இலங்கையில் கொரோனா மரண வீதம் 3.7 ஆகும்: அது அதிகூடிய அளவாகும்- டாக்டர் பிரசன்ன குரே

Staff Writer | Author . Translate to English or සිංහල 10. 04. 2020 | 9.07am
இலங்கையில் கொரோனா மரண வீதம் 3.7 ஆகும்: அது அதிகூடிய அளவாகும்- டாக்டர் பிரசன்ன குரே

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 3.7 வீதமானோர் மரணித்துள்ளார்கள் என்றும், தெற்காசியாவில் உள்ள ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது, இது மிக அதிகளவாகும் என்று டாக்டர் பிரசன்ன குரே தெரிவித்தார். 

இலங்கையில் உள்ள கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள் அவசரமாக கண்டறியப்பட வேண்டும். அதற்கான பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்விடயத்தில் அரசாங்கம் பொது மக்களின் நலன் குறித்து சிந்தித்து கருமமாற்ற வேண்டும் என்றும், பொது மக்களின் நலனைக் கருத்திற் கொண்டு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

medialk.com செய்தி இணையத்தளத்துடன் நேர்காணலொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

கேள்வி: தொற்று நோய் என்று அழைக்கப்படுபவை எவை?

பதில்: தொற்று நோய் என்பது ஒரு சிறு காலத்தில் சாதாரண நிலைமையில் எதிர்பார்க்கும் நோய்த் தொற்றாளர்களைவிட, அதிகமானோர் நோய்த் தொற்றுக்குள்ளாகுவதேயாகும். 

கோவிட் 19 கொரோனா நோய் குறித்து பார்க்கும் போது, இலங்கை மேற்படி தொற்று நோய் வரைவிலக்கணத்தில் இருந்து வேறுபடுகின்றது. காரணம், அது புதியதொரு நோய் நிலைமையாகும். இலங்கையில் இதற்கு முன்னர் கண்டறியப்படாத, வெளிநாட்டிலிருந்து இங்கு பரவிய நோய்த் தொற்று ஒன்றாகும். இந்த நோய் இலங்கையில் தீவரமாக பரவும் அபாயம் இருந்தது. இலங்கையில் முதலாவது நோய்த் தொற்றுக்குள்ளானவர் இனங்காணப்பட்டது முதல் இந்த நோய் தீவிரமாக பரவும் அவதானம் காணப்பட்டது. 

கேள்வி: இலங்கையில் இவ்வாறானதொரு தொற்று நோய் நிலைமை ஏற்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவல்ல தானே?

பதில்: ஆம், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து பார்த்தால், 1918- 19 இடைப்பட்ட காலத்தில் உலகத்தில் பரவிய ஸ்பெனிஷ் ப்லூ நோய்த் தொற்று காரணமாக இலங்கையிலும் 300,000 க்கு அதிகமானோர் (சனத் தொகையில் 6.7) உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது.

1934ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பத்தில் இருந்து 1935ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலத்தில் பரவிய மலேரியா நோய்த் தொற்று காரணமாக இலங்கையில் 92,500 பேரளவில் உயிரிழந்துள்ளமைக்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. அதன் பின்னரும் 1967- 68, 1974- 75, 1982- 84, 1986- 87 மற்றும் 1991- 2001 (வடக்கு கிழக்கு பிரதேசங்களில்) மலேரியா தொற்று காணப்பட்டது. அப்போது நுளம்புக் கொல்லி மெலனின் பாவனையால் மலேரியா பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. 

1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்ட ஜெபனீஸ் B என்சபலைடிஸ் தொற்று நோயும் இலங்கையில் இதற்கு முன்னரும் தொற்று நோய்கள் பரவியுள்ளமைக்கான உதாரணமாகும். 

1980ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் இருந்து இன்று வரையும் காணப்படும் டெங்கு நோயும் நுளம்பினால் பரவும் ஒரு தொற்று நோயாகும். 

கேள்வி: இவ்வாறான தொற்று நோய் பரவல் நிலையில் பொறுப்புவாய்ந்தவர்கள் யாவர்?

பதில்: இந்த விடயத்தில் நாட்டு பொது மக்கள் தொடக்கம் அரசாங்கத்தின் தலைவர் வரை அனைவருக்கும் பொறுப்புக்கள் காணப்படுகின்றன. நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் பெரும் பொறுப்பு சுகாதார திணைக்களத்துக்குக் காணப்படுகின்றது. சுகாதார திணைக்களத்தின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களைக் கடைபிடிப்பது நாட்டு மக்களுக்குள்ள பொறுப்பாகும். தொற்று நோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான, சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வது சுகாதார அமைச்சின் பொறுப்பாகும். அதற்குத் தலைமை தாங்குவது, ஒதுக்கீடுகளை மேற்கொள்வது, சட்ட ஏற்பாடுகளைச் செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும். 

கேள்வி: கோவிட் 19 தொற்று நோய் இலங்கையினுள் வருவதைத் தடுக்க எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம்?

பதில்: இலங்கையின் முதலாவது கோவிட் 19 நோய்த் தொற்றுக்குள்ளானவர் 2020 ஜனவரி மாதம் 27ஆம் திகதி இனங்காணப்பட்டார். அது சீனப் பெண்ணொருவர், விமான நிலையத்திலாகும். அவ்வாறாயின், சுகாதாரத் துறை அப்போதில் இருந்தே இந்த விடயத்தில் தயாராக இருந்துள்ளது.

அதன் பின்னர் மார்ச் 6ஆம் திகதியே நோய்த் தொற்றுக்குள்ளான ஒருவர் கண்டறியப்பட்டார்.
இதற்கிடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய நடவடிக்கைகள் பலதும் காணப்பட்டன. 

விசேடமாக ஏனைய உலக நாடுகளில் எவ்வாறு கொரோனா பரவல் நடைபெறுகின்றது என்பதை ஆராய்ந்திருக்கலாம். அதற்கேற்ப, சுற்றுலாப் பயணிகளின் வருகையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கலாம். எனினும், எமக்குக் கிடைக்கும் தகவல்களுக்கேற்ப, அவ்வாறு நடைபெறவில்லை. விசேடமாக, சுற்றுலாத் துறை இந்தக் காலகட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதும் தெரியவருகின்றது. அது உலகில் பரவும் கொரோனாவை வைத்து எமது நாட்டில் இலாபமீட்டப் பார்த்தனர். இதனை மிகப் பாதிப்புகள் நிறைந்த செயற்பாடாகவே நான் காண்கின்றேன். எமது முதலாவது நோயாளர் சுற்றுலா வழிகாட்டி ஒருவரே. அவரோடு இருந்த சுற்றுலாப் பயணிகள் மூலமாகவே அவருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா தீவிரமாக பரவிவந்த போதும் இலங்கை விமானப் போக்குவரத்தை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அவ்வாறும் நடைபெறவில்லை. ஆரம்ப காலத்தில் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளும் முறையாக நடைபெறவில்லை. உதாரணமாக, இத்தாலி, ஈரானில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டாலும் நோய்த் தொற்று அதிகமாகக் காணப்பட்ட சீனாவில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. 

அதேபோன்ற விமான நிலையத்துடன் தொடர்புடைய குறைபாடுகளை நான் புதிதாகக் கூறவேண்டியதில்லை. சிலர் விமான நிலையத்தில் இருந்து இரகசியமாகச் சென்றிருந்தால், அது நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். காரணம், விமானம் நிலையமென்பது பஸ் நிலையம் போன்றோ புகையிரத நிலையம் போன்றதோ அல்ல. 

கேள்வி: தற்போதுள்ள நோயாளர்களின் அளவைப் பார்க்கும் போது, எவ்வாறான நிலையொன்று உருவாகவுள்ளது?

பதில்: உண்மையான நோய்த் தன்மைகளைக் கண்டறிய முடியாமல் போயுள்ளது. அதன் பின்விளைவே உயிரிழந்தவர்களின் வீதம் அதிகரித்துள்ளது. இந்த பிராந்திய நாடுகளோடு ஒப்பிடும் போது 3.7 வீத மரணம் என்பது அதிகமாகும். உதாரணமாக, இந்தியாவில் 3 வீத மரணமும் பாகிஸ்தானில் 1.4 வீத மரணமும் நேபாளில் 0 வீதமாகவும் காணப்படுகின்றது. குறித்த நாடுகளோடு ஒப்பிடும் போது எமது சுகாதார சேவை தரமானதாகும். எனினும், நாம் அதிகமாக பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். 

கேள்வி: இந்நிலைக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்க ஒரு நாடாக எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்?

பதில்: பரிசோதனைகள் மேற்கொள்ளும் அளவைக் கூட்டி, நாட்டில் உண்மையான நோயாளர்களை இனங்கண்டுகொள்வதாகும். 

இன்று இது சுகாதார பிரச்சினையைத் தாண்டிய ஒரு சமூக பிரச்சினையாக மாறியுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். பாரிய பொருளாதார சிக்கலொன்றுக்கும் இலங்கை முகங்கொடுத்துள்ளது. குறைந்த வருமானமுடையோர் மற்றும் நாளாந்த வேலைகளில் ஈடுபட்டோர் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் பெரிதாக வெற்றியளிக்கவில்லை. கீழ் மட்ட மக்களைச் சென்றடையும் வகையில் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். 

ஊரடங்குச் சட்டத்தை தொடர்ந்தும் நடத்திச் செல்ல முடியாது. பல நாடுகளிலும் போன்று லொக்டவுன் முறைக்குச் செல்வதே வெற்றியளிக்கும். கொரோனாவைத் தொடர்ந்து வரவுள்ள சுகாதார, சமூக பிரச்சினைகளுக்கு மத்திய கால மற்றும் நீண்ட கால தீர்வுத் திட்டங்கள் குறித்து சிந்திக்கப்பட வேண்டும். 

கேள்வி: இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கம், எதிர்க்கட்சி மற்றும் பொது மக்களின் பொறுப்பென்ன?

பதில்: எதிர்க்கட்சி மற்றும் பொது மக்கள் அரசாங்கம் கொரோனா தடுப்பில் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பதாகும். அரசாங்கத்தின் பொறுப்பு பொது மக்கள் நலன் குறித்து சிந்தித்து தீர்மானங்கள் மேற்கொள்வதாகும்.
 
Share