உயிர்த்த ஞாயிறு சந்தேக நபருடன் பேராயர் இருப்பது தவறு- ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர்

Staff Writer | Author . Translate to English or සිංහල 13. 04. 2020 | 10.07am
உயிர்த்த ஞாயிறு சந்தேக நபருடன் பேராயர் இருப்பது தவறு- ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலை தடுத்துக் கொள்ள முடியாது போனமை குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஒருவருடன் கொழும்பு கார்தினல் பேராயர் மெல்கம் ரஞ்சித் புகைப்படம் எடுத்துக்கொண்டமை சாட்சிகளுக்கு பெரும் அழுத்தமாகும் என்று ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிரிவர்தன தெரிவித்துள்ளார். 

ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித சிரிவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பரிசோதனைகள் தொடர்பான முக்கிய சாட்சிகளில் ஒருவராவார்.

அவர் இது தொடர்பாகத் தெரிவித்து, கொழும்பு கார்தினல் பேராயர் மெல்கம் ரஞ்சித்துக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் கீழே காணப்படுகின்றது.

2020 ஏப்ரல் 12

கௌரவத்துக்குரிய கொழும்பு கார்தினல் மெல்கம் ரஞ்சித் அவர்களே,

முழு உலகமும் கொரோனா தொற்று நோய் பரவலுக்குள்ளாகி அவதியுறுவதோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு மத உணர்வுகளைக் கொண்ட இந்த அழகிய இலங்கைத் தீவு முகங்கொடுத்துள்ள கவலைக்குரிய நிலைமையில் நான் இந்தக் கடிதத்தை எழுதுகின்றேன். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முக்கியமான சாட்சியாக நான் முன்னிலையானது, இந்த நாட்டில் 40 வருட காலமாக கலங்கமற்ற பொலிஸ் சேவையில் இருந்த ஒரு உண்மையான இலங்கையனாகவேயாகும். 

2019ஆம் ஆண்டு நான் ஓய்வுபெறும் வரையில் உப பொலிஸ் பரிசோதகர் பதவியில் இருந்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வரை நான்கு தசாப்தங்கள் சேவையாற்றியுள்ளேன். 

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தில் கட்டுவாபிட்டிய குண்டுத் தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் … ஐ நீங்கள் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் அண்மையில் பதிவிடப்பட்டிருந்தது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி அல்லது 9ஆம் திகதி அவர் தாக்குதல் குறித்து அறிந்து வைத்திருந்ததோடு, பொது மக்கள் உயிரிழப்பதை அல்லது ஏப்ரல் 21 தாக்குதலைத் தடுப்பதற்கு அவர் எதுவுமே செய்யாது அமைதியாக இருந்தார். 

உண்மையில், இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்ட பின்னணி தொடர்பாக விளக்கமளிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் நான் சுய விருப்பத்துடன் ஆஜரானதோடு, சேவையில் உள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் … எதிராக பொலிஸாரும் பரிசோதனையொன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே அவர் உங்களோடு உரையாடுவது அவரது பிழைகளை மறைத்துக்கொள்வதற்காகும். 

அப்பாவி பொது மக்கள் கொலை செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒருவருடன் நீங்கள் உரையாடலில் இருக்கும் போது, இந்நாட்டு கிறிஸ்தவர்கள் எந்த நிலைப்பாட்டில் இருப்பது?

நான் இவ்விடயம் குறித்து சாட்சியளித்துள்ளதால், புகைப்படமெடுத்துக்கொண்ட சம்பவம் என்னை அதிர்ச்சிக்குட்படுத்தியது… அவரது தற்போதைய பதவியை உங்களுடன் நெருங்குவதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார். அத்தோடு, அவர் திட்டமிட்டு பொது மக்களைத் திசை திருப்புவதோடு, பொலிஸ் மற்றும் சிவில் சாட்சியாளர்களையும் தைரியமிழக்கச் செய்கிறார்.

நான் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் … அவரது பொறுப்பை முறையாகச் செய்யாததால், நாட்டின் இறைமைக்கும் பொலிஸாருக்கும் பாரிய தாக்கமொன்று ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படையாகவே குற்றம் சாட்டியுள்ளேன்.

இந்த நிலையில், ஒரு குற்றவாளியுடன் நீங்கள் இருப்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு எந்த விதத்திலும் நீதியைப் பெற்றுக்கொடுக்காது.

உங்கள் முன்னிலையில் இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டது குறித்து என் உள்ளம் பதட்டமடைந்துள்ளது.

எமது இந்த அழகிய நாட்டின் கிறிஸ்தவ சமூகத்தை தவிக்கவைத்த இந்த துயரத்தால் நான் வருந்துகின்றேன்.

இந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் உங்களது ஆரோக்கியத்திற்கு பிரார்த்திக்கிறேன். 

பாலித சிரிவர்தன-

ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ் மா அதிபர்  

Share