ராஜிதவின் பிணை விவகாரம்; பிணை உத்தரவை இரத்து செய்த உயர் நீதிமன்றம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/13/2020 1:08:00 PM
ராஜிதவின் பிணை விவகாரம்; பிணை உத்தரவை இரத்து செய்த உயர் நீதிமன்றம்

வெள்ளை வேன் சம்பவம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி வழங்கப்பட்ட பிணை உத்தரவை உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பிணையில் விடுதலை செய்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலக்கரட்ன இன்று இரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் குறை இருப்பதாக கூறியே நீதிபதி அதனை இரத்துச் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனடிப்படையில் இது சம்பந்தமாக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்குமாறு நீதிபதி, கொழும்பு பிரதான நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கிய பிணையை செல்லுப்படியற்றது என அறிவிக்குமாறு கோரி சட்டமா அதிபர் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்த போதே மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய வெள்ளை வான் கடத்தல் தொடர்பான ஊடக சந்திப்பை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள ராஜித சேனாரத்னவுக்கு சட்டமா அதிபரின் எதிர்ப்பையும் மீறி கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி பிணை வழங்கியிருந்தது.

Aadhil Ali Sabry

Share