குணசிங்ஹபுரயில் இருந்து தனிமைப்படுத்தலுக்காகக் கொண்டு சென்ற இருவர் உயிரிழப்பு

Staff Writer | Author . Translate to English or සිංහල 5/1/2020 7:58:00 PM
குணசிங்ஹபுரயில் இருந்து தனிமைப்படுத்தலுக்காகக் கொண்டு சென்ற இருவர் உயிரிழப்பு

குணசிங்ஹபுர பிரதேசத்தில் இருந்து தனிமைப்படுத்தலுக்காகக் கொண்டு செல்லப்பட்ட இருவர் இன்று (01) உயிரிழந்துள்ளனர். 

விமானப்படை ஊடகப்பேச்சாளர் துஷான் விஜேசிங்க Medialk.com இற்கு இதனை உறுதிப்படுத்தினார்.

குணசிங்ஹபுற பிரதேசத்தில் இருந்து மேற்படி குழுவினரை ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் விமானப்படையினர் பொறுப்பேற்று நடத்தி வரும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

அங்கிருந்த ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதோடு இரண்டாமவர் இன்று மாலை உயிரிழந்துள்ளார். 

அவர்கள் இருவரது சடலங்களும் தற்போது முல்லையாவெளி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இவர்களில் இன்று காலை உயிரிழந்தவர் எண்பதுக்கு மேற்பட்ட வயது மதிக்கத்தக்கவராவார். அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், இரண்டாமவரின் மாதிரிகளையும் பரிசோதனைக்காக அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு தேசிய அடையாள அட்டை இல்லாதமையினால் இவர்கள் குறித்த சரியான தகவல்கள் இல்லையெனவும் அவர்கள் வழங்கிய தகவல்கள் மாத்திரமே தம்மிடம் இருப்பதாகவும் விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

மரணத்தின் பின்னர் பெறப்படும் மாதிரிகளைப் பரிசோதிப்பதால் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்படுமா என்பது குறித்து வினவுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை தொடர்புகொள்ள முயற்சித்தாலும் அது பயனளிக்கவில்லை.

Share