கோப் குழு நடவடிக்கைகளை அறிக்கையிட ஊடகங்களுக்குப் பூட்டு

அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப்) நடவடிக்கைகளை ஊடகங்கள் நேரடியாக அறிக்கையிடும் நடைமுறையை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜொன்ஸ்டன் பெர்னேண்டோ இன்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இவ்விடயம் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 

கோப் குழு நடவடிக்கைகளின் வீடியோக்களை ஊடகங்கள், அவற்றின் அரசியல் நிகழ்ச்சி நிரலை ஊக்குவிக்கப் பயன்படுத்துவதாகவும் ஜொன்ஸ்டன் பெர்னேண்டோ குற்றம்சாட்டினார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

‘முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைத் தாக்கவே ஊடக நிறுவனங்கள் கோப் வீடியோக்களைப் பயன்படுத்தின. நாம் இதனைப் பயன்படுத்தி உங்கள் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல்களை வைத்து, ஊடகங்களில் தாக்கலாம். எனினும், இவ்விடயங்களில் ஒரு நியாயம் இருக்க வேண்டும். முன்னாள் அரச அதிகாரிகள் போன்றோரின் கௌரவத்தைக் காக்கும் விதமாகவே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாம் ஊடகங்களுக்கு போலியான தகவல்களை வழங்க மாட்டோம். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வந்த நடைமுறையை பொதுமக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கி, நிராகரித்துள்ளனர். பொதுமக்களால் நிராகரிக்கப்பட்ட அவ்வாறானவைகளை நாம் ஆரம்பிக்க மாட்டோம்.’

இவ்விடயத்துக்கு எதிர்ப்பை வெளியிட்டு, எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்ததாவது, 

‘நானும் கோப் குழுவின் உறுப்பினரே. இவ்விடயம் குறித்த தீர்மானம் அடுத்த வாரமே மேற்கொள்ளப்படவுள்ளதாக கோப் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத் தீர்மானிக்க வேண்டிய விடயத்தில், அவருக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது’ 

இதற்குப் பதிலளித்த ஜோன்ஸ்டன் பெர்னேண்டோ தெரிவித்ததாவது,

‘சபா நாயகர் அவர்களே, நாம் இவ்விடயத்தை கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்தோம். அங்கு முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவும் இருந்தார். இந்த நளின் பண்டார உறுப்பினர் அதிலே இல்லை. அதுவே, அவருக்குத் தெரியாததற்கான காரணமாகும். அதுபோன்ற பதவியொன்றுக்கு வர இன்னும் காலமெடுக்கும்’

கோப் குழு ஊடகங்களுக்கு திறக்கப்பட்டதன் வரலாறு

2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் கோப் குழுவுக்கான அணுகல் ஊடகங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற ஆலோசனை மேலெழுந்தது. அந்த ஆலோசனையை அப்போதைய கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெட்டி முன்வைத்தார். 

மேலும், கோப் குழுவின் நடவடிக்கைகள் ஊடகங்களுக்கு திறக்கப்பட வேண்டும் என்று 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி அப்போதைய சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார். 

அதனடிப்படையில், 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி பாராளுமன்ற குழு இலக்கம் 5இல் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து கோப் குழுவின் நடவடிக்கைகளுக்கு ஊடகங்களுக்கு அணுகல் கிடைத்தது. 

Previous articleகம்பித் தட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் தாமதம்: சிரமத்துக்குள்ளாகியுள்ள விண்ணப்பதாரிகள்
Next articleகாணிகளுக்கு சட்ட ஆவணம் வழங்குதலைத் துரிதப்படுத்தும் வர்த்தமானி இரத்து- நிர்வாக ரீதியான பிழைகளே காரணமென்கிறார் அமைச்சின் செயலாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here