ரூபா 5,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தில் இருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலகிக்கொள்ளத் தீர்மானம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 16. 04. 2020 | 2.24pm
ரூபா 5,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தில் இருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலகிக்கொள்ளத் தீர்மானம்

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக நாளாந்த வருமானத்தை இழந்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூபா 5,000 வழங்கும் திட்டத்தில் இருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலகிக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பாக அமைச்சின் செயலாளருக்கும் அறிவித்துள்ளதாக ஒன்றிணைந்த கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் ஆகியன தெரிவித்துள்ளன. 

பொதுத் தேர்தல் ஒன்று நெருங்கியுள்ள வேளையில் இவ்வாறான வேலைத் திட்டங்கள் மூலம் அரசியல் இலாபமீட்ட முயற்சிப்பதன் காரணமாகவே இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டதாக அந்த சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

நிதியுதவி என்ற அடிப்படையில் குறித்த பணம் வழங்கப்பட வேண்டுமாயின், அதற்கான பட்டியல் ஆரம்ப கட்டத்திலேயே கிராம உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்டுள்ளது. அவற்றை பொருட்படுத்தாது சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் மூலம் மீண்டும் விண்ணப்பம் கோரி, பணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 

அது முற்றுமுழுதான அரசியல் செயற்பாடாக மாறியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

நாட்டில் அனர்த்த நிலைமைகள் ஏற்படும் போதெல்லாம் முதலிடம் எடுத்து செயற்படும் கிராம உத்தியோகத்தர்களை பொருட்படுத்தாது சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் மூலம் இந்த பணத்தை வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானம் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் வழங்கிய பட்டியலைப் பொருட்படுத்தாமை என்ற காரணங்களின் அடிப்படையிலேயே இவ்வாறு ரூபா 5,000 நிதியுதவி வழங்கும் திட்டத்தில் இருந்து கிராம உத்தியோகத்தர்கள் விலகிக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share