எபோலா குறித்த இறுதி அறிக்கைக்கு முன்னர் இன்னொரு மரணம்

Staff Writer | Author . Translate to English or සිංහල 11. 04. 2020 | 8.13am
எபோலா குறித்த இறுதி அறிக்கைக்கு முன்னர் இன்னொரு மரணம்

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா நோய்த் தொற்றுக்குள்ளான ஒருவர் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கொங்கோவில் பரவிய மிகப் பெரிய தொற்றுநோயான எபோலா நிறைவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட இருந்த நிலையிலேயே நேற்று (10) இந்த விடயத்தை உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்தது.

கொங்கோ பெனி மாநிலத்தில் பதிவான எபோலா தொற்றுக்குள்ளானவர் கடந்த வியாழக் கிழமை உயிரிழந்துள்ளார். 

‘அடிப்படைத் தகவல்களில் தெரிய வருவதாவது பெனி மாநிலத்தில் பதிவாகி உயிரிழந்த எபோலா நோய்த் தொற்றுக்குள்ளானவர் 26 வயதுடையவராவார்’ என்று தொற்று நோய் கட்டுப்பாட்டுக்கு நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளது.

‘எமது குழு மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் ஒன்றிணைந்து பரிசோதனைகளை விரிவு படுத்துவதற்கும் பொது மக்கள் சுகாதார செயற்பாடுகளை தீவிரமாக செயற்படுத்துவதற்கும் தயாராகி வருகின்றது’ என்றும் எபோலா தொற்று கட்டுப்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. 

கடந்த பெப்ரவரி மாதம் 17ஆம் திகதியில் இருந்து நேற்று (10) வெள்ளிக் கிழமை வரை எபோலா நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் பதிவாகியிருக்கவில்லை. 

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பத்தில் இருந்து இதுவரை கொங்கோவில் 2200க்கும் அதிகமானோரின் மரணத்துக்குக் காரணமான எபோலா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்துள்ளதாக கொங்கோ அரசு நாளை அறிவிக்க இருந்தது.

‘கடந்த 52 நாட்களாக எபோலா தொற்றக்குள்ளானவர்கள் பதிவாகாத காரணத்தினால் எபோலா நோய்த் தொற்று முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட இருந்தது. இந்நிலையிலேயே இன்னுமொரு நோயாளி கண்டறியப்பட்டுள்ளார். நாம் இன்னும் பல நோயாளிகள் கண்டறியப்படலாம் என்று எதிர்பார்க்கின்றோம்’ என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
 
Share