மருத்துவ தர்மத்தை மீறிய டாக்டர் வசந்தவுக்கு எதிராக சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ சபையில் முறைப்பாடுகள் - இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 11. 04. 2020 | 3.44pm
மருத்துவ தர்மத்தை மீறிய டாக்டர் வசந்தவுக்கு எதிராக சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவ சபையில் முறைப்பாடுகள் - இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம்

சமூக வலைத்தளங்களில் இனவெறுப்பும் குரோதமும் ஏற்படும் விதத்திலான பதிவுகளை வெளியிட்டு, மருத்துவ தர்மத்தை மீறிய மகரகம அபேக்ஷா மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் வசந்த திசாநாயக்கவுக்கு எதிராக இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருத்துவ சபையில் முறைப்பாடுகளைச் செய்துள்ளது. 

மகரகம அபேக்ஷா மருத்துவமனையின் பணிப்பாளர் டாக்டர் வசந்த திசாநாயக்க ‘முஸ்லிம் ஒருவர் கொரோனா நோயறிகுறிகளை மறைத்துக் கொண்டு அபேக்ஷா மருத்துவமனைக்கு உள்நுழைய முயற்சித்ததாகவும், இவ்வாறான நடமாடும் வெடிகுண்டுகளுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்’ என்று முகநூலில் பதிவிட்டிருந்ததற்கு எதிராகவே மேற்படி  முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின் தனித்துவத்தை வெளிப்படுத்தக் கூடாதென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் டாக்டர் வசந்தவின் செயற்பாடு ஒரு தனிமனிதன், இனத்தை அவமதிப்பதாகவும் இனவெறுப்பை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளதாக இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

டாக்டர் வசந்தவுக்கு எதிராக இலங்கை மருத்துவ சபையில் மேற்கொண்டுள்ள முறைப்பாட்டில், மருத்துவ தர்மத்தை கடுமையாக மீறல், நோயாளியின் தனித்துவத்தை வெளிப்படுத்தல், இனக் குரோதத்தை ஏற்படுத்தல், சமூகத்தை தப்பாக வழிநடத்தல் மற்றும் ஒரு தனிமனிதனை முறையற்ற விதத்தில் குற்றவாளியாக்கல் போன்ற மருத்துவ தர்மத்துக்கும் விதிமுறைகளுக்கும் எதிரான அம்சங்கள் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. 

மேற்படி இரு முறைப்பாடுகளின் பிரதிகள் சுகாதார திணைக்களம், அரச பொதுச் சேவைகள் ஆணைக்குழு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றுக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Share