உயிரிழந்த கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றியிருக்கவில்லை

Staff Writer | Author . Translate to English or සිංහල 4/26/2020 1:15:00 PM
 உயிரிழந்த கடற்படை வீரருக்கு கொரோனா தொற்றியிருக்கவில்லை

கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த கடற்படை வீரரின் மரணத்துக்கு கொரோனா நோய்த் தொற்று காரணமல்ல என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்திருப்பது கடற்படை தலைமையகத்தில் பணிபுரிந்த கலபிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கட்டளைத் தளபதி தொடம்வல கெதர சுனில் பண்டார என்பவராகும். 

அவர் ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி சுகவீனமுற்ற நிலையில் கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கடற்படை வீரர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

கொரோனா நோய் தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும், கொரோனா தொற்றில்லை என்பது உறுதியாகியுள்ளது.

அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்து;ளார் என்று பரவி வரும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என்று கடற்படை தெரிவித்துள்ளது.

இந்த கடற்படை அதிகாரி கோவிட் 19 தொற்றுக்குள்ளாகி மரணிக்காவிட்டாலும், வெலிசரை கடற்படை முகாமில் தற்போது நிலவி வருகின்ற சிக்கல் மிக்க தன்மையால் இவரது இறுதிக் கிரிகைகளையும் கொரோனா தொற்றுக்குள்ளானோரது இறுதிக் கிரிகைகள் போன்று மேற்கொள்வதற்கு ராகம நீதிமன்ற மருத்துவ அதிகாரி பரிந்துரை வழங்கியுள்ளார். 

இதற்கமைய உயிரிழந்தவரின் இறுதிக் கிரிகைகள் கடற்படையின் இறுதி மரியாதையுடன் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update : 11.00

வெலிசரை கடற்படை முகாமில் சிகிச்சை பெற்று வந்த கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கடற்படை ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உயிரிழந்த கடற்படை வீரருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்று இருக்கவில்லை என்று உறுதியாகியுள்ளது. எனினும் இரண்டாவது பரிசோதனை ஒன்றும் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்றும் கடற்படை ஊடகப் பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார். 

கடற்படை வீரர் உயிரிழந்ததற்கான காரணத்தை வெளியிடுவதற்கு அவசரப்படத் தேவையில்லை என்றும் மரணம் குறித்த அனைத்து பரிசோதனை முடிவுகளும் வெளிவந்த பின்னர் மேலதிக தகவல்களை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். 

குறித்த படை வீரர் கடந்த சில நாட்களாக வெலிசரை கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

அவர் வேறு ஏதாவது நோய் காரணமாகவே உயிரிழந்திருப்பார் என்று சந்தேகிப்பதாகவும் கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share