தேரரின் சட்டவிரோத கோரிக்கையை நிராகரித்ததால் தாக்கப்பட்ட உயர் பொலிஸ் அதிகாரி

Staff Writer | Author . Translate to English or සිංහල 20. 04. 2020 | 7.25pm
தேரரின் சட்டவிரோத கோரிக்கையை நிராகரித்ததால் தாக்கப்பட்ட உயர் பொலிஸ் அதிகாரி

சட்டவிரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்ட ஒருவரைக் கைதுசெய்யாமல் இருக்கும்படி தேரரொருவர் முன்வைத்த கோரிக்கையை நிராகரித்த வாறியபொல பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பொலிஸ் நிலையத்திலேயே தாக்கப்பட்டுள்ளார்.

வாறியபொல பொலிஸ் நிலையத்தின் சட்டவிதோத நடவடிக்கைகளை சுற்றிவளைக்கும் பிரிவுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட இந்தப் பொலிஸ் பரிசோதகரை (19ஆம் திகதி இரவு) சட்டவிரோதமாக மதுபானம் தயாரிக்கும் ஒருவர் தொடர்புகொண்டு, தன்னைக் கைதுசெய்ய வேண்டாமென கோரியுள்ளார். 

குறித்த சட்டவிரோத விடயம் மற்றும் தொலைபேசி அழைப்பு குறித்து பொலிஸ் பரிசோதகர் ஏனைய பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதோடு, முறைப்பாடொன்றையும் பதிவுசெய்துள்ளார். 20ஆம் திகதி காலை பிரதேசத்தின் தேரர் ஒருவர் தொடர்புகொண்டு குறித்த முறைப்பாட்டை நீக்கிக்கொள்ளுமாறும், அவரைக் கைதுசெய்ய வேண்டாமென்றும் அச்சுறுத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தேரரும், சட்டவிரோத மதுபான தயாரிப்பாளர் மற்றும் சிலர் பொலிஸ் நிலையத்துக்கு வந்து குறித்த பொலிஸ் பரிசோதகரின் சட்டையைப் பிடித்து இழுத்து தாக்கியதாகவும் பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறித்த சம்பவத்தில் அச்சுறுத்தல் இருப்பதால் தாக்குதல் நடத்திய நபரை மாத்திரமே பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தேரர் இதுவரையில் கைதுசெய்யப்படவில்லை. 

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் ஜாலிய சேனாரத்னவைத் தொடர்புகொண்டு கேட்டபோது, ‘பொலிஸ் நிலையத்தினுள் பொலிஸ் அதிகாரி ஒருவரின் சட்டையைப் பிடித்து இழுத்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அது தொடர்பான பரிசோதனைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். ஏனையோரைக் கைதுசெய்வதா இல்லையா என்பது குறித்து பரிசோதனைகளின் பின்னரே தெரியவரும்’ என்றார்.

Share