அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கக் கோரி சர்வ மதத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு மகஜர்

(அப்துல் ரகுமான்)
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் சர்வ மதத் தலைவர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு சர்வ மதத்தலைவர்களின் கையெழுத்து அடங்கிய மகஜரொன்று இன்று (19) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், அதனூடாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மகஜரானது யாழ்.ஸ்ரீநாக விகாரை விகாராதிபதி மீஹாகஜதுரே ஸ்ரீ விமலதேரர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.  குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த மாதம் யாழ். மாவட்டத்தில் இடம் பெற்ற  சர்வ மதத் தலைவர்களுடனான கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலேயே குறித்த கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு, அவ்வமைப்பின் இணைப்பாளர் மு.கோமகனினால்   மகஜரானது இன்று தேரரிடம் வழங்கிவைக்கப்பட்டிருந்தது.  இதனையடுத்தே யாழ்.ஸ்ரீநாக விகாரை விகாராதிபதி மீஹாகஜதுரே ஸ்ரீ விமலதேரர் அம்மகஜரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
 எமது உறவுகளை சிறைகளில் மடிய விட வேண்டாம், தமிழ் அரசியல் கைதிகள் பயங்கரவாதிகள் இல்லை, அவர்களை சிறைகளில் தடுத்து வைக்க வேண்டாம் , அவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்குக என்ற அடிப்படையில் குரலற்றவர்களின் குரல் அமைப்பானது தொடர்ந்து பல்வேறு உரிமை போராட்டங்களை தமிழ் அரசியல் கைதிகள் சார்பாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Previous articleஇலங்கையில் மனித உரிமை நிலை மோசமடைந்துள்ளது: மனித உரிமை கண்காணிப்பகம்
Next articleசினமன் கிராண்ட் தற்கொலைதாரியின் செப்புத் தொழிற்சாலை விவகாரம் : சந்தேகநபர்கள் விடுதலை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here