முதியவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கோரிய மூன்று பொலிஸார்; நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Srilanka Police

உயர்நீதிமன்றத்தில் வைத்து நாராஹேன்பிட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜென்ட் மற்றும் 2 பொலிஸ் கான்ஸ்டபிள்கள் 81 வயதுடைய முதியவரிடம் மண்டியிட்டு மன்னிப்பு கோரியுள்ளனர்.

விஜித் கே மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகியோரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலேயே, நாராஹேன்பிட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் மூவர் மண்டியிட்டு மன்னிப்புக் கோரியுள்ளனர்.
81 வயதுடைய கொட்வின் பெரேரா என்பவர் 2017ஆம் ஆண்டு மேற்குறித்த பொலிஸ் அதிகாரி மூவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.
நாராஹேன்பிட ஆசிரி வைத்தியசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது, நகர சுத்திகரிப்பாளர் ஒருவர் விபத்தொன்றில் சிக்கியிருப்பதை அவதானித்த கொட்வின் பெரேரா, பொலிஸாருக்கு விபத்து தொடர்பில் தகவல்களை வழங்கிவிட்டு விபத்தில் சிக்கியிருந்த நபரை வைத்தியசாலையிலும் அனுமதித்துள்ளார். 2017ஆம் ஆண்டே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
எனினும், விபத்து இடம்பெற்றிருந்த மறுநாள் மேற்குறித்த பொலிஸார் மூவரும் கொட்வின் பெரேராவை கைது செய்ததோடு, நாராஹேன்பிட பொலிஸ் நிலைய சிறையில் அடைத்ததாகவும் கொட்வின் பெரேரா தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டத்தை இப்படியா அமல்படுத்துவீர்கள்? என பொலிஸாரிடம் வினவிய கொட்வின் பெரேராவிடம் பொலிஸார் மோசமாகவும் நடந்துகொண்டிருந்த நிலையில், குறித்த பொலிஸாருக்கு எதிராக சட்டத்தரணி விஜித் சிங் ஊடாக அடிப்படை உரிமை மீறல் மனுவை கொட்வின் பெரேரா தாக்கல் செய்திருந்தார்.
எவ்வாறாயினும், பிரதிவாதிகளான மூன்று பொலிஸாருடனும் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு மனுதாரர் சம்மதித்திருந்த நிலையில், விசாரணைக்காக குறித்த வழக்கு  உயர்நீதிமன்றில் இன்று (15) எடுத்துகொள்ளப்பட்டது.
மனுதாரரான கொட்வின் பெரேரா இதன்போது மன்றில் ஆஜராகியிருந்தார். நாராஹேன்பிட பொலிஸ் அதிகாரிகள் மூவரின் பெயர்கள் அழைக்கப்பட்டப் பின்னர் அவர்களும் மன்றில் ஆஜராகினர்.
பொலிஸ் அதிகாரிகள் விசேட சந்தர்ப்பங்களில் அணியும் இலக்கம் 01 உத்தியோகப்பூர்வ சீருடைகள் மற்றும் உத்தியோகபூர்வ பதக்கங்களையும் அணிந்தே குறித்த பொலிஸார் மன்றில் ஆஜராகியிருந்த நிலையில், பிரதிவாதிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு சம்மதமா? என உயர்நீதிமன்றம் மனுதாரரிடம் வினவியது. இதற்கு மனுதாரரும் சம்மதம் என மன்றுக்கு அறிவித்தார்.
தவறான செயல்களில் இதுபோல மீண்டும் ஈடுபடக்கூடாது என பொலிஸ் அதிகாரிகளுக்கு எச்சரித்த நீதியரசர் விஜித் கே மலல்கொட, நாட்டின் சிரேஷ்ட பிரஜைக்கு சுதந்திரமாக செயற்படும் உரிமை காணப்படுகிற நிலையில், நாட்டின் சிரேஷ்ட பிரஜை ஒருவரிடம் இப்படியா நடந்துகொள்வீர்கள்? எனவும் வினவினார்.
மனுதாரர் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு சம்மதித்தார் என்ற ஒரே காரணத்துக்காக வழக்கை இவ்வாறு நிறைவு செய்வதாகவும் இல்லை என்றால், மனுதாரரின் வயதைக் கருத்திற்கொண்டு பாரிய தொகை ஒன்றை நட்டஈடாக செலுத்த வேண்டிய நிலை பிரதிவாதிகளுக்கு ஏற்பட்டிருக்கும் என்றும் நீதியரசர் கூறினார்.
இதன் பின்னர், நாராஹேன்பிட பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸாரும் தனித்தனியாக 81 வயதுடைய கொட்வின் பெரேராவுக்கு முன்பாக வந்து மண்டியிட்டு மன்னிப்பை பெற்றுகொண்டனர்.
Previous articleதொழில் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று பத்தலகொட செல்கிறது
Next article“நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here