‘தொல்பொருள் அதிகாரிகளைத் தாக்கிய தேரருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அறிவித்தல்’- பொலிஸ் ஊடகப் பணிப்பாளர்

தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளைத் தாக்கிய அம்பிட்டியே சுமனரதன தேரருக்கு அரச உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர், எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி அல்லது பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். 

மட்டக்களப்பில் தொல்பொருள் அதிகாரிகளை அம்பிட்டியே சுமனரதன தேரர் தாக்கி, அவர்களது கடமைக்கு இடையூறு விளைவிக்கும் வீடியோ வெளியாகியிருந்த நிலையில், அதுகுறித்து பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டபோதே, பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.

 
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் மேலும் தெரிவித்ததாவது,    

‘தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு தேரர் ஒருவர் உட்பட சிலர் இடையூறு விளைவித்தமை குறித்து கரடியணாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கரடியணாறு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்த தொல்பொருள் இடத்தில் அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளச் சென்ற தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கரடியணாறு பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். தாக்கப்பட்ட அதிகாரிகளின் மருத்துவ அறிக்கைகளைப் பெற நீதிமன்ற மருத்துவ அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார். 

அரச உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்த பின்னர், எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி அல்லது பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றார். 

தேரர் கைதுசெய்யப்பட வேண்டுமென்று பிரதேச மக்கள் இன்று(22) ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொண்டனர். 

மட்டக்களப்பு செங்கலடி, பன்குடாவெளி பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தைப் பார்வையிடச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட தொல்பொருள் அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து, தாக்கும் வீடியோ வெளியாகியிருந்தது. 

அத்தோடு, தாக்கப்பட்ட மூன்று அதிகாரிகளையும் தேரர் தகர குடாரமொன்றில் சிறைப்பிடித்து, அரச அதிகாரிகள் அந்த இடத்திற்கு வரவேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார். 

தொல்பொருள் முக்கியத்துவமிக்க இடத்தை அடையாளப்படுத்த ஒரு வாரத்துக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று திணைக்கள அதிகாரிகள் தேரருக்கு வாக்களித்த பின்னரே சிறைப்படுத்தப்பட்ட அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தாக்கப்பட்ட அதிகாரிகள் கரடியணாறு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு, கரடியணாறு மருத்துவமனையில் நேற்று(21) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

படம்: முகநூல் 

Previous article‘தேர்தலில் வாக்களிக்கச் சென்றதற்காகவும் எமது அரை நாள் சம்பளம் துண்டிக்கப்பட்டது’- 10ஆவது நாளாகவும் பணிபகிஷ்கரிப்பில் உடரெதல்ல தொழிலாளர்கள்
Next articleகம்பித் தட்டுப்பாடு காரணமாக புதிய மின் இணைப்புகள் வழங்குவதில் தாமதம்: சிரமத்துக்குள்ளாகியுள்ள விண்ணப்பதாரிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here