நாட்டில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/22/2020 10:02:00 AM
நாட்டில் தொடர்ந்தும் சீரற்ற காலநிலை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 75 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் தென்மேற்குப் பகுதியிலும் மீண்டும் கடுமையான மழை வீழ்ச்சி தொடரும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஊடாக மணிக்கு 50 - 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் மின்னலினால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கு நடவடிக்கைகளை பொது மக்கள் மேற்கொள்ளுமாறும் குறித்த திணைக்களம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 10 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாயம் தொடர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தளை, இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருணாகல், கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு இன்று 2.30 மணிவரை குறித்த மண் சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி  இரத்தினபுரி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. 

மண் சரிவு ஆபத்து அதிகம் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக அந்த பிரதேசங்களில் இருந்து வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, எலபாத, கலவான மற்றும் கிரிஎல்ல ஆகிய பிரதேச செயலகங்களுக்கு இந்த அவதான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Share