நைஜீரியாவில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களைவிட பாதுகாப்பு துறையின் கெடுபிடிகளால் மரணித்தவர்களே அதிகம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 17. 04. 2020 | 6.24am
நைஜீரியாவில் கொரோனா தொற்றால் மரணித்தவர்களைவிட  பாதுகாப்பு துறையின் கெடுபிடிகளால் மரணித்தவர்களே அதிகம்

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் காரணமாக நைஜீரியாவில் 18 பேர் உயிரிழந்துள்ளதோடு, அது கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் தொகையைவிட அதிகமானதாகும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

நைஜீரியாவில் 36 பிராந்தியங்களில் தலைநகர் அபுஜா உட்பட 24 பிராந்தியங்களில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக 105 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேற்படி முறைப்பாடுகளில் சட்ட விரோத கொலைச் சம்பவங்கள் 8 தொடர்பான தகவல்கள் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

வடமேற்கு கடுணா பிராந்தியத்தின் பாதுகாப்பு தரப்பினரால் குறித்த 8 பேரும் கொல்லப்பட்டுள்ளதாக அபுஜா அல்ஜெஸீரா செய்தியாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் 7 பேரின் கொலைச் சம்பங்கள் குறித்து பொலிஸாருக்கு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, இருவரின் கொலைச் சம்பவங்களோடு இராணுவத்தினர் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. லொக்டவ்ன் நடவடிக்கைகளை பிரதேச ரீதியாக அமுல்படுத்தும் குழுவொன்றும் ஒருவரது கொலையோடு தொடர்புபட்டுள்ளது. 

நைஜீரியாவில் கொரோனா நோய்த் தொற்றால் 12 பேர் உயிரிழந்துள்ளதோடு, 400 பேரளவிலேயே நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 

எனினும், பாதுகாப்புத் துறையினரின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

Share