காணிகளுக்கு சட்ட ஆவணம் வழங்குதலைத் துரிதப்படுத்தும் வர்த்தமானி இரத்து- நிர்வாக ரீதியான பிழைகளே காரணமென்கிறார் அமைச்சின் செயலாளர்

ஆவணங்கள் இன்றி அரச காணிகளில் குடியிருப்போருக்கு சட்ட ரீதியான ஆவணம் வழங்குதலைத் துரிதப்படுத்த செப்டம்பர் மாதம் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் காணப்பட்ட நிர்வாக ரீதியான பிழைகளின் காரணமாகவே இரத்து செய்யப்பட்டதாக காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரனவக தெரிவித்தார். 

2192/36ஆம் இலக்கம் மற்றும் 2020, செப்டம்பர் 10ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (22) இரத்துச் செய்யப்பட்டமைக்கான காரணத்தை வினவியபோதே, அவர் இதனைத் தெரிவித்தார். 

முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்த வர்த்தமானி அறிவித்தலில் “2192/36ஆம் இலக்கம் மற்றும் 2020, செப்டம்பர் 10ஆம் திகதி ‘ஆவணங்கள் எதுவுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது குடியிருக்கும் மக்களுக்கு சட்ட ரீதியான ஆவணம் வழங்குதலை துரிதப்படுத்தல்’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட காணி ஆணையாளர் நாயகத்தின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்படுகின்றது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆவணங்கள் எதுவுமின்றி அரச காணிகளை அபிவிருத்தி செய்து அல்லது குடியிருக்கும் மக்களுக்கு சட்ட ரீதியான ஆவணம் வழங்குதலை துரிதப்படுத்தும் திருத்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் காணி அமைச்சின் செயலாளர் ஆர்.ஏ.ஏ.கே.ரனவக தெரிவித்தார். 

மக்களுக்கு சட்ட ரீதியான ஆவணங்களை வழங்கப்படவுள்ளமை தொடர்பாக ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ கீழ்வரும் விடயங்களைத் தெரிவித்திருந்த நிலையிலேயே, குறித்த வர்த்தமானி அறிவித்தல் இரத்துச் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

‘மக்கள் பயன்படுத்தி வருகின்ற சிக்கலற்ற காணிகளுக்கு மூன்று மாத காலத்திற்குள் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குமாறு நான் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தேன்.

பல்வேறு மாவட்டங்களுக்கு விஜயம் மேற்கொண்டபோது காணி உறுதிப்பத்திரம் இல்லாமையே மக்கள் முன்வைத்த மிக முக்கிய பிரச்சினை.

பரம்பரையாக வாழ்ந்து வந்தாலும், பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டிருந்தாலும் உறுதிப்பத்திரம் இல்லாமையினால் அவர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு உட்பட்டிருப்பதாக குறிப்பிட்டேன். பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாட்டுக்கும் பொருளாதார கொள்கைக்கும் பொருத்தமான வகையில் அமைந்த காணி கொள்கை மறுசீரமைக்கப்பட வேண்டுமென்று குறிப்பிட்டேன்.

காணி உறுதிப்பத்திரம் இல்லாமையினால் மக்கள் பாரிய சிக்கல்களுக்கு உட்பட்டுள்ளதுடன், அபிவிருத்தியும் பாரிய பின்னடைவு கண்டுள்ளது. விவசாய பொருளாதார பொறிமுறை ஒன்றை கட்டியெழுப்பும்போது காணி பயன்பாட்டு கொள்கை மிக முக்கியம்.

குத்தகைக்கு விடப்பட்டுள்ள காணிகளை அபிவிருத்தி செய்ததன் பின்னர் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு அல்லது காணி உரித்துடைய நிறுவனம் அல்லது வேறு தரப்பினருக்கு பொறுப்பளித்தல் விவசாயிகள் முகங்கொடுத்துள்ள மேலும் ஒரு சிக்கலாகும். அவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதற்கு இடமளிக்க வேண்டாமென்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தேன்.’

Previous articleகோப் குழு நடவடிக்கைகளை அறிக்கையிட ஊடகங்களுக்குப் பூட்டு
Next articleCID பயங்கரவாத அமைப்பாக குறிப்பிடும் ‘கட்டார் செரிட்டி’ இலங்கை தூதரகத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here