவணையில் மன்றில் ஆஜராக அறிவித்தல் பிறப்பிக்குமாறு கோரினர்.

ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்னவின் வாதம்:

இந் நிலையில், முதல் மூன்று சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டிருந்த கப்பலின் கெப்டன் உள்ளிட்டவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன மன்றில் வாதங்களை முன் வைத்தார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய சி.ஐ.டி.:

 இலங்கையின் தனிமைப்படுத்தல் சட்ட திட்டத்தின் பிரகாரம் இரு வாரங்கள் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என்பதால், தற்போதும் தனிமைப்பட்டிருப்பதால் அவர்களால் மன்றில் ஆஜரக முடியாது என அவர் தெரிவித்தார்.
அத்துடன்,  தனிமைப்படுத்தல் விதிகளை மீறி சி.ஐ.டி.யினர், தமது சேவை பெறுநர்களிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளதாக  ஜனாதிபதி சட்டத்தரணி சரத் ஜயமான்ன குறிப்பிட்டார்.
 அவை எப்படி இருப்பினும், அம்மூவருக்கும் எதிராக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அறிவித்தல் சட்ட ரீதியானது அல்ல என அவர் வாதிட்டார். அதனால் அது மீளப் பெறப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்கடடினார்.
அறிவித்தல் சட்ட விரோதமானது:
‘ குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் ஒருவருக்கு எதிராக  நீதிமன்றல் அறிவித்தல் பெற படி முறைகள் உள்ளன. அச்சட்டத்தின் 109 ஆம் அத்தியாயத்தில் ஆரம்பித்து 110,114,116,115,120,136  ஆம்  அத்தியாயங்கள் ஊடாக கூறப்பட்டுள்ள படி முறைகள் பின்பற்றப்பட்டே 139 ஆம் அத்தியாயத்தின் கீழான அறிவித்தலை பெற முடியும். எனினும் சி.ஐ.டி. இங்கு எந்த படி முறையினையும் இன்றி நேரடியாக 139 ஆவது அத்தியாயம் பிரகாரம் அறிவித்தல் பெற்றது எப்படி என்பது பாரிய கேள்வியாக உள்ளது.

அத்துடன் பிரதானமாக முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு,  சமுத்திர சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் முன் வைக்கப்பட்டுள்ளன. அப்படியானால், அச்சட்டத்தின் கீழ் நீதிமன்ற அதிகாரம் மேல் நீதிமன்றுக்கே உள்ளது. அப்படி இருக்கையில் நீதிவான் நீதிமன்றம் எப்படி அறிவித்தல் பிறப்பிக்க முடியும்.
சி.ஐ.டி.யினருக்கு குறித்த கடல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எமது சேவை பெறுநர்கள்  குற்றமிழைத்தமை தொடர்பில் சந்தேகம் எழுந்தால் நேரடியாக மேல் நீதிமன்றில் அவர்களை ஆஜர் செய்யலாம் அல்லவா. அப்படியானால் ஏன் அதனை செய்யாது நீதிவான் நீதிமன்றுக்கு பின் கதவால் வந்து தமது  திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல வேண்டும்.

உண்மையான பிரச்சினையை மறைக்கும் நாடகம்:

இந்த விடயத்தில், கப்பலின் கெப்டனையும் அதிலிருந்த ஊழியர்களையும் நீதிமன்றுக்கு அழைத்து உண்மை பிரச்சினையை மறைக்கவே இந்த நாடகத்தை சி.ஐ.டி. முன்னெடுக்கிறது. துறைமுக அதிகார சபையின் இயலாமையை மறைப்பதற்கான முயற்சியே இது.
பிரதான கப்பல் மார்க்கத்தின் கேந்திர நிலையம்  என தம்மை இலங்கை அழைத்துக்கொள்ளும் நிலையில்,  ஒரு கப்பலில் பரவிய தீ யைக் கூட அணைக்க முடியவில்லை. அதற்கு பகரமாக கப்பலின் கெப்டனை மன்றுக்கு அழைப்பதன் ஊடாக பிராந்தியத்துக்கு வரும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கவே இலங்கை முயல்கிறது.’ என சரத் ஜயமான்ன சுட்டிக்காட்டினார்.

உண்மையான நிலவரம் அறிவிக்கப்பட்டது:

இதனையடுத்து கப்பல் ஊழியர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி லியனகே, கப்பலின் வி.டீ.ஆர். போன்றே துறைமுக அதிகார சபையிலும் அனைத்து தகவல்கலும் பதிவாகும் கருவி உள்ளதாகவும், அந்த பதிவுகளை முதலில்  பரிசோதிக்காது கப்பலின் வி.டீ.ஆர். மீது கை வைப்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். அத்துடன் கப்பலானது அனைத்து உண்மையான நிலவரங்களையும் அறிவித்தே இலங்கைக்கு வந்ததாக அவர் கூறினார். துறைமுக மா அதிபருக்கு இது தெரியும் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் தெற்காசிய வலய நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் பிரகாரம் கூட, ஹசீரா துறைமுகத்திலிருந்து கசிவுடன் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கொழும்பை நோக்கி வருவதை அத்துறைமுகம் கூட கொழும்புக்கு அறிவித்திருக்கும் என அவர் வாதிட்டார்.
மின்னஞ்சல்கள் அழிக்கப்படவில்லை:
இதனையடுத்து ஜனாதிபதி சட்டத்தரணி  அனுர மெத்தேகொட, மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டதாக சி.ஐ.டி. தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டினை முற்றாக மறுத்தார்.
இந் நிலையிலேயே அனைத்து வாதங்களையும் ஆராய்ந்த நீதிவான் சலனி பெரேரா,  கப்பல் கெப்டன் உள்ளிட்டோருக்கு எதிராக அறிவித்தல் பிறப்பிக்க மறுத்து, ஏனைய விசாரணைகளுக்கான கோரிக்கைகளுக்கு உத்தரவுகளை வழங்கி வழக்கை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
Previous articleரிஷாத்தின் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான பரிசீலனையிலிருந்து நீதியரசர் கோதாகொடவும் விலகல்
Next articleஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக சாட்சி சொல்ல வற்புறுத்தும் சி.ஐ.டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here