கொழும்பு மாநகர சபை சுகாதார அதிகாரிகளுக்கு பாரபட்சம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 4/29/2020 12:16:00 PM
கொழும்பு மாநகர சபை சுகாதார அதிகாரிகளுக்கு பாரபட்சம்

கொழும்பு மாவட்ட இலக்கம் 02 ஏ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் மற்றும் 12 பொது சுகாதார பரிசோதகர்கள் இன்றிலிருந்து (29) தமது பொறுப்புக்களில் இருந்து விலகி, சுய தனிமைப்படுத்தலுக்குச் செல்வதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அறிவித்துள்ளனர்.

மேற்படி அதிகாரிகள் கொழும்பு 12 பண்டாரநாயக்க மாவத்தையில் கடமையில் ஈடுபட்டவர்களாவர். தீவிர நோய்ப் பரவல் அவதானமுள்ள பகுதியான பண்டாரநாயக்க மாவத்தையில் ஏப்ரல் மாதம் 15ஆம் திகதியில் இருந்து 26ஆம் திகதி வரை கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு உள்ளான 97 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை அடையாளம் காண்பதற்கும், மருத்துவமனையில் அனுமதிப்பதற்கும், நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை தனிமைப் படுத்தவும் கொழும்பு மாவட்ட இலக்கம் 02 ஏ சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தின் சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் பங்களிப்பு செய்திருந்தனர்.

இவ்வாறு பங்களிப்பு செய்த மருத்துவர் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தமக்கு கோவிட் 19 வைரஸ் தொற்றியுள்ளதா என்பதைப் பரிசோதிக்க பீசீஆர் பரிசோதனை நடத்துமாறு கேட்டுக் கொண்டிருந்தாலும், நோய் அறிகுறிகள் வெளிப்பட்ட பின்னரே பீசீஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியுமென்று கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார மருத்துவ அதிகாரிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தாம் அதிக அவதானமுள்ள பிரதேசத்தில் சேவையாற்றியுள்ளதால் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பது உறுதியாகாத நிலை காணப்படுவதாகவும், ஒருவேளை தமக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால் கொழும்பு 01, 11, 12, 13 மற்றும் 14 போன்ற பிரதேசங்கில் உள்ள 137,000 சேவை பெறுநர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த அவதானம் காரணமாகவே தாம் சுய தனிமைப் படுத்தலுக்குச் செல்லத் தீர்மானித்ததாகவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

குறித்த தீர்மானத்தை கொழும்பு மாநகர சபையின் பிரதான சுகாதார மருத்துவ அதிகாரிக்கு எழுத்துமூலம் வழங்கியுள்ளதாகவும் அதன் பிரதிகளை சுகாதார சேவைகள் பணியகம், ஜனாதிபதி செயலணி, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் போன்றவற்றக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

கொழும்பு மாநகர சபையின் பொது சகாதார பரிசோதகர் ஒருவர் இதற்கு முன்னர் கோவிட் 19 நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதும் உறுதியாகியுள்ளது.

Share