நீரின்றி, கண்ணீரும் வற்றிப் போயுள்ள உமா ஓயா அவலம் !

(ஆஷிக் இர்பான்)
ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைத்தர முன்னேற்றத்தோடு ஏற்பட வேண்டியது. அந்த வகையில் அபிவிருத்தி திட்டங்கள் கொண்டுவரப்படும் போது அத்திட்டத்தின் நலவுகளோடு சேர்த்து அதனால் ஏற்படும் பிரதிகூலங்களையும் முன்கூட்டியே அனுமானிக்க வேண்டும்.
அப்போது தான் இழப்புக்களைக் குறைத்து குறித்த திட்டத்தை முன்னெடுக்கும் போது அதன் முழுப் பலனையும் அனுபவிக்க முடியுமாக இருக்கும். அதையும் தாண்டி மனித பலவீனங்களால் இழப்புக்கள் ஏற்படுவது இயல்பானதே. இருப்பினும் அதனை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதில் தான் வெற்றி இருக்கின்றது. துரதிர்ஷ்டவசமாக மூன்றாம் உலக நாடுகளின் திட்டங்களில் பெரும்பாலானவற்றில் ஏற்படும் சிறிய ஓட்டையை அடைக்க விரலை விட்டு ஓட்டையை பெரிதாக்கும் செயற்பாடுகளே தொடர்ந்து நடைபெறுகின்றன. அப்படியானதொரு பிரச்சனை தான் உமா ஓயா பிரச்சனை.
 உமா ஓயா திட்டம் என்பது என்ன?
 ஒற்றை வரியில் சொல்வதானால் கட்டிய பறையை தட்டியே ஆகவேண்டும் என்ற பலிக்கு தொடர்ந்தும் நடக்கும் ஓர் ஓட்டைத்திட்டமே இந்த உமா ஓயா திட்டம். உமா மலைநாட்டிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு தண்ணீரை கொண்டு செல்லும் வழியே, 120 மெகா வாட் நீர் மின் உற்பத்தி, 30 மில்லியன் கனமீட்டர் நீரைப் பயன்பாட்டுக்கு வழங்குவதன் ஊடாக கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடி அபிவிருத்தி, புதியவகைத் தொழில் வாய்ப்புகள் போன்ற பல்வேறுபட்ட நலன்களைப் பெறும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட பல்நோக்கு திட்டமே ஓயா திட்டமாகும்.
இதற்கான பிள்ளையார் சுழி 1987 ஆம் ஆண்டு இடப்பட்டது. பிறகு 1991 ஆம் ஆண்டு செயல்முறை வரைபடம் தயாரிக்கப்பட்டது. இருப்பினும் அப்போது ஆட்சியில் இருந்த ஐ.தே.க அரசாங்கம் அது ஒரு மண்குதிரைத் திட்டம் என அப்போதே கணித்து மண்ணோடு மண்ணாக்கியது. அதுவரை 17 வருடங்களாக மண்ணில் புதைந்திருந்த அத்திட்டத்தை அப்போது ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தோண்டி எடுத்து சலுகை அடிப்படையிலான வட்டி முறைக் கடனுக்காக ஈரான் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் திகதி உமா ஓயா திட்டத்திற்கான அடிக்கல்லை நட்டியது.
மேலோட்டமாக மேலிருந்து பார்க்கும் போது இது ஒரு நல்ல திட்டம் போல் தோன்றினாலும் பிரச்சனைகள் ஆரம்பமானது நிலத்திற்கடியிலிருந்து தான். அதாவது இந்த திட்டமானது டயரபா என்ற இடத்திலிருந்து புஹூல்பொலை வரைக்குமான நீரை எடுத்துச்செல்லும் சுரங்கப்பாதை ஒன்றையும் புஹூல்பொலையிலிருந்து கரந்தகொல்லைக்கு நீரை எடுத்துச் செல்லும் சுரங்கப் பாதை ஒன்றையும் உள்ளடக்கியது. குறித்த சுரங்க பாதைகள் இரண்டும் நிலத்திலிருந்து 600 அடி ஆழத்திலேயே அமைக்கப்படுகின்றன. அதில் 15.4 கி.மீ நீளமான டயரபா மற்றும் ரந்தெனிய இணைக்கும் சுரங்கப்பாதை பணிகள் முழுவதுமாக நிறைவுற்றுள்ளதோடு மற்ற சுரங்கப்பாதையின் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இழப்புக்கள்
சுரங்கப் பாதைகள் அமைக்கும் வரை சுமூகமாக சென்றுகொண்டிருந்த இந்த திட்டமானது சுரங்கப்பாதை பணிகள் ஆரம்பமானதும் பிரச்சினைகளை வெளிக்காட்ட ஆரம்பித்தது. நிலத்துக்கு அடியில் தோண்டும் போது ஏற்பட்ட அதிர்வினாலும், நிலத்தடி நீர்த்தேக்கங்கள் சிதைவடைந்ததாலும் அங்கு வசிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஊவா மாகாணம் முழுவதும் குறிப்பாக பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களிலும் மொத்தமாக 39 கிராம சேவகர் பிரிவுகளில் வசிக்கும் 7550 குடும்பங்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பலரது வீடுகளில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதோடு சில வீடுகள் முற்றாக இடிந்து மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளன. அத்துடன் நிலத்தடி நீர் இன்மையால் விவசாய நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் அன்றாட தேவைகளுக்காக பயன்படுத்திய கிணறுகளும் முற்றிலுமாக வற்றிப் போயுள்ளன. தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையால் 7 – 10 நாட்களுக்கு ஒருநா‌ள் மட்டுமே நீர் வழங்கப்படுவதாகவும், அதன் பராமரிப்பும் மிக மோசமாகவே உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அதனை சேமித்து வைக்க 500 லீற்றர் கொள்ளளவு கொண்ட தாங்கியொன்று மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்படும் நீரை மனித பாவனைக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்றும் விவசாயம், மந்தை வளர்ப்பு நடவடிக்கைகளுக்கு உபயோகிக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
இந்த திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் தரம் குறைந்தவை என்பதையும் அதனை முன்னெடுத்து வரும் ஈரானிய நிறுவனம் அனுபவமற்ற நிறுவனம் என்பதும் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இத்திட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் கடந்த நல்லாட்சி அரசாங்கம் ஒப்புக்கொண்டது. இருப்பினும் இந்த திட்டத்தில் நிகழ்ந்துள்ள குளறுபடியை விட மோசமான குளறுபடியொன்று அதற்கான நஷ்டஈடு வழங்குவதில் இடம்பெற்றுள்ளது.
நஷ்டஈட்டு குளறுபடிகள்
இந்த உமா ஓயா திட்டம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நஷ்டஈட்டை பெற்றுக் கொடுக்கும் படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் பிரகாரம் பாதிக்கப்பட்டவர்களென அடையாளம் காணப்பட்ட 6350 பேருக்கு ரூ. 950 மில்லியன் நஷ்டஈட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் இதுவரை 950 விவசாயிகளுக்கு ரூ. 365 மில்லியன் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
வீடுகள் உடைந்தவர்களுக்கு மொத்த தொகை மதிப்பிட்டு நட்ட ஈடாக வழங்கப்படும் என்றும் விவசாய நிலங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போகம் அடிப்படையில் நட்ட ஈடு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை இந்த தொகை மதிப்பீட்டின் அடிப்படை என்ன என்பது தொடர்பாக பிரதேச மக்களுக்கு தெளிவின்மையே காணப்படுகிறது.
இதுபற்றி பண்டாரவலை, ஹீல்ஓய, உடுவரகெதர பிரதேசத்தை சேர்ந்த ஆர். எம். தம்மிக பண்டார (44) என்பவர் கூறுகையில்,
‘இது எனது சொந்த ஊர். எனக்கு மூன்று வீடுகள் உள்ளன. இந்த உமா ஓயா திட்டத்தின் சுரங்க பாதை எங்கள் வீடுகளுக்கு கீழால் செல்கிறது. இதனால் எனது பிரதான வீடு முற்றிலுமாக இடிந்து விழுந்துள்ளது. மற்ற வீடுகளிலும் சுவர்கள் வெடித்துள்ளன. எனது வீட்டின் மதிப்பு ரூ. 63, 000 என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் கூறுகிறது. அத்துடன் எனது வீட்டில் உள்ள ஒரு அறை வெறும் ரூ. 175 மதிப்புள்ளது என்று கூறுகிறார்கள். அத்துடன் குறித்த தொகை மதிப்பீட்டு நடவடிக்கைகள் அனைத்தும் குறித்த தோர் அரச பல்கலைக்கழக மாணவர்கள் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டது.’ என்று தம்மிக குற்றஞ்சாட்டுகிறார்.
தொகை மதிப்பீட்டில் மட்டுமல்ல மதிப்பிட்ட தொகையை பகிர்ந்தளிப்பதிலும் ஏய்ப்பு இடம்பெற்றுள்ளதாக தம்மிக உறுதியாக கூறுகிறார். குறித்த பிரதேசத்தில் வசிக்காதவர்களுக்கெல்லாம் நஷ்டஈடு வழங்கப் பட்டுள்ளதாகவும், ஒரே நபருக்கு ஒரே போகத்தில் இருமுறை இரு வேறுபட்ட தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தம்மிக சுட்டிக்காட்டுகிறார்.
அத்துடன் மொத்தமாக 7550 குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் 6350 குடும்பங்களுக்கு மட்டுமே நஷ்டஈட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிலும் சில பிரதேசங்களில் அடுத்தடுத்து இருக்கும் இரு வீடுகளில் ஒரு வீடு உமா ஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டது என்றும் மற்றைய வீடு இயற்கை அழிவால் பாதிக்கப்பட்டது என்றும் ஏய்ப்பு இடம்பெற்றுள்ளது. பண்டாரவளை, ஹீல்ஓய, கொலதென்ன, ரிப்டன் வத்தை எனும் பிரதேசத்தில் இருக்கும் 21 வீடுகளில் 3 வீடுகள் உமாஓயா திட்டத்தால் பாதிக்கப்பட்டவை என்றும் ஏனைய 18 வீடுகளும் இயற்கை அழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டு நஷ்டஈடு மறுக்கப்பட்டுள்ளது. அதில் சில குடும்பங்களுக்கு நஷ்டஈட்டு காசோலைகள் வழங்கப்பட்டு அவை வங்கிகளால் மீளப்பெற்றுகொள்ளப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக அடையாளம் காட்டிய சித்தி பரீதா (51) அதற்கான ஆதாரமாக தனக்கு வழங்கப்பட்ட காசோலையின் பிரதியையும் காட்டுகிறார்.
மீள்குடியேற்றம்
நஷ்டஈடு மறுக்கப்பட்ட சில இடங்களில் இயற்கை அழிவைக் காரணம் காட்டி அதி அவதானமுள்ள பிரதேசங்களாக அறிவித்து வேறு இடங்களில் குடியேற்றும் முயற்சிகளும் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அது பற்றி கொலதென்ன, ரிப்டன் வத்தையை சேர்ந்த முஹம்மது பாரூக் என்பவர் கூறுகையில், ‘ பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 16 இலட்சம் தருகிறோம் வேறு ஒரு குத்தகை காணி உறுதிப்பத்திரம் உள்ள இடத்தை தேடுங்கள் என்று சொன்னார்கள். தேடிக்கொடுத்த பின்னர் ரூ. 4 இலட்சம் தான் தரமுடியும் என்று சொல்கிறார்கள். அவர்கள் கூறுகின்ற அமைப்பில் காணி தேட முடியாது. நகரில் இருந்து 5 கி. மீ இற்குள் இருக்க வேண்டும். கடைவீதி ஒன்று இருக்க வேண்டும். சமதரையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படியான நிலத்தில் 10 பேசர்ஸ் நிலத்தை ரூ. 4 இலட்சத்திற்கு யார் தரப்போகிறார்?’ என்று கேட்கிறார்.
அத்துடன் குறித்த இடத்திலேயே காலாகாலமாக வாழ்ந்துவந்த மக்களை வேறு இடத்தில் குடியமர்த்தினால் அவர்களது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வது என்றும் பிரதேசவாசிகள் கேள்வியெழுப்புகின்றனர். இந்த விடயத்தில் அரசாங்கத்தின் முடிவுக்கும் மக்களின் மனநிலைக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறது.
உமா ஓயா திட்டத்தின் ஆரம்பம் முதல் நஷ்டஈட்டுப் பிரச்சனை, மீள்குடியேற்றம் வரை தீர்வினை பெற்றுக்கொடுக்க மாறிமாறி வந்த இரு அரசாங்கங்களும் தோல்வியையே தழுவியுள்ளன. இந்த அரசாங்கமாவது தீர்வு வழங்குமா என்று பாதிக்கப்பட்ட மக்கள் வழி மேல் விழி வைத்து காத்துக்கிடக்கின்றனர். இவர்களது கஷ்டங்கள் எப்போது தீரும்?

 

Previous articleகர்தினால் விரல் நீட்ட வேண்டியது முஸ்லிம்களை நோக்கியல்ல; நாட்டின் உளவுத்துறையின் மீதே!
Next articleதுறைமுக நகர சட்டமூலத்துக்கு ஆதரவளித்த இஷாக் ரஹ்மான், அலி சப்றி ரஹீம் அ.இ.ம.கா.விலிருந்து இடைநிறுத்தம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here