பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் மே 18 மற்றும் 19: தேர்தல் ஆணைக்குழு சார்பில் சட்டமா அதிபரும் இல்லை

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/11/2020 12:50:00 PM
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணைகள் மே 18 மற்றும் 19: தேர்தல் ஆணைக்குழு சார்பில் சட்டமா அதிபரும் இல்லை

பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு எடுத்த தீர்மானம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள 7 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகள் எதிர்வரும் திங்கட் கிழமை (18) மற்றும் செவ்வாய்க் கிழமை (19) ஆகிய தினங்களில் நடத்தப்படும் என்று உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

சட்டத்தரணி சரித்த குணரத்ன, சமகி ஜன பலவேக பொதுச் செயலாளர் ரஞ்ஜித் மத்தும பண்டார, சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் கலாநிதி பக்கியசோதி சரவணமுத்து உட்பட ஏழு பேர் மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த மனுக்கள் தொடர்பாக இடைநிலை மனுக்கள் சிலதும் இன்று முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றின் பிரதிவாதிகளாக தேர்தல் ஆணைக்குழு, அதன் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழு அல்லது அதன் உறுப்பினர்களுக்காக தம்மால் ஆஜராக முடியாதென்று சட்ட மா அதிபர் இன்று உயர் தீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

மேற்படி விடயங்களை கவனத்தில் கொண்ட பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதவான் எஸ் துரைராஜா மற்றும் நீதவான் மது பெர்னேண்டோ ஆகியோர் மனுக்களை மே மாதம் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானித்தனர்.

Share