நாட்டில் கொரோனா தொற்று அவதானம் முழுமையாக நீங்கவில்லை- அரசாங்கம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 18. 04. 2020 | 7.26pm
நாட்டில் கொரோனா தொற்று அவதானம் முழுமையாக நீங்கவில்லை- அரசாங்கம்

நாட்டில் கொரோனா நோய்த் தொற்று அவதானம் முழுமையாக நீங்கவில்லை என்பதால் வைரஸ் தொற்றுக்கு இடமளிக்காத விதத்தில் சுகாதார ஆலோசனைகளைப் பேணி பொறுப்பாகவும் பொறுமையாகவும் செயற்படுமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்கின்றது.

அரச, தனியார் அலுவலகங்கள் மற்றும் போக்குவரத்து சேவைகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டல்களை வழங்கி வெளியிட்ட ஊடக அறிவித்தலிலேயே அரசாங்கம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. 

அரசாங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் மற்றும் சினிமா நிலையங்கள் மறு அறிவித்தல் வரும் வரை திறக்கப்பட மாட்டாது. 

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதும் அரச திணைக்களங்கள், வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் வழமை போன்று செயற்படும். 

கொழும்பு மாவட்ட அரச அலுவலகங்களில் மூன்றிலொரு பகுதி ஊழியர்கள் சேவைக்குச் சமூகமளிக்க வேண்டும்.

ஏனைய மாவட்டங்களின் அரச அலுவலகங்களில் 50 வீதமான ஊழியர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும். 

அனைத்து அரச அலுவலகங்களிலும் சேவைக்கு சமூகமளிக்காத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும். 

மூன்றிலொரு பகுதியினர் அல்லது 50 வீதமானோர் அரச அலுவலகங்களில் சுழற்சி அடிப்படையில் சேவைக்கு சமூகமளிக்க வேண்டும். 

அலுவலகங்கள் இயங்கும் போது கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் அலுவலகங்களை காலை 10.00 மணிக்கு ஆரம்பிப்பதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சேவைக்கு செல்வோருக்கான போக்குவரத்து ஏற்பாடுகளை இலங்கைப் போக்குவரத்து சபை மற்றும் புகையிரத சேவைகள் ஆகியன மேற்கொள்ளவுள்ளன. 

அனைத்து விதமான வைபவங்கள், மதம் சார் பயணம், சுற்றுலா, பெரஹரை, கூட்டங்கள் போன்றனவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share