அகிம்சைப் போராட்டத்தில் உயிரிழந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியமைக்காக சிவாஜிலிங்கத்துக்கு விசாரணை

அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சைவழி உண்ணாவிரதத்தில் உயிரிழந்த அமிர்தலிங்கம் திலீபனின் நினைவு தினத்துக்கு அஞ்சலி செலுத்தியதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

எம்.கே. சிவாஜிலிங்கம் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரொருவரான திலீபனுக்கு பதாகை கட்டி, தீபமேற்றி, அஞ்சலி செலுத்தியமைக்காக கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கொண்டு சென்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், கைதுசெய்யப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

5 கோரிக்கைகளை முன்வைத்து, உண்ணாவிரதமிருந்து, உயிரிழந்த அமிர்தலிங்கம் திலீபனின் 33ஆம் நினைவு தினம் இன்றாகும். அதற்காக வடக்கு கிழக்குப் பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. சில பிரதேசங்களில் நினைவஞ்சலி நிகழ்வுகளை நடத்த நீதிமன்ற தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது கூறியதாவது,

‘அஞ்சலி செலுத்தும் விடயத்தை யாரும் தடைசெய்ய முடியாது. அது ஒரு மரபு ரீதியான நீதி. இதனை வேறு காரணங்களைக் கூறி, தடுப்பது, முடியாத காரியமாகும். தமிழ் தாயகத்தில் திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களை நிறுத்தப்பட வேண்டும், தமிழ் மக்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் போர்க் குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் நீதி நிலைநாட்டப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டோர் விடயத்திற்கு தீர்வும் உண்மைகளும் கண்டறியப்பட வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து இராணுவத்தினர் வெளியேற வேண்டும், தமிழ் மக்களின் அபிப்பிராயத்தை தெரிந்துகொள்ள வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் திலீபனின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.’

கடந்த 1987ஆம் ஆண்டு, திலீபன் முன்வைத்த 5 அம்ச கோரிக்கைகள் இவைதாம்,

1. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, இன்னமும் தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புனர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

4. வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5. இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப்பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள ராணுவ, போலீஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

கடந்த காலங்களில் சிவப்பு – மஞ்சள் கொடிகளால் வடக்கு, கிழக்கு பிரதேசங்கள் அலங்கரிக்கப்பட்டு, முக்கிய சந்திகளில் திலீபனின் உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்பட்டன.

2009ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 2015ஆம் ஆண்டு வரை பகிரங்கமாக – பொதுவெளியில் திலீபனின் நினைவேந்தல் நினைவுகூரப்படவில்லை. புலம்பெயர் தேசங்களில் மாத்திரம் பேரெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டு வந்தது.

கடந்த ஆட்சியில் 2016ஆம் ஆண்டு, நல்லூரில் உள்ள திலீபனின் நினைவுத் தூபியில் – 10ஆண்டுகளின் பின்னர் பகிரங்கமாக நினைவுநாள் நிகழ்வுகள் முதன்முறையாக நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் திலீபனின் நினைவுத் தூபியிலும், தமிழர் தாயகத்தின் முக்கிய இடங்களிலும் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க நல்லூரில் உள்ள திலீபனின் நினைவுத் தூபி உள்ளிட்ட முக்கிய இடங்களில் நினைவேந்தல் நிகழ்வுக்கு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

Previous article‘உலகெங்கிலும் சிவில் உரிமைகள் அழிக்கப்பட்டு, ஊடக அடக்குமுறைகள் தொடர்கின்றன’- ஐரோப்பிய ஒன்றியம்
Next article161 நாட்களின் பின்னர் ரம்ஸி ராசிக்கிற்குப் பிணை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here