கொழும்பு ரோயல் கல்லூரி உட்பட சில பாடசாலைகளில் கொரோனா தொடர்பான பணிகள்

Staff Writer | Author . Translate to English or සිංහල 4/26/2020 3:53:00 PM
கொழும்பு ரோயல் கல்லூரி உட்பட சில பாடசாலைகளில் கொரோனா தொடர்பான பணிகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இராணுவ அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்காக கொழும்பிலுள்ள சில பாடசாலைகள் பயன்படுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

விடுமுறை சென்று பணிக்குத் திரும்பும் இராணுவ வீரர்கள் மற்றும் விடுமுறை செல்லவுள்ள இராணுவ வீரர்களைத் தங்க வைப்பதற்கான இடமாகவும்  இராணுவ அதிகாரிகளின் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாகவே கல்வி அதிகாரிகளிடம் இந்த பாடசாலைகள் கோரப்பட்டுள்ளன.

கொழும்பு ரோயல் கல்லூரி, தர்ஸ்டன் கல்லூரி, டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி, மஹாநாம கல்லூரி, பத்தரமுல்லை சுபுதி கல்லூரி மற்றும் கொட்டாஞ்சேனை மத்திய மகா வித்தியாலயம் உட்பட பிரதான பாடசாலைகளிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 

இவ்வாறான செயற்பாடுகளுக்கு பாடசாலைகள் கோரப்பட்டால் வழங்குமாறு கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு அறிவித்துள்ளது. 

இது தொட‌ர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த அவர்களை  Medialk.com தொடர்பு கொண்டு வினவிய போது, பொலிஸாரின் சில வேலைகளுக்காக 13 பாடசாலைகளைக் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார். 

கொழும்பு ரோயல் கல்லூரி, டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி மற்றும் தர்ஸ்டன் கல்லூரி ஆகியவற்றை இராணுவத்தின் செயற்பாடுகளுக்காக வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இந்த பாடசாலைகள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்று கல்வி அமைச்சின் செயலாளரிடம் வினவிய போது, அது குறித்து தனக்கு எதுவும் தெரியாதெனவும் தெரிவித்தார்.

Share