தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் இருக்க உயர்நீதிமன்றம் தீர்மானம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 6/2/2020 3:23:00 PM
தேர்தலுக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் இருக்க உயர்நீதிமன்றம் தீர்மானம்

பாராளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலையும் வலுவிழக்கச் செய்யக்கோரி உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்காமல் இருக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் 10 நாட்கள் பூராக இரு தரப்பு கருத்துக்கள் பெறப்பட்ட பின்னரே உயர்நீதிமன்றம் இந்த தீர்மானத்தை தற்போது அறிவித்தது. 
பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில் நீதியரசர்களான விஜித் மலல்கொட, புவனேக அளுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் பிரியந்த ஜயவர்தன ஆகியோர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையிலேயே இம்மனுக்கள் மீதான விசாரணைகள் நடைபெற்றன.

பாராளுமன்றத்தைக் கலைக்கும் வகையில் ஜனாதிபதி வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஜூன் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலையும் வலுவிழக்கச் செய்யக் கோரி உயர்நீதிமன்றில் 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.  

சட்டத்தரணி சரித குணரத்ன, ஊடகவியலாளர் விக்டர் ஐவன், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் தலைவர் பாக்கியசோதி சரவணமுத்து, சமகி ஜனபலவேகய பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, ஹெல உருமய தலைவர் பாட்டலி சம்பிக ரனவக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் உட்பட்டோரே மேற்படி மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

 

Share