COVID-19 தொற்றுக்குள்ளானோரை ஊடகங்கள் குற்றவாளிகளாக சித்தரிப்பது கண்டிக்கத்தக்கதாகும்- YJA

COVID-19 தொடர்பாக அறிக்கையிடும் சில ஊடகங்கள் நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் நோய் தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவோரின் தனியுரிமை பாதிக்கப்படும் விதத்தில் ஊடக அறிக்கையிடல்கள் மேற்கொள்ளப்படுவதை இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

COVID-19 தொடர்பான அறிக்கையிடல்களில், ஊடகங்களின் வகிபாகம் குறித்து இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஊடகங்கள் தமது கடமைகளை உலகில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஊடக நெறிமுறைகள் மற்றும் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் சட்ட ஏற்பாடுகளுக்குள்ளே இருந்து மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது நம்பிக்கையாகும்.

COVID-19 நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் நோய் தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவோர் குற்றவாளிகள் என்ற எண்ணம் பொதுமக்களிடையே ஏற்படும் விதத்திலும் அவர்களது தனியுரிமை பாதிக்கப்படும் விதத்திலும் சில ஊடகங்கள் அறிக்கையிட்டு வருவதை கடந்த மார்ச் மாதம் முதல் அவதானித்து வருகின்றோம். இதற்கு முன்னர் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் கொரோனா நோயைப் பரப்பி வருவதாகவும் சில ஊடகங்கள் போலிச் செய்திகளைப் பரப்பியதோடு, அவை சமூகத்தில் பெரும் பேசுபொருளாகவும் மாறியது.

இம்முறை COVID-19 தொற்று தீவிரமடைந்ததும், ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களின் தனியுரிமை பாதிக்கப்படும் விதமாகவும் அவர்கள் மீது பொதுமக்களுக்கு வெறுப்பு ஏற்படும் விதமாகவும் சில ஊடகங்கள் அறிக்கையிட்டன. அதேபோன்று, நோய்த் தொற்றுக்குள்ளான மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோரின் வீடுகளையும், முகங்களையும் அவர்களுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட விதத்தையும் சில ஊடகங்கள் அறிக்கையிட்டதை கடந்த சில தினங்களாக அவதானித்து வருகின்றோம். இவ்வாறான அறிக்கையிடல்கள் சிறந்த ஊடகக் கலாச்சாரமொன்றுக்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றதாகும். மேலும் இவை, ஊடக நெறிமுறைகளை மீறும் செயற்பாடுகளாகும்.

நோய்த் தொற்றுக்குள்ளானோரை குற்றவாளிகளாகவும் அவர்களது தனியுரிமை பாதிக்கப்படும் விதத்திலும் ஊடகங்கள் அறிக்கையிடுவதே, நோய்த் தொற்றுக்குள்ளானோர் சிகிச்சைகளுக்காக முன்வராமைக்குரிய காரணமென்றும் நாம் நம்புகின்றோம்.

COVID-19 காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஊடகங்களால் மேலும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதை சாதாரண விடயமாகக் கருத முடியாது. எனவே, இவ்வாறு ஊடக நெறிமுறைகளை மீறும் செயற்பாடுகளில் இருந்து தவிர்ந்துகொள்ளுமாறும், ஊடக நெறிமுறைகளுக்கு அமைவாக அறிக்கையிடல்களில் ஈடுபடுமாறும் ஊடகங்களிடம் நாம் வேண்டிக்கொள்கின்றோம்.

 

Previous article“மொனராகலை ஊடகவியலாளரைத் தாக்கியவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட வேண்டும்”
Next articleகோப்ரல் எண் 01009 ; விநாசித்தம்பி வேல்நாயகத்திற்கு நடந்தது என்ன?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here