45 ஆயிரம் மின்னியலாளர்களின் நம்பிக்கைகள் சிதைந்தன – இலங்கை மின்னியளாளர்கள் சங்கம் தெரிவிப்பு

(அப்துல் ரகுமான்)
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவை மூடுவதற்கு எடுத்துள்ள நடவடிக்கையால் மின்னியளாளர் தொழிலுக்குரிய உரிம முறை ஆபத்தில் இருப்பதாகவும், இதன் காரணமாக 45 ஆயிரம் மின்னியளாளர்களின் நம்பிக்கைகள் சிதைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்துறையின் பாதுகாப்புக்காகவும் மின்சார நுகர்வோரது பாதுகாப்புக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்ற இலங்கையின் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவை மூடுவதற்கான சதியை தோற்கடிக்கும் நோக்கில் இலங்கை மின்னியளாளர்கள் சங்கம் சார்பில் இன்று (19) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த அக்டோபரில் மின்னியளாளர்களுக்கான உரிமங்களை வழங்குவதற்கான தொடக்க விழாவை பிரதமரின் தலைமையில் கீழ் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டதாக உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டது.மாவட்ட அளவில் மின்னியளாளர்களுக்கான உரிமம் வழங்கும் முறை குறித்து தற்போது எந்த திட்டங்களும் நடத்தப்படவில்லை. இந்த திட்டத்தின் கீழ் இலங்கையின் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் தேசிய தொழில் பயிற்சி ஆணைக்குழு ஆகியவை இணைந்து தேசிய தொழில் தகுதி நிலை 3 ( என்.வீ.கியூ 3 ) இலவசமாக வழஙகும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. மாவட்ட அளவில் பணிபுரியும் மின்னியளாளர்களை பதிவு செய்வதற்கும் அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தனர். இந்த திட்டங்கள் எதுவும் இப்போது செயலில் இல்லை.
இந்த உரிம திட்டத்தின் கீழ் ஒரு மின்னியளாளர் தனது தொழிலில் பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது.இந்த தொழில்முறை உரிமத் திட்டம் மின்னியளாளரை ஆரம்ப, பயிலுனர், கனிஷ்ட, சிரேஷ்ட, சிறப்பு மற்றும் பொது ஆகிய பிரிவுகளின் கீழ் அங்கீகரிக்கிறது.பதவி உயர்வுகள் தேசிய தொழில் தகுதி அல்லது என்.வீ.கியூ ஐ அடிப்படையாகக் கொண்டவை. இந்த திட்டத்தின் ஒரு சிறப்பம்சம் தற்போது மின் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் தேசிய தொழில் பயிற்சி தகுதி என்.வீ.கியூ 3 இலவசமாக வழங்கப்படுகிறது.இலவச என்.வீ.கியூ 3 வழங்கும் திட்டம் மாத்தறை மாவட்டத்தில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. மாவட்ட அளவில் இந்த என்.வீ.கியூ 3 இலவச விநியோகத் திட்டத்தை செயல்படுத்தவும் அனைத்து மின்னியளாளர்களுக்கும் அந்த தகுதியை வழங்கவும் நோக்கம் கொண்ட திட்டமும் செயலற்றதாகிவிட்டது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார தொழில் முறை உரிமங்களைப் பெற்ற பிறகு அனைத்து மின்னியளாளர்களுக்கும் ஓய்வூதியத் திட்டம் மற்றும் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நலத்திட்டங்கள் அனைத்தையும் பாதியிலேயே நிறுத்த விரும்பியவர் யார் என்றும் மின்சார மாஃபியா தொடர்பாகவும் இச் சங்கத்தினால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மின்சார நுகர்வோர் அன்றாடம் எதிர்கொள்ளும் மின்சார தாக்கம், மின்சார மரணங்கள் ஆகியவற்றை குறைக்கும் முகமாக இலங்கையிலுள்ள அனைத்து மின்னியளாளர்களையும் ஒரு தோட்டத்துக்குள் உள்வாங்கி அவர்களுக்கு உரிமம் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதாகவும். இத்திட்டத்தில் இதுவரை 20 ஆயிரம் மின்னியளாளர்கள் தமக்கான உரிமத்தை பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளதாகவும், இன்னும் சுமார் 25 ஆயிரம் பேர் எதிர்காலத்தில் விண்ணப்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here