161 நாட்களின் பின்னர் ரம்ஸி ராசிக்கிற்குப் பிணை

சிவில் சமூக செயற்பாட்டாளர் ரம்ஸி ராசிக்கிற்கு 5 மாதங்கள், 8 நாட்களின் பின்னர் இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

சிந்தனா ரீதியான ஜிஹாத் ஒன்றின் அவசியம் குறித்து முகநூலில் கருத்துக்களைப் பதிவிட்டதை மையமாக வைத்து, கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். 

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட விசாரணையின்போது பிணை வழங்கப்பட்டுள்ளதோடு, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ரம்ஸி சார்பில் ஆஜராகியிருந்தார். 

ரம்ஸி ராசிக் தொடர்பாக மேலும் வாசிக்க… 


நோயுற்ற நிலையில், போதிய மருத்துவப் பராமரிப்புகளுமின்றி 5 மாதங்களாக சிறைப்படுத்தப்பட்டுள்ள ரம்ஸி ராசிக்

வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சமூக செயற்பாட்டாளர் ரம்ஸி ராசிக் போதிய மருத்துவ பராமரிப்புகள் இன்றி, அவதியுறுவதாகத் தெரிய வருகின்றது. 

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் சிறைச்சாலை மருத்துவமனையில் ரம்ஸி ராசிக் தடுக்கி விழுந்துள்ளதோடு, அவரது ஒரு கை முறிவடைந்துள்ளது. இந்நிலையில், ஆரம்ப கட்ட மருத்துவ உதவிகள் சிறைச்சாலைகள் மருத்துவமனையில் வழங்கப்பட்டிருந்தாலும், மேலதிக மருத்துவ சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டியுள்ளது. 

ரம்ஸி ராசிக்கின் கையில் ஒரு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதாகவும், அதனை மேற்கொள்ள கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் கால தாமதங்கள் நிலவுவதாகவும் அவரது குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

ரம்ஸி ராசிக்கை சத்திர சிகிச்சைக்காக தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் உள்ள கால தாமதம் குறித்து வெலிகடை சிறைச்சாலை பொறுப்பதிகாரியிடம் வினவியபோது,

‘கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு கைதிகள் வாரத்தில் ஒரு நாளே அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனால், ஒவ்வொரு வாரமும் அதிகமான கைதிகள் காத்திருப்புப் பட்டியலில் இருக்கின்றனர். ரம்ஸி ராசிக்கை கடந்த செவ்வாயன்று (25) அழைத்துச் செல்ல இருந்தோம். எனினும், கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அன்று நேரப் பற்றாக்குறை ஏற்பட்டது. அடுத்த கிளினிக் தினத்தில் அவரை தேசிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுப்போம்’ என்றார். 

ரம்ஸி ராசிக் முகநூலில் மேற்கொண்ட பதிவொன்றை அடிப்படையாக வைத்தே, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். எதிர்வரும் 11ஆம் திகதிக்கு ஐந்து மாதங்களாகின்றன. 

ரம்ஸி ராசிக் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதி முதன்முதலாக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. இதுவரை காலமும் நீதவான் நீதிமன்றிலே வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன. சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் (ICCPR) சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு நீதவான் மூலம் பிணை வழங்க முடியாத நிலை தொடர்கின்றது. 

கடந்த செவ்வாய்க் கிழமை (25) இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் போது, ரம்ஸி ராசிக்குக்கு பிணை வழங்குவதற்கான ஆட்சேபனையை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெளியிட்டிருந்தார். அதனையடுத்து, இவ்வழக்கு தற்போது உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. 


ரம்ஸி ராசிக் கைதின் பின்னணி 


ரம்ஸி ராசிக் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவராவார். சமூக நீதி, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், இனவெறுப்பு செயற்பாடுகள் மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக முகநூலில்  கருத்துக்களைப் பதிவுசெய்து வந்தார். 

அவரது நடுநிலைமையான கருத்துகள் மற்றும் சரளமான சிங்கள மொழிப் பயன்பாடு காரணமாக அதிகமான மாற்று மத சகோதரர்களின் நன்மதிப்பையும் அவர் பெற்றிருந்தார். 

ரம்ஸி ராசிக் ஏப்ரல் மாதம் 02ஆம் திகதி தனது முகநூல் கணக்கில், ‘தமக்கு எதிரான அனைத்து இனவாத செயற்பாடுகளுக்கும் இலங்கை முஸ்லிம்கள் சிந்தனா ரீதியான போராட்டமொன்றை (கருத்து ரீதியான ஜிஹாத்) மேற்கொள்ள வேண்டும்’ என்று அழைப்பு விடுத்திருந்தார். 

மேற்படி பதிவைத் தொடர்ந்து, முகநூல் வழியாக அவருக்கு அச்சுறுத்தல்கள் வர ஆரம்பித்துள்ளன. எனவே அவர், ‘தான் ஜிஹாதுக்கு அழைப்பதாக பலர் தனது சொற்களை தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர்’ எனப் பதிவிட்டு, பாதுகாப்பு நோக்கங்களுக்காக முகநூல் பாவனையையும் இடைநிறுத்தியுள்ளார்.  

தான் எதிர்கொண்ட அச்சுறுத்தல் சம்பவம் குறித்து ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி பொலிஸாரிடம் முறைப்பாடொன்றையும் பதிவு செய்திருந்தார். 

அவருக்கு எதிரான அச்சுறுத்தல்களை விசாரித்து, அதுவிடயமாக பொலிஸார் நடவடிக்கைகள் எடுத்ததாகத் தெரியவில்லை. மாறாக, முகநூல் பதிவொன்றைக் காரணம் காட்டி, ரம்ஸி ராசிக் ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார். 

அவரது முகநூல் பதிவு குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் (ICCPR) சட்டத்தின் கீழே கைது இடம்பெற்றுள்ளது.   

ரம்ஸி ராசிக் கீழ்வாதம், சிறுநீரக பிரச்சினை, கால் புண்கள் போன்ற பல்வேறு உடலியல் ரீதியான நோய்களாலும் அவதிப்படுகின்றவர்.

குடும்பத்தார் அல்லது சட்டத்தரணிகளைச் சந்திப்பதற்கான அணுகலும் ரம்ஸி ராசிக்குக்கு மறுக்கப்பட்டே வந்தது.  

ரம்ஸி ராசிக் கருத்துச் சுதந்திரம், கருத்துத் தெரிவிக்கும் உரிமையின் கீழ் தெரிவித்த அமைதியான கருத்துக்களுக்காகவே கைதுசெய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக சிவில் சமூக மற்றும் மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. மேலும், அவரது விடுதலைக்காக பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு மனித உரிமை அமைப்புகளும் குரல்கொடுத்து வருகின்றன. ரம்ஸி ராசிக் விடயத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும். 

Previous articleஅகிம்சைப் போராட்டத்தில் உயிரிழந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியமைக்காக சிவாஜிலிங்கத்துக்கு விசாரணை
Next article‘முன்மொழியப்பட்டுள்ள 20ஆம் திருத்தத்தின் மூலம் கருத்து மற்றும் ஊடகச் சுதந்திரம் மீறப்படும் அபாயம்’ -சுதந்திர ஊடக இயக்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here