‘தேர்தலில் வாக்களிக்கச் சென்றதற்காகவும் எமது அரை நாள் சம்பளம் துண்டிக்கப்பட்டது’- 10ஆவது நாளாகவும் பணிபகிஷ்கரிப்பில் உடரெதல்ல தொழிலாளர்கள்

தேர்தலில் வாக்களிக்கச் சென்றதற்காக அரை நாள் சம்பளம் துண்டிக்கப்பட்டமை உட்பட சட்ட ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் தமக்குக் கிடைக்கவேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகின்றதாகத் தெரிவித்து நுவரெலியா நானுஓயா உடரெதல்ல தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

களனிவெளி ப்லான்டேஷன்ஸ் நிர்வாகத்துக்குட்பட்ட நானுஓயா, உடரெதல்ல தோட்டத்தின் 275 தொழிலாளர்கள், தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 12ஆம் திகதி ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் இன்று 10ஆவது நாளாகவும் தொடர்கின்றது.  

பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் கூறுவதாவது,

‘பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்துவர நியமிக்கப்பட்டுள்ள ‘கங்காணிகள்’ இருவர் நீக்கப்பட்டு குறைந்த சம்பளத்தில் வேறு இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இவ்விடயத்தில் முன்பிருந்த நடைமுறை தொடர வேண்டும். 

8 மணிநேரம் வேலை செய்தாலும் அரைநாள் சம்பளமே வழங்கப்படுகின்றது. மழை நாட்களிலும் 18 கிலோ கிராம் கொழுந்து பறிக்க அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. அதற்கு ஒரு கிலோ கிராம் குறைந்தாலும் அரை நாள் சம்பளம் துண்டிக்கப்படுகின்றது. கொழுந்துகளை நிறுக்கும் தொழில்நுட்ப கருவி மூலம் குறைந்த நிறையே பதியப்படுகின்றது. இதனால், எமது உழைப்பு களவாடப்படுகின்றது. இதனையே நாம் எதிர்க்கின்றோம். 

அத்தோடு, கடந்த தேர்தலில் வாக்களிக்கச் சென்றதற்காகவும் அரை நாள் சம்பளம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முகாமையாளரிடம் கேட்டால், அரசாங்கத்திடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு கூறுகின்றார். தேர்தல் தினத்துக்கான முழுநாள் சம்பளம் எமக்கு வழங்கப்பட வேண்டும். எமது உரிமைகளை தோட்ட முகாமையாளரே மறுத்து வருகின்றார்.’

இதனால், தோட்ட முகாமையாளருக்கு இடமாற்றம் வழங்கப்பட வேண்டுமென்றும், தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடருமென்றும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.  
  
தொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டம் குறித்து தோட்ட முகாமையாளரிடம் கேட்டபோது, 

‘இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கும் நிலையில் நான் இல்லை. பிரதான அலுவலகத்திலேயே நீங்கள் இதுகுறித்துக் கேட்க வேண்டும். நான் உங்களுக்கு பிரதான அலுவலகத்தின் இலக்கத்தை அனுப்பிவைக்கின்றேன்’ என்றார். 

எனினும், தோட்ட முகாமையாளர் உரிய அதிகாரியின் இலக்கத்தை வழங்கவோ, அழைப்புக்குப் பதிலளிக்கவோ இல்லை. 

உடரெதல்ல தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து நேரில் சென்று ஆராய்ந்த தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கருத்துத் தெரிவிக்கையில்,

‘தோட்ட பராமரிப்பில் பின்னடைவு> கொழுந்து பறிக்கும் அளவின் குறைப்பாடு போன்ற காரணங்களால் தோட்ட நிர்வாகத்தினால் தொழிலாளர்களுக்கு தொடர்ந்து அரைநாள் சம்பளம் வழங்கப்பட்டதுடன் மாதாந்த கொடுப்பனவு சரியான முறையில்  வழங்கபடாதமை போன்ற காரணங்களினால் நானுஓயா உடரெதல்ல மேற்பிரிவு மற்றும் கீழ்பிரிவு தோட்ட மக்கள் கடந்த சில தினங்களாக பணி பகிஷ்கரிப்புடன் கவனயீருப்பு போராட்டத்தையும் நடத்திவருகின்றனர்.

நான் நேரடியாக உடரெதல்ல தோட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு மக்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளை கேட்டறிந்து உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்காக இவ்விடயம் தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினேன்.’

Previous article‘முன்மொழியப்பட்டுள்ள 20ஆம் திருத்தத்தின் மூலம் கருத்து மற்றும் ஊடகச் சுதந்திரம் மீறப்படும் அபாயம்’ -சுதந்திர ஊடக இயக்கம்
Next article‘தொல்பொருள் அதிகாரிகளைத் தாக்கிய தேரருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக அறிவித்தல்’- பொலிஸ் ஊடகப் பணிப்பாளர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here